You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஈழ ஆர்வலர்கள் கைதும், குண்டர் சட்டப் பயன்பாடும்
கடந்த வாரம் ஈழத் தமிழர்களுக்காக நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்காக சென்னை மெரினா கடற்கரையில் கூடிய மே 17 அமைப்பினர் நால்வர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பது, சட்டத்திற்கு எதிரானது என்கிறார்கள் மனித உரிமை ஆர்வலர்கள்.
நினைவேந்தல் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை மீறி மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் செய்ய முயன்ற திருமுருகன் காந்தி உள்ளிட்ட நான்கு பேர் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டிருப்பதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கைதானவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரியும், குண்டர் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய சட்ட வல்லுநர்கள் குண்டர் தடுப்பு சட்டம் பெரும்பாலும் அரசுக்கு சாதமாகவே பயன்படுத்தப்படுகிறது என்கிறார்கள்.
குண்டர் தடுப்பு சட்டம் 1982 சொல்வது என்ன?
போதைப்பொருள் குற்றவாளிகள், வன வளங்களை அழிப்பதில் ஈடுபடுவோர், மணல் திருட்டு, திருட்டு விசிடி மற்றும் நிலஅபகரிப்பு ஆகிய குற்றங்களை செய்பவர்களை கைது செய்து, நீண்ட கால விசாரணை நடத்தவும், அவர்கள் வெளியே சென்று பொது மக்களுக்கு அச்சம் ஏற்படுத்துவதை தடுக்கவே குண்டர் தடுப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது என்று கூறப்பட்டது.
1982ல் தமிழகத்தில் கொண்டுவரப்பட்ட சட்டத்தில் 2014ல் இணைய வழியில் குற்றம் புரிவோர் மற்றும் பாலியல் வன்முறையில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்யவும் குண்டர் தடுப்பு சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.
ஆனால் சமீபத்தில் அரசுக்கு எதிரான கருத்துக்களை பேசுபவர்களை ஒடுக்கவே குண்டர் தடுப்பு சட்டம் பயன்படுத்தப்படுகிறது என்கிறார்கள் மனித உரிமை ஆர்வலர்கள்.
தமிழகத்தில் குண்டர் தடுப்பு சட்டம் மூலம் பதிவாகும் பெரும்பாலான வழக்குகள் அரசியல் ரீதியாக புனையப்பட்ட வழக்குகளாக உள்ளன என்கிறார் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன்.
தனது நீதிமன்றத்தில், தான் கையாண்ட குண்டர் தடுப்பு சட்ட வழக்கு ஒன்றை நினைவுகூர்ந்த ஹரி பரந்தாமன், ''குண்டர் தடுப்பு சட்டத்தில் சீமான் மீது பதியப்பட்ட வழக்கை விசாரித்தபோது, அவர் பொது கூட்டங்களில் அரசுக்கு எதிராக பேசிய காரணங்களுக்காக அவர் மீது அரசு குற்றம் சாட்டியது என்பதை நானும் அந்த அமர்வில் இருந்த எலிபி தர்மாராவ் கண்டறிந்தோம். அரசுக்கு எதிரான பார்வையை ஒருவர் கொண்டிருப்பது அரசியலமைப்பில் அவருக்கு அளிக்கப்பட்டுள்ள சுதந்திரம். இந்த வழக்கில் முகாந்திரம் இல்லை என்று கூறி வழக்கில் சீமானை விடுதலை செய்தோம்,'' என்றார் ஹரிபரந்தாமன்.
அவர் மேலும் குண்டர் தடுப்பு சட்டம் ஜனநாயகத்திற்கு எதிரானது என்றார்.
'' அதிக எண்ணிக்கையில் குற்றவழக்குகளில் சிக்கியுள்ளவர்கள், தொழில்முறை திருடர்கள், போதைப்பொருள் கடத்துபவர்களை விசாரிக்காமல், ஒரு ஆண்டுக்கு விடுதலை செய்யாமல் விசாரணை நடத்தலாம் என்ற குண்டர் தடுப்பு சட்டம் கூறுகிறது. ஒருவர் தன்னுடைய நிலையை விளக்க வாய்ப்பு தராமல், நேரடியாக தண்டனை வழக்கும் விதத்தில் இந்தச் சட்டம் அமைந்துள்ளது,'' என்றார் அவர்.
குண்டர் சட்டத்தை தவறாக பயன்படுத்துவது வழக்கமாகிவிட்டது
திருமுருகன் காந்தி உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளது மட்டுமல்ல, அவர்கள் நடத்தவிருந்த கூட்டத்திற்கு தடை விதித்ததே சட்டத்திற்கு புறம்பானது என்கிறார் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சுதா ராமலிங்கம்.
''போராட்டங்களை நடத்த தடை விதிப்பதே தவறான நடவடிக்கை. இந்திய குடிமகனுக்குக் கொடுக்கப்பட்டுள்ள கூட்டம் கூடுவதற்கு, தங்களது கருத்தை பொது வெளியில் பேசுவதற்கு என கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை வாயிலாகத்தான் மே 17 அமைப்பினர் கூடினார்கள். அதற்கு தடை விதிப்பது தேவையற்றது,'' என்கிறார்.
''குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்றவர்கள் மிகக் குறைவு. ஏனெனில் அரசுக்கு எதிராக பேசுபவர்கள் மீது பாயும் வழக்காகத்தான் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பெரும்பாலான வழக்குகள் பதியப்படுகின்றன , '' என்றார் சுதா.
இந்த விவகாரம் தொடர்பாக சென்னை காவல்துறை ஆணையர் ஏ கே விஸ்வநாதனை தொடர்பு கொண்டு கேட்டபோது மே 17 அமைப்பினர் மீது ஏற்கனவே உள்ள வழக்குகளை ஆலோசித்து பார்க்கும்போது, அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வது சரி என்று கருதியதாகத் தெரிவித்தார்.
திருமுருகன் மீதுள்ள 17 வழக்குகள் என்ன விதமானவை, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய ஏற்றவையா என்று கேட்டபோது, தற்போது நேரம் இல்லாதலால் அதை பற்றி விரிவாக பேச இலயவில்லை என்றும் காவல்துறை பதிவு செய்துள்ள இந்த வழக்கு பொருத்தமானதுதான் என்று குறிப்பிட்டார்.
இதையும் படிக்கலாம்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்