மாட்டிறைச்சி தடைக்கு எதிர்ப்பு : தமிழ்நாடு, கேரளாவில் மாட்டிறைச்சி விழாக்கள்

கால்நடைகளை இறைச்சிக்காக விற்பதைத் தடை செய்துள்ள மத்திய அரசின் புதிய விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழகம் மற்றும் கேரளாவில்மாட்டிறைச்சி உண்ணும் விழாக்கள் நடத்தப்படுகின்றன.

''இறைச்சி உண்டு எதிர்ப்பை பதியவைப்போம்''

சென்னையில் ஐ ஐ டி மெட்ராஸ் வளாகத்தில் பெரியார் அம்பேத்கர் வாசிப்பு வட்டம் என்ற மாணவர் அமைப்பு ஞாயிற்றுக் கிழமை இரவு மாட்டு இறைச்சி உண்டு, மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய விதிகள் பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சியையும் நடத்தியது என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிபிசி தமிழிடம் பேசிய மாணவர் கே.சுவாமிநாதன் கலந்துகொண்ட மாணவர்கள் மிருகவதை தடைச்சட்டம் (1960) தற்போது விவசாயிகளுக்குப் பிரச்சனை ஏற்படுத்தும் சட்டமாக மாறியுள்ளது என்று குறிப்பிட்டார்.

'' எங்களில் பலர் விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். சிறுவயதில் இருந்து மாடு மற்றும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டவர்கள். தற்போது மத்திய அரசு இறைச்சிக்காக கால்நடைகளை விற்கக்கூடாது என்றால், அதற்கான செலவை யார் வழங்குவார்கள் என்று கூறவேண்டும்?,'' என்றார் சுவாமிநாதன்.

மேலும் ஒரு குடிமகன் இறைச்சிக்காக கால்நடையை விற்கமுடியவில்லை என்றால், இன்னும் சிறிது காலத்தில், வெளிநாட்டு இறைச்சி நிறுவனங்களிடம் மட்டுமே இறைச்சி கிடைக்கும் என்ற நிலை வரும் என்றார் அவர்.

மாட்டை வெட்டியதால் கேரளாவில் கைது

சேலம் மாவட்டத்தை சேர்ந்த சுற்றுச்சூழல்வாதியான பியூஸ் மனுஷ் கால்நடையை பாதுகாப்பதாக தெரிவித்துள்ள அரசு விவசாயிகளை பாதிப்பதாக கூறுகிறார்.

''என்னிடம் 25 எருமைகள் உள்ளன. எனக்கு தேவைப்பட்டால், என்னுடைய கால்நடையை விற்க அரசு எவ்வாறு தடைவிதிக்க முடியும்? நான் ஒரு கால்நடையை வாங்கிய ஆறுமாதங்களில், அது உடல்நலக் கோளாறால் இறந்துவிட்டால், அதற்கு என்னை பொறுப்பாகிவிடுவார்கள்,'' என்கிறார் பியூஸ் மனுஷ்.

பாரதீய ஜனதா அரசு மாடுகளை விட்டு வெறும் ரசாயனங்களை வைத்து விவசாயம் நடத்துவதற்கு விவசாயிகளை தள்ளுவதாக அவர் குற்றம்சாட்டினார்.

கேரளாவில் ஆளும் மார்க்ஸிஸ்ட் கட்சி முதல்வர் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்புகளை ஏற்கனவே வெளிப்படுத்தியிருக்கிறார் . மேலும் மாணவ அமைப்புகள் மாட்டு இறைச்சி உண்ணும் போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் இளைஞர்அணியினர் பொது வெளியில் ஒரு மாட்டை வெட்டி தங்களது போராட்டத்தை நடத்தியதாக வெளியான செய்திகளை அடுத்து காங்கிஸ் கட்சியின் துணைதலைவர் ராகுல் காந்தி அந்த நபர்களை கண்டித்துள்ளார். அவர்களை காங்கிரஸ் கட்சி ஆதரிக்காது என்றும் கூறியுள்ளார். அந்த நபர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

சமூக வலைத்தளங்களில் தனிப்பட்ட நபர்கள் மத்திய அரசின் தடைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தங்களது பேஸ்புக் மற்றும் டிவிட்டர் தளங்களில், மாட்டு இறைச்சி உண்பது,அவர்கள் வீட்டில் சமைத்த இறைச்சி உணவை படம் எடுத்துப் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிக்கலாம்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்