You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஐஐடியில் தாக்குதலுக்கு உள்ளான மாணவர் மீது தாக்குதலில் ஈடுபட்ட மாணவர் புகார்
சென்னை ஐஐடியில் மாட்டிறைச்சி சாப்பிட்ட மாணவர் ஒருவர் நேற்று தாக்கப்பட்ட நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட மாணவரும் போலீசில் புகார் செய்துள்ளார்.
இதையடுத்து, தாக்குதலுக்கு உள்ளான மாணவர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சூரஜ் (36) ஐஐடியில் ஏரோஸ்பேஸ் பொறியியலில் ஆராய்ச்சி மாணவராக இருந்துவருகிறார். அவர் செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஐஐடி வளாகத்தில் உள்ள 'ஜெயின் மெஸ்ஸில்' தனது நண்பருடன் சாப்பிடுவதற்காக அமர்ந்திருந்தபோது, அருகில் அமர்ந்திருந்த பிகாரைச் சேர்ந்த கடல்சார் பொறியியல் படிக்கும் மணீஷ் என்ற மாணவர் சூரஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.
"மாட்டு இறைச்சியைச் சாப்பிட்டுவிட்டுவந்து, எப்படி சைவ உணவை மட்டும் சாப்பிடும் இந்த ஜெயின் மெஸ்ஸில் நீ சாப்பிடலாம் என்று கேட்டார் அவர். பிறகு, பின்னந்தலையில் அவரை அடித்தார். முகத்தில் குத்தினார்கள். இதில் அவரது வலதுகண் கடுமையாக பாதிக்கப்பட்டது" என சூரஜின் நண்பரான மனோஜ் பிபிசியிடம் தெரிவித்தார்.
சூரஜைத் தாக்கியதாக குற்றம் சாட்டப்படும் மாணவர் வலதுசாரி அமைப்பைச் சேர்ந்தவர் என மனோஜ் கூறினார்.
இந்த நிலையில், குற்றச்சாட்டுக்கு உள்ளான மூன்றாம் ஆண்டு மாணவரான மணிஷ் குமார் சிங் (22), தான் தாக்கப்பட்டதாக சூரஜ் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, சூரஜ் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அதே நேரத்தில், மணிஷ் குமார் சிங் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாகக் கூறி அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டம்
இதனிடையே, சூரஜ் தாக்கப்பட்டதைக் கண்டித்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் ஐஐடி வளாகம் எதிரே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தாக்குதலில் ஈடுபட்ட மாணவர் மணிஷ் குமார் சிங்கை கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். தாக்குதலில் ஈடுபட்டவர்களை வளாகத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.
அதே நேரத்தில், மாணவர் சூரஜ் மீது பொய் வழக்குப் போடப்பட்டிருப்பதாகவும் அதை திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி கோஷமிட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுக் கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தனர்.
ஐஐடி வளாகத்தைச் சுற்றி கடும் போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே உள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.
தொடர்புடைய செய்தி:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்