அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்ட 8 எம்எல்ஏக்கள் கோரிக்கை விடுத்ததால் பரபரப்பு
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று திங்கள்கிழமை நேரில் சந்தித்த அதிமுக (அம்மா) அணியை சேர்ந்த 8 சட்டமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
அதிமுகவின் (அம்மா) அணியில் இடம்பெற்றுள்ள முன்னாள் அமைச்சர்கள் தோப்பு வெங்கடாசலம், செந்தில் பாலாஜி தலைமையிலான 8 சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்த அதிமுகவின் அரசாங்கம் வரும் 23-ஆம் தேதியுடன் ஓராண்டு நிறைவு செய்யவுள்ள நிலையில், 8 சட்டமன்ற உறுப்பினர்கள் விடுத்த இந்த கோரிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
அதிமுக (அம்மா) அணியின் சட்டமன்ற உறுப்பினர்களான தோப்பு வெங்கடாசலம், செந்தில் பாலாஜி, பழனியப்பன், முருகன், பன்னீர்செல்வம் மற்றும் மோகன் உள்ளிட்ட 11 உறுப்பினர்கள் அவ்வப்போது ரகசிய கூட்டம் நடத்துவதாக ஊடக செய்திகள் தெரிவித்து வந்தன.

அதேபோல் அதிமுக (அம்மா) அணியில் இடம்பெற்றுள்ள வேறு சில சட்டமன்ற உறுப்பினர்களும் கடந்த மாதத்தில் தனித்தனி குழுக்களாக கூட்டங்களை நடத்தியதாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், சென்னையில் இன்று தலைமைச்செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த இந்த 8 சட்டமன்ற உறுப்பினர்களும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்ட கோரியுள்ளார்கள்.

ஏற்கனவே அதிமுக (புரட்சி தலைவி அம்மா) அணியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மீண்டும் ஓரணியில் இணைவதற்கான வாய்ப்பு மிக குறைவாக உள்ள சூழலில், அதிமுக (அம்மா) அணியிலிருந்து மேலும் சில சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியேறினால் அது அரசாங்கத்திற்கு ஆபத்தாக அமையும் என்றே கருதப்படுகிறது.
அதிமுக அம்மா அணியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என கோரும் தோப்பு வெங்கடாசலம், செந்தில் பாலாஜி தலைமையிலான அணியினர், எந்தவிதமான விவகாரங்களில் பேச்சு வார்த்தை நடத்த இந்த கூட்டத்தை கூட்ட எண்ணுகின்றனர் என்ற தகவல் இன்னமும் வெளியாகவில்லை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












