`பிராண்ட் மருந்து பரிந்துரைகளில் கொள்ளை லாபமீட்டும் பல மருத்துவர்கள்`
ஒரு நாள் உணவகத்திற்கு செல்வதற்கோ, கேளிக்கை விடுதிக்கு செல்வதற்கோ சுமார் ரூ,2,000 செலவானால், அதை ஏற்றுக்கொள்ளும் நபராக நீங்கள்? அதே தொகை மாதமொன்றுக்கு மருந்து வாங்க செலவானால்? மதுரையைச் சேர்ந்த தனலட்சுமிக்கு அதுதான் நடந்தது.

பட மூலாதாரம், Getty Images
50 வயதான தனலட்சுமி சிறுநீரக பிரச்சனை காரணமாக கடந்த பத்து ஆண்டுகளாக மருந்துகள் எடுத்துவருகிறார். கூலி தொழிலாளியான தனலட்சுமிக்கு ஒரு நாள் மாத்திரைகள் வாங்க ரூ.78 தேவை அதாவது மாதம் ரூ.2340 கண்டிப்பாக தேவை.
மருந்து வாங்க அவர் செலவிட்ட பணம், அதற்காக வாங்கிய கடன் என பெருஞ்சுமையை அவர் சுமக்கவேண்டியிருந்தது. தனலட்சுமியின் தேவைக்கான பிராண்ட் மருந்தோ, பிராண்ட் பெயர் இல்லாமல் மருந்து கலவையின் ரசாயன பெயரைக் கொண்ட ஜெனரிக் என்று அறியப்படும் மருந்து, மதுரை அரசு மருத்துவமனையில் இல்லாததால், தனலட்சுமி கடன் வாங்கி மருந்து வாங்கவேண்டிய சூழல் ஏற்பட்டது என அவர் தெரிவித்தார்.
அரசு மருத்துவ வசதிகளுக்காக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் பல பொது நல வழக்குகளை தொடுத்துவரும் ஆனந்தராஜ், தனலட்சுமியின் நிலையை வழக்காக பதிவுசெய்தார்.
''தனலட்சுமிக்கு தேவையான மருந்துகளை அரசு வழங்கவேண்டும் என்று உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் எல்லா அரசு மருத்துவமனைகளும், மருந்துகளின் இருப்பு பற்றி இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படவேண்டும் என்றும் கூறியது. மருத்துவர்கள் தனலட்சுமிக்கு தனியார் பிராண்ட் மருந்துகளை பரிந்துரை செய்ததால் அவரால் வாங்க முடியவில்லை. ஜெனரிக் மருந்துகள் பரிந்துரை செய்திருந்தால் அவரின் சேமிப்பு கரைந்திருக்காது,'' என்கிறார் பிபிசி தமிழிடம் பேசிய ஆனந்தராஜ்.
சமீபத்தில், ஜெனரிக் மருந்துகளை மட்டுமே மருத்துவர்கள் பரிந்துரை செய்யவேண்டும், அதற்கான சட்டவரைவு விரைவில் கொண்டுவரப்படும் என்று பிரதமர் நரேந்திர மோதி அறிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
பலர் மருந்துகள் வாங்க பணம் செலவு செய்வதால், வீடு கட்டுவது அல்லது பெண்களுக்கு திருமணம் செய்ய முடியாமல் போகும் சூழல் கூட ஏற்படுகிறது என மோதி தெரிவித்தார்.
பிரதமரின் பேச்சை கூலித் தொழிலாளி தனலட்சுமியின் நிலையுடன் பொருத்திப்பார்க்க முடிகிறது என்கிறார் ஜெனரிக் மருந்துகள் தொடர்பாக புத்தகம் எழுதியுள்ள மருத்துவர் புகழேந்தி. ''பிரதமரின் முடிவேடுத்தால் ஒரே நாளில் இந்த நிலையை மாற்றலாம்,'' என்றார்.
''ஜெனரிக் மருந்துகளை மட்டும் பரிந்துரை செய்யவேண்டும் என்பது மருத்துவர்கள் பின்பற்ற வேண்டிய விதியாக மட்டுமே தற்போதுவரை உள்ளது. சட்டமாக மாற்றினால் நல்ல விஷயம்தான். தனியார் பிராண்ட் மருந்துகளை பரிந்துரை செய்வதன் மூலம் பல மருத்துவர்கள் மருந்து நிறுவனங்களுடன் கைகோர்த்து கொள்ளை லாபம் ஈட்டுகிறார்கள்,'' என்கிறார் புகழேந்தி.
''உதாரணமாக, சிறுநீரக பாதை நோய் தொற்றை தடுக்கும் ஊசி மருந்தான அமிகாஸின் என்ற பிராண்ட் மருந்து ஊசி வெறும் ரூ.13.75 ரூபாய்க்கு மருத்துவர்களுக்கு கிடைக்கிறது. அது மருத்துவர்களின் பரிந்துரையில் மருந்துக் கடையில் ஒரு நோயாளிக்கு ரூ.87க்கு விற்கப்படுகிறது,''என்கிறார்.
''பிராண்ட் மருந்துகளுடன் ஒப்பிட்டால் ஜெனரிக் மருந்துகள், எந்தவிதத்திலும் தரம் குறைந்தவை இல்லை. தனியார் மருந்துகளை தங்களது விற்பனையை அதிகரிப்பதற்காக, அதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்தலாம்,''என்று மருத்துவர் புகழேந்தி கூறுகிறார்.
''தரக்குறைவு நேர்ந்தால் அதற்கு அரசு அதிகாரிகள் முறையாக சோதனை செய்யாததுதான் காரணமாக இருக்கும்,'' என்கிறார் தமிழக அரசின் மருந்து கட்டுப்பாடு துறையின் முன்னாள் இயக்குனர் பாஸ்கரன்.

பட மூலாதாரம், Getty Images
ஜெனரிக் மருந்துகள் விலைகுறைவாக இருப்பதை விவரிக்கும் பாஸ்கரன், ''பிராண்ட் மருந்துகள் விலையில் 30-50% பிராண்ட் பெயரை விளம்பரப்படுத்துவது, விற்பனைக்காக எடுத்துச்செல்வது, மருந்து விற்பனையாளர்களுக்கான செலவு என பலவற்றும் அடங்கும், அது ஜெனரிக் மருந்தில் இல்லை,''என்றார்.
பிரதமர் மோதி அறிவித்தபடி ஜெனரிக் மருந்துகளை மட்டும் மருத்துவர்கள் பரிந்துரைக்க சட்டம் கொண்டுவந்தால் மகிழ்ச்சியடைய பல தனலட்சுமிகள் உள்ளனர் என்கிறார் சமூக செயற்பாட்டாளர் ஆனந்தராஜ்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்













