You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜெயலலிதாவுக்கு விஷம் வைக்கப்பட்டதாக மருத்துவர்கள் கூறவில்லை: அ.தி.மு.க.
ஜெயலலிதா கீழே தள்ளிவிடப்பட்டதாகவும் அவருக்கு விஷம் வைக்கப்பட்டதாகவும் அ.தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகர் பி.ஹெச். பாண்டியன் கூறியதற்கு அ.தி.மு.க மறுப்புத் தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை காலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பி.ஹெச். பாண்டியன், ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பியிருந்தார்.
இதையடுத்து அ.தி.மு.கவின் தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கே.ஏ. செங்கோட்டையன், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் பி.ஹெச். பாண்டியன் கூறிய கருத்துக்களுக்கு மறுப்புத் தெரிவித்தனர்.
ஜெயலலிதாவின் மரணம் குறித்து சிலர் வதந்திகளைப் பரப்ப முயற்சிப்பதாக குற்றம் சாட்டிய பண்ருட்டி ராமச்சந்திரன், சசிகலா ஒருமனதாகவே சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
எம்.ஜி.ஆர். மறைந்த பிறகு 1989ல் கட்சி இரண்டாக உடைந்திருந்த நிலையில் கட்சியில் பெரும் குழப்பம் ஏற்பட்டதற்கு பி.ஹெச். பாண்டியன்தான் காரணம் என்றும், அதற்குப் பிறகு ஜெயலலிதா தலைமையிலான அணியும் ஜானகி அணியும் இணைவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது, அதில் ஒரு பங்களிப்பும் செலுத்தாதவர் பாண்டியன் என கே.ஏ. செங்கோட்டையன் கூறினார்.
ஜெயலலிதா சிகிச்சை விவகாரத்தில் நம்பிக்கையை ஏற்படுத்துவாரா சசிகலா?
1996ல் ஜெயலலிதா பதவியிழந்த பிறகு, அவர் மீது வழக்குத் தொடர்வதற்கான ஏற்பாடுகளை தி.மு.கவோடு இணைந்து செய்தவர் பாண்டியன் என்றும், அதற்கான தரவுகளை அவர்தான் திரட்டியளித்தார் என்றும் செங்கோட்டையன் குற்றம் சாட்டினார்.
அதற்குப் பிறகு, ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை விலக்கிக்கொள்ள வேண்டுமென வழக்குத் தொடர்ந்தார் என்றும் இருந்தபோதும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேருக்கு ஜெயலலிதா பதவியளித்திருந்தார் என செங்கோட்டையன் சுட்டிக்காட்டினார்.
செப்டம்பர் 22ஆம் தேதி கீழே தள்ளிவிடப்பட்டதாலேயே ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டார் என்ற குற்றச்சாட்டுக்கு என்ன ஆதாரம் என செங்கோட்டையன் கேள்வியெழுப்பினர்.
ஜெயலலிதாவுக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக பாண்டியன் குற்றம் சாட்டியிருப்பது கூறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியபோது, அதனை மருத்துவர்கள்தான் உறுதிசெய்ய வேண்டும். ஆனால், அவர்கள் அப்படிக் கூறவில்லை என பண்ருட்டி ராமச்சந்திரன் சுட்டிக்காட்டினார்.
கட்சியும் ஆட்சியும் ஒருவரிடத்திலேயே இருக்க வேண்டும் என்பதற்காகவே சசிகலா முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டதில் எந்த விதிமீறலும் இல்லையென்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.
சசிகலாவுக்கு எதிராக மக்கள் கருத்து இருப்பதாக கூற முடியாது என்றும் இன்று பதவியேற்பு விழா நடப்பதாக தாங்கள் கூறவில்லை என்றும் அவர் கூறினார்.
பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவருக்கு முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்துவைக்க வேண்டியது அரசியல்சாசனக் கடமை என்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார்.
தற்போதைய முதலமைச்சரான ஓ. பன்னீர்செல்வம் நன்றாகச் செயல்படுவதாக மக்கள் கூறினாலும், மற்றொருவருக்கு வாய்ப்புக் கிடைத்தால்தான் அவர் நன்றாகச் செயல்படுகிறாரா என்பது தெரியவரும்; ஆகவே புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார்.
சசிகலாவின் குடும்பத்தினர் ஆட்சியில் தலையிடுவார்கள் என்று தொடர்ந்து சிலர் கூறிவருவதாகவும், அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என்றும் முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமியின் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லையென்றும் அ.தி.மு.க. தலைவர்கள் தெரிவித்தனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் கருத்து தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்