ஜெயலலிதா: சிகிச்சையில் பிரச்சனைகள் இல்லை என்கிறது மருத்துவர் குழு

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் லண்டனை சேர்ந்த சிறப்பு மருத்துவ நிபுணர் ரிச்சர்ட் பீல் மற்றும் மருத்துவர்கள் பாபு, பாலாஜி மற்றும் சுதா சேஷய்யன் ஆகியோர் விளக்கமளித்தனர் .

அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும், அவர் சிகிச்சைக்கு நல்ல முறையில் முன்னேறி வந்தார் என்றும், ஆனால் அவருக்கு இறுதியாக ஏற்பட்ட மாரடைப்பு அவரது முடிவுக்குக் காரணமாக அமைந்தது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

சென்னையில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில், ஜெயலலிதாவின் உடல்நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து மருத்துவர்கள் கூறுகையில் , ''ஆரம்பத்தில் காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். செப்டம்பர் 22-ஆம் தேதியன்று இரவு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்'' என்று தெரிவித்தனர்.

''மேலும், ஜெயலலிதா செப்சிஸ் என்ற தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்த பாதிப்பால் அவரது இருதயம் பாதிக்கபட்டு, சிறுநீர் தொற்று பாதிப்பும் ஏற்பட்டு இருந்தது. தொடர்ந்து பல்வேறு காரணங்களால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது'' என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கைரேகை பெறப்பட்டது ஏன்?

'இது மட்டுமல்லாமல், ஜெயலலிதாவுக்கு சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தமும் இருந்தது என்று தெரிவித்த மருத்துவர்கள், இடைத்தேர்தலில் நின்ற அதிமுக வேட்பாளர்களின் மனுவில் கட்சியின் சார்பாக நியமனமளித்து ஜெயலலிதாவிடம் கைரேகை பெறப்பட்டது குறித்து கூறுகையில், ''தேர்தல் விண்ணப்பத்தில் அவரது கையெழுத்தை பெற வேண்டிய காலத்தில், அவரது கையில் வீக்கம் இருந்தது. மேலும் அவருக்கு மருந்து ஏற்றப்பட்டு கொண்டிருந்தது. அதனால் கைரேகை பெறப்பட்டது. அப்போது அவர் சுயநினைவோடு தான் இருந்தார்'' என்று குறிப்பிட்டனர்.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா தொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்தார், தயிர் சாதம் சாப்பிட்டு கொண்டிருந்தார் என்று கூறப்படுவது எல்லாமே உண்மை தான் என்று மருத்துவர் பாபு தெரிவித்தார்.

புகைப்படங்கள் வெளியிடப்படாதது ஏன்?

சிகிச்சை அளிக்கப்பட்ட காலத்தில் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் வெளியிடப்படாததற்கான காரணம் குறித்து பேசுகையில், '' உடல்நலக்குறைவால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஒரு நோயாளியின் புகைப்படங்கள் வெளியிடப்படுவது நடைமுறை அல்ல. அவரது தனிப்பட்ட சுதந்திரத்தை நாம் மதிக்க வேண்டும்'' என்று லண்டன் சிறப்பு மருத்துவர் பீல் தெரிவித்தார்.

மேலும் மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த அறையில் சி.சி.டிவி கேமராக்கள் இல்லை என்று கூறிய ரிச்சர்ட் பீல், இருந்தி்ருந்தாலும் புகைப்படங்களைோ அல்லது காணொளி்யையோ வெளியிடுவது பொருத்தமாக இருந்திருக்காது என்றார்.

அவரை லண்டனுக்கு எடுத்துச் செல்வது குறித்து பரிசீலிக்கப்பட்டதா என்று கேட்டதற்கு , இது போன்ற சூழ்நிலைகளில் அவ்வாறு தொலைதூரத்துக்கு எடுத்துச் செல்வதன் லாபங்கள் மற்றும் ஆபத்துகள் குறித்து கவனமாக ஆராய்ந்து முடிவுகள் எடுக்கப்படும், இந்த சூழ்நிலையிலும் அது போல முதலில் ஆராய்ந்துதான் அவரை லண்டனுக்கு எடுத்துச் செல்லவேண்டாம் என்ற முடிவு எடுக்கப்பட்டது என்றார்.

ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல புரளிகள் தொடர்ந்ததாலும், சிறப்பு மருத்துவ நிபுணர் ரிச்சர்ட் பீல் தற்போது சென்னை வந்ததாலும் தற்போது பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தினோம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு தமிழக அரசின் ஏற்பட்டால் நடந்ததே தவிர, அப்போலோ மருத்துவமனை சார்பாக நடத்தப்படவில்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மருத்துவ செலவு

சிசிடிவி காணொளிகளை வெளியிட்டிருக்கலாமே என்ற கேள்விக்கு, தீவிர சிகிச்சை பிரிவில் பாதிக்கப்பட்டுள்ள ஒரு நோயாளியை புகைப்படம் எடுப்பதோ அல்லது அவர்களுடைய காணொளியை வெளியிடுவதோ எப்படி நியாயமாக இருக்கும் என்று ரிச்சர்ட் பீல் கருத்து தெரிவித்தார்.

ஜெயலலிதாவிடம் நான் இறுதியாக பேசியது எப்போது என்று தனக்கு ஞாபகம் இல்லை என்றும், ஆனால் அவரிடம் பல விஷயங்கள் குறித்து பேசியதாகவும் ரிச்சர்ட் பீல் பேட்டியளித்துள்ளார்.

மேலும், ஜெயலலிதாவின் கால்கள் அகற்றப்பட்டவில்லை என்றும், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் பதப்பட்டதாகவும், அவர் ஒரு முக்கிய பிரமுகர் என்பதால் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அந்த முறை கடைபிடிக்கப்பட்டதாகவும், ஜெயலலிதா உடலை பதப்படுத்திய மருத்துவர் சுதா சேஷய்யன் விளக்கம் அளித்தார்.

ஜெயலலிதாவின் சிகிச்சைக்காக மொத்தம் 5.5 கோடி ரூபாய் செலவு ஆனது என்றும் அதற்கான பில் ஜெயலலிதாவின் குடும்பத்தாரிடம் தரப்பட்டுள்ளது என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்