ஜல்லிக்கட்டு தடை: தமிழகமெங்கும் போராட்டங்கள்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்ட வேண்டும் என கோரி பல்வேறு மாணவர் அமைப்புகளும், விவசாய அமைப்புகளும், அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரி தமிழக முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்த இளைஞர்கள்

பட மூலாதாரம், ABDUL GHANI

படக்குறிப்பு, ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரி தமிழக முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்த இளைஞர்கள்

மாநிலம் முழுவதும் திமுக கட்சியின் சார்பாக வெள்ளியன்று அனைத்து மாவட்ட தலைமையகங்களிலும் ஜல்லிக்கட்டத்திற்கு ஆதரவாக போராட்டம் நடத்தப்பட்டது.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தைத் தலைமையேற்று நடத்திய திமுகவின் செயல் தலைவர் ஸ்டாலின், '''தமிழகத்தின் பண்பாட்டுச் சின்னமாக விளங்கும் ஜல்லிக்கட்டை நடத்த அவசரச் சட்டம் கொண்டு வரவில்லை என்றால் மத்திய, மாநில அரசுகளை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என எச்சரிக்கிறேன்," என்று குறிப்பிட்டார்.

பேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆப் மூலம் திறந்த இளைஞர்கள் சென்னை மெரீனா கடற்கரையில் வெள்ளி அன்று காலை மனித சங்கிலி போராட்டத்திற்காக பலரும் அணிவகுத்து நின்றனர்.

ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரி கை கோர்த்த இளைஞர்கள்

பட மூலாதாரம், SAVE JALLIKATTU

சேலத்தில் கூலமேடு, தம்மம்பட்டி ஆகிய கிராமங்களில் கடந்த இரண்டு நாட்களாக மக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியும், தங்களது கண்களில் கருப்பு துணியை கட்டியும் பீட்டா நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

பீட்டா அமைப்பை தடை செய்யக் கோரி மதுரை மாவட்டத்தில் மாணவர்கள் பலரும் கடந்த ஒரு வார காலமாக ஊர்வலம், பேரணி நடத்திவருகின்றனர்.

தமிழகத்தில் நடத்தப்பட்ட வேண்டும் என கோரி திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஆர்ப்பாட்டம்

பட மூலாதாரம், DMK

படக்குறிப்பு, தமிழகத்தில் நடத்தப்பட்ட வேண்டும் என கோரி திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஆர்ப்பாட்டம்

ஜல்லிக்கட்டு தொடர்பாக ஆவணப்படம் தயாரித்துள்ள மாணவர் ஜெயகார்த்தி, மதுரையில் போராட்டத்தை ஒருங்கிணைந்தாகவும், தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெறும் என்பதில் தான் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார். ''உச்ச நீதிமன்றத்திற்காகக் காத்திருக்கும் வேளையில் அது எங்களுக்கு சாதகமாகத்தான் இருக்கும் என்பதில் உறுதியோடு இருக்கிறோம். இல்லாவிட்டாலும், போட்டியை நடத்துவதில் நாங்கள் உறுதியோடு உள்ளோம். இதில் மாணவர்களுக்கு எந்தப் பிரச்சனை ஏற்பட்டாலும் அதற்கு மத்திய, மாநில அரசும், உச்ச நீதி மன்றமும் தான் பொறுப்பு,'' என்கிறார் ஜெயகார்த்தி.

சட்டமன்ற உறுப்பினர்களான கருணாஸ், தனியரசு மற்றும் தமீமுன் அன்சாரி ஆகியோரும் மதுரையில் போராட்டத்தை நடத்தினர்.

இதற்கிடையில், இளைஞர் திரளாகக் கூடி மதுரை கரிசல் குளம் கிராமத்தில் எட்டு காளைகளை கொண்டு வந்து ஜல்லிக்கட்டை நடத்தினர். அவர்கள் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

தடையை மீறி நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் கடலூரில் வியாழனன்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்தினர். இவர்கள் மீது காவல் துறையினர் புகார் பதிவு செய்தனர்.

திரை துறையைச் சேர்ந்த நடிகர்கள் கமலஹாசன், விஜய் சேதுபதி, டி.ராஜேந்தர், அவரது மகன் சிம்பு, இயக்குநர்கள் கரு.பழனியப்பன், பாரதிராஜா,ராம் என பலரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் ஜல்லிக்கட்டு தொடர்பாக வெளியிட்டுள்ள ஒரு பாடல் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகிறது.

ஜல்லிக்கட்டு

பட மூலாதாரம், Getty Images

தெரு நாய்களைக் காப்பாற்ற வேண்டும் என்று பேசிவரும் நடிகை த்ரிஷா பீட்டாவின் விளம்பரங்களில் தோன்றுவதால், சிவகங்கையில் அவரது படப்பிடிப்பு நடைபெற்ற இடத்தில் பலர் போராட்டம் நடத்தியதால், படப்பிடிப்பு தடைப்பட்டது.

பீட்டா அமைப்பின் இந்திய பிரிவின் ட்விட்டர் தளத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படக் கூடாது என்று கருத்துகள் பதியப்பட்டு வருகின்றன. அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்தத் தளத்தில் பலர் செய்திகளை பதிவு செய்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

எங்களது செய்திகளை முகநூலில் படித்து கருத்துக்களை தெரிவிக்க :

பிபிசி தமிழ் பேஸ்புக் பிபிசி தமிழ் பேஸ்புக்

ட்விட்டரில் எங்களை பின்தொடர : பிபிசி தமிழ் டிவிட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யூ ட்யூபில் காண ; பிபிசி தமிழ் யு டியூப்