தலைமைச் செயலகத்திலும் வருமான வரித்துறை சோதனை
தமிழக தலைமைச் செயலர் ராம மோகன ராவின் இல்லத்தில் நடந்துவரும் சோதனைகளின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் வருமான வரித்துறை தற்போது சோதனை நடத்தி வருகிறது.

பிற்பகல் 2.15 மணியளவில், தலைமைச் செயலகத்திற்கு 3 கார்களில் வந்த அதிகாரிகள், ராம மோகன ராவின் அறை, அவரது உதவியாளரின் அறை ஆகியவற்றில் சோதனைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
அதிகாரிகளுக்கு பாதுகாப்பாக மத்திய துணை ராணுவப் படையினரும் தலைமைச் செயலகத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, இன்று (புதன்கிழமை)காலை முதல் தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.
அவரது வீடு, அவரது மகனது வீடு, அலுவலகங்கள், உறவினரது வீடுகள் என சென்னை, சித்தூர், பெங்களூர் நகரங்களில் 13 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
ராம மோகன ராவ் கடந்த ஜூன் மாதம் தமிழக தலைமைச் செயலராக பதவியேற்றார்.








