வைகோ தடுக்கப்பட்டதற்கு மு.க ஸ்டாலின் வருத்தம்
கருணாநிதியின் உடல் நலம் விசாரிக்க சென்ற வைகோவை தி.மு.க தொண்டர்கள் தடுத்து நிறுத்திய சம்பவத்திற்கு ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், DIBYANGSHU SARKAR
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், கலைஞரின் உடல் நலம் விசாரிக்க வந்த மதிமுக பொது செயலாளர் வைகோ அவர்களை தடுத்து நிறுத்தியதை தான் கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் தான் இல்லாத நேரத்தில் வைகோ அவர்களுக்கு நேர்ந்த இந்த விரும்பத்தகாத சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
திமுகவிற்கு எதிரான பிரசாரங்களில் யார் ஈடுபட்டு வந்ததாலும் கட்சித் தொண்டர்கள் அவர்களுக்கு எதிராக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது தலைவர் கலைஞர் அவர்களுக்கோ, எனக்கோ எக்காலத்திலும் உடன்பாடானது அல்ல என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கட்சிக்கு எதிரான பிரசாரங்களை அரசியல் ரீதியாக ஜனநாயக முறையில் எதிர்கொள்ளும் சக்தி மிக்க தொண்டர்கள் நிறைந்த இந்த இயக்கத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்த்து அமைதி காக்குமாறு கண்டிப்புடன் கேட்டுக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.








