`இலங்கை: முஸ்லிம் பெண்களுக்கு திருமணம், விவாகரத்தில் சம உரிமை தரும் சட்டம் தேவை'

நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் சமமான அடிப்படை உரிமை வழங்கப்படாதபோது, அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தினால் பயனேதும் இல்லை என பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

கோப்புப்படம்
படக்குறிப்பு, கோப்புப்படம்

குறிப்பாக முஸ்லிம் சமூகத்தில் இளவயது திருமணங்கள் இடம்பெறுவது, திருமணங்களின் போது பெண்களின் விருப்பத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படாமை, ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் விவாகரத்து நடைமுறைகளில் சம உரிமையின்மை, நிபந்தனைகளற்ற விதத்தில் அமைந்துள்ள பலதார திருமண முறைமை, ஒருதலைப்பட்சமான நஷ்ட ஈட்டு கொடுப்பனவு முறைமை போன்ற பல்வேறு வழிகளில், அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள், முஸ்லிம் பெண்களுக்கு மறுக்கப்பட்டிருப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது,

பட மூலாதாரம், BBC World Service

கடந்த 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 16 ஆம் உறுப்புரையின் கீழ் அமைந்துள்ள 1951 ஆம் ஆண்டின் முஸ்லிம் விவாகம் மற்றும் விவாகரத்துச் சட்டத்தின் கீழ் ஏற்கெனவே நடைமுறையில் இருந்து வந்த முஸ்லிம் விவாகம் தொடர்பான சட்ட நடைமுறைகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கின்றது.

இந்தச் சட்டமானது கலை, கலாசாரம் மற்றும் மத உரிமைகளை அனுமதித்திருப்பதன் மூலம் முஸ்லிம் பெண்களுக்கு அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ள மனித உரிமை மற்றும் குடிமக்கள் உரிமைகள் மறுக்கப்பட்டிருக்கின்றன என பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு தெரிவித்திருக்கின்றது.

எனவே, புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் போது, இப்போது நடைமுறையில் உள்ள அரசியலமைப்பின் 16 ஆம் உறுப்புரை நீக்கப்பட்டு முஸ்லிம் பெண்களும் ஏனைய சமூகப் பெண்களைப் போன்று சம உரிமைகளை அனுபவிப்பதற்கு வழி செய்யப்பட வேண்டும். அல்லது அந்த 16 ஆம் உறுப்புரை உரிய முறையில் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு கோரிக்கை விடுத்திருக்கின்றது.