பிரெக்ஸிட்டுக்குப் பிறகு முதன்முறையாக பிரிட்டன் வணிக அமைச்சர் இந்தியா வருகை

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதாக வாக்களித்ததற்கு பிறகு முதன்முறையாக வர்த்தகம் தொடர்பான ஒரு விஜயத்தை மேற்கொண்டு பிரிட்டன் வணிக அமைச்சர் சாஜித் ஜாவித் இன்று இந்தியா வந்துள்ளார்.

பட மூலாதாரம், Reuters

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும் நிலையில் இந்தியாவுடனான பிரிட்டனின் வர்த்தக உறவு எப்படி இருக்கும் என்பதை பற்றி ஜாவித் விவாதிக்கவுள்ளார்.

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்ற தரப்பின் ஆதரவாளர்கள், வேகமாக வளரும் பொருளாதாரங்களான இந்தியா போன்ற நாடுகளுடன், பிரிட்டன் சிறந்த வர்த்தக ஒப்பந்தங்களை பேச்சுவார்த்தைகள் மூலம் முடிவெடுக்கும் என்று வாதிடுகிறார்கள்.

ஜாவித், எஃகு உற்பத்தி பெருநிறுவனமான டாடா நிர்வாக இயக்குநர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளார். பிரிட்டனில் உள்ள தனது சில தொழிற்சாலைகளை விற்கப்போவதாக டாடா அறிவித்துள்ளது.

வர்த்தக அமைச்சர் ஜாவித் அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரிய நாடுகளுக்கும் வரும் மாதங்களில் செல்லவுள்ளார்.