வங்கதேச மத்திய வங்கிக் கணக்கிலிருந்து பணம் மாயம்; தலைவர் ராஜினாமா

வங்கதேசத்தின் வெளிநாட்டுச் செலாவணிக் கணக்கிலிருந்து 80 மில்லியன் டாலர்களுக்கும் மேற்பட்ட தொகை காணாமல் போன விவகாரம் தொடர்பாக வங்கதேச மத்திய வங்கியின் தலைவர் அடியுர் ரெஹ்மான் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

வங்கதேச மத்திய வங்கியின் தலைவர் அடியுர் ரெஹ்மான்.
படக்குறிப்பு, வங்கதேச மத்திய வங்கியின் தலைவர் அடியுர் ரெஹ்மான்.

இவ்வளவு பெரிய தொகை நாட்டின் மத்திய வங்கியிருந்து திருடப்பட்டிருப்பது அந்நாட்டுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த விவகாரம் தனக்கு ஊடகங்களின் மூலமாகவே முதன்முதலில் தெரியவந்ததாக அந்நாட்டின் நிதியமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

மத்திய வங்கியின் கணிணியில் புகுந்த ஹேக்கர்கள், நியூயார்க்கில் உள்ள ஃபெடரல் ரிசர்வ் வங்கியில் இருக்கும் வங்கதேசக் கணக்கிலிருந்து பணத்தை ஃபிலிப்பைன்சில் உள்ள சூதாட்ட அரங்கக் கணக்குகளுக்கு மாற்றினர்.

இம்மாதிரி பணத்தை மாற்றும்போது, ஒரு இடத்தில் சிறு தவறு நேரவே, எச்சரிக்கை மணி ஒலித்தது.

இவ்வாறு திருடப்பட்ட பணத்தில், ஒரு பகுதி மீட்கப்பட்டுவிட்டது. மீதமிருப்பதை மீட்கும் நடவடிக்கைகள் நடந்துவருகின்றன.