உலகில் அதிக வாழ்க்கைச் செலவு மிகுந்த நகரம் சிங்கப்பூர்

பட மூலாதாரம், AFP
உலகில் வாழ்க்கைச் செலவு மிகவும் அதிகமான நகரமாக சிங்கப்பூர் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூருக்கு அடுத்த நிலையில் முறையே சூரிக், ஹாங்காங், ஜெனிவா மற்றும் பாரிஸ் ஆகிய நகரங்கள் உள்ளதாக ஆய்வினை மேற்கொண்ட இஐயு என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகெங்கிலும் 133 நகரங்களில் ஒரு கூடையில் அடங்கும் பொருட்களின் விலை குறித்து மேற்கொள்ளப்பட்ட ஒப்பீட்டில், லண்டன் 6-வது இடத்திலும், நியுயார்க் 7-வது இடத்திலும் உள்ளன.
செலவு மிகக்குறைந்த நகரங்களாக இந்திய நகரங்கான பெங்களுர் மற்றும் மும்பாய் ஆகியன பெயரிடப்பட்டுள்ளதுடன், அவற்றைத் தொடர்ந்து ஸாம்பியாவின் தலைநகர் லுசாக்காவும் உள்ளதாக இஐயு குறிப்பிட்டுள்ளது.
நியுயார்க் நகரத்தின் வாழ்க்கைச் செலவை ஏனைய நகரங்களுடன் ஒப்பீடு செய்து அதன் அடிப்படையில் பட்டியல் ஒன்றையும் இஐயு வெளியிட்டுள்ளது.
ஒரு ஆண்டிற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலும் கூட சிங்கப்பூர் விலை அதிகமான நகராக இருந்தது. ஆனாலும், வாழ்க்கைச் செலவு நியுயார்க்கை விட 10 வீதம் குறைவாகவே இருந்தது.
உலகில் செலவு மிக குறைந்த 10 நகரங்கள் பாகிஸ்தானிலும் இந்தியாவிலும் உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








