ஸ்மார்ட்போன் செயலிகள் மூலம் டாக்சி சேவைக்கு ஐரோப்பிய டாக்சி ஓட்டுநர்கள் எதிர்ப்பு - காணொளி

ஸ்மார்ட் போன் "செயலிகள்" ( அப்ளிக்கேஷன்) மூலம் வாடகைக் கார் ( டாக்ஸி) சேவைகளைப் பயன்படுத்துவது அதிகரித்து வருவதற்கு எதிராக பல ஐரோப்பிய நகரங்களில் வாடகைக் கார் ஓட்டுநர்கள் இன்று புதன் கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைச் செய்து வருகிறார்கள்.

லண்டனின் பிரசித்தி பெற்ற கறுப்பு வாடகைக் கார் ஓட்டுநர்கள் நகர மையத்தினூடாக வண்டிகளை மெதுவாக ஓட்டி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவிருக்கிறார்கள்.

பாரிஸ், பெர்லின் , ரோம் மற்றும் பிற முக்கிய ஐரோப்பிய நகரங்களில் இது போன்ற ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவிலிருந்து இயங்கும் உபெர் என்ற "திறன்பேசி செயலி" சேவை வாடகைக்கார் தொழில் விதிகளை மதிப்பதில்லை, உரிமம் பெறாத ஓட்டுநர்களை தொழிலில் ஈடுபட அனுமதிக்கிறது என்று பிரெஞ்சு டாக்ஸி நிறுவனம் ஒன்றின் தலைமை நிர்வாகி கூறினார்.

இதற்குப் பதிலடியாக, உபெர், தனது பாரிஸ் வாடிக்கையாளர்களுக்கு 50 சதவீத விலைக்கழிவை தர முன்வந்திருக்கிறது.

இந்த ஆர்ப்பாட்டங்கள் காரணமாக பிரான்ஸ் குறிப்பாக அதிகம் பாதிக்கப்படும், ஏனென்றால் அங்கு ஏற்கனவே ரெயில் சேவைகள் வேலை நிறுத்தம் ஒன்றால் பாதிக்கப்பட்டுள்ளன.

இவை குறித்த காணொளி.