குடும்பத்தினர் சம்மதமின்றித் திருமணம்: பெண்ணை கல்லால் அடித்துக் கொன்ற பெற்றோர்

"குடும்ப கௌரவ"த்தின் பெயரால் பெண்கள் கொலை -- பாகிஸ்தானில் தொடர்கதை
படக்குறிப்பு, "குடும்ப கௌரவ"த்தின் பெயரால் பெண்கள் கொலை -- பாகிஸ்தானில் தொடர்கதை

பாகிஸ்தானின், லாகூர் நகரின் உயர்நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே, ஒரு பெண்ணை அவரது குடும்பத்தினரே கல்லால் அடித்துக் கொலை செய்திருக்கின்றனர்.

அந்தப் பெண், தங்கள் சம்மதமில்லாமல், ஒருவரைத் திருமணம் செய்துகொண்டார் என்பதுதான் இந்தக் கொலைக்குக் காரணம் என்று அந்தக் குடும்பத்தினர் கூறினர்.

தனது வழக்கு குறித்த விசாரணைக்காக, அந்தப் பெண் உயர்நீதிமன்றக் கட்டிடத்துக்குள் வரும்போது, அவரது தந்தை, சகோதரர்கள் மற்றும் உறவினர்களில் ஒருவர் ஆகியோர் சேர்ந்து அவரை பிடித்து வைத்துக்கொண்டு, கற்களால் அவரின் தலையில் தாக்கத் தொடங்கினர் என்று போலிசார் கூறினர்.

அவரது தந்தையைத் தவிர பிற சந்தேக நபர்கள் எல்லோரும் தப்பியோடிவிட்டனர்.

அவரது தந்தை கைது செய்யப்பட்டிருக்கிறார்.

குடும்ப "கௌரவத்தை" காப்பதற்கு என்று பெண்களைக் கொலை செய்வது என்பது என்பது பாகிஸ்தானில் நீண்ட காலமாக நடந்து வரும் ஒரு செயல். இது குறித்து மனித உரிமைக் குழுக்கள் கவலை வெளியிட்டு வருகின்றன.

பாகிஸ்தானின் சில பகுதிகளில் பெண்களே தங்கள் கணவர்களைத் தேர்வு செய்வது என்பது கலாசார ரீதியாக அந்தப்பகுதிகளில் ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்று என்று செய்தியாளர்கள் கூறுகின்றனர்.