சமையல் தெரபி: உங்கள் மனநலனை மேம்படுத்த உணவு சமைப்பது உதவுமா?

சமையல் தெரபி

மனநல பிரச்னைகள் உடையவர்களை குணப்படுத்த பல்வேறு தெரபிகளை (சிகிச்சைகள்) கேள்விப்பட்டிருப்போம். ஆனால், சமையல் தெரபி குறித்து உங்களுக்குத் தெரியுமா? மன நல பிரச்னைகளை சரிசெய்வதற்கு சமையலையே தெரபியாக பரிந்துரைக்கும் நிபுணர்கள் உள்ளனர்.

சமையல் தெரபி என்பது என்ன? அதன் பயன்பாடுகள் என்ன?

சமையல் தெரபியில் ஒரு நிபுணருடன் இணைந்து சமைக்க வேண்டும். பல்வேறு அமர்வுகளுக்குப் பின்னர் மெல்ல மெல்ல நீங்கள் மனம் திறந்து பேசுவீர்கள். நீங்கள் சமைக்கும் விதம், சமையலறையில் நீங்கள் வேலை செய்யும் விதம் உங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் என, நாங்கள் பேசிய நிபுணர்கள் பலர் கூறுகின்றனர்.

நெருக்கமான ஒருவரை இழப்பதால் ஏற்படும் துயரம், பதற்றம், மன அழுத்தம் உள்ளிட்ட மன நல பிரச்னைகளுக்கு இந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒருவருடைய தன்னம்பிக்கையை வளர்க்கவும் இச்சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது. ஆனால், சமையல் தெரபியின் பலன்கள் குறித்து போதுமான அறிவியல் ஆதாரங்கள் இல்லை என்றாலும், 'பேக்கிங்' செய்வது உங்களின் நம்பிக்கையை உயர்த்துவது குறித்து சில ஆதாரங்கள் உள்ளன.

"பிடித்தமானதை சமையுங்கள்"

சமையல் தெரபியில், "உங்களுக்கு மிக பிடித்தமான எளிய உணவுகளை சமைக்க வேண்டும்" என, பிரிட்டனில் 'கிச்சன்' தெரபி' நடத்திவரும் சார்லோட் ஹேஸ்டிங் கூறுகிறார்.

"யாரோ ஒருவரையோ அல்லது ஒரு சம்பவத்தை நினைவுகூறும் உணவுகளை சமைக்கலாம்" என்கிறார், ஹேஸ்டிங்.

ஒருவருடைய இழப்பில் வாடும்போது இது நமக்கு உதவலாம் என்பது ஹேஸ்டிங்கின் கூற்று.

"நேரம் எடுத்து சாப்பிடுங்கள்"

என்ன உணவு உண்கிறோம் என்பதை அறிந்து நேரம் எடுத்து கவனம் செலுத்தி உண்ண வேண்டும் என்றும், நாம் உண்ணும் உணவு குறித்து பெருமிதமாக உணர வேண்டும் எனவும் கூறுகிறார், தொழில்முறை உளவியலுக்கான சிகாகோ ஸ்கூல் பேராசிரியர் கோசெட்.

"சமைத்த பின்னர், பாத்திரங்களை அப்படியே தூக்கியெறியாமல், அவற்றை கழுவுவதும் இந்த தெரபியின் ஒரு பகுதியாக உள்ளது. இது நம் உணர்வுப்பூர்வமான வெளியையும் சுத்தப்படுத்துவதற்கான அடையாளப் பிரதிநிதித்துவமாகவும் இருக்கலாம்" என கோசெட் கூறுகிறார்.

சமையல் தெரபி

சமையல் தொடர்பானதை சிந்தியுங்கள்

சமையல் கலை குறித்த புத்தகங்களை ஒருபக்கம் விடாமல் படிப்பதும் உங்களை ஆற்றுப்படுத்தலாம். அல்லது குழந்தைப்பருவத்தில் உங்களுக்கு விருப்பமான உணவு குறித்தும் பேசலாம். "சமையல் தெரபி என்பது சமையலில் ஈடுபடுவது மட்டுமல்ல, உணவு குறித்து விவாதிப்பது, உண்பது, உணவுடனான ஒருவருடைய உறவு எல்லாமும்தான்" என கோசெட் கூறுகிறார்.

பலன்கள் பொருட்டல்ல

"குழந்தை பருவத்தில் நாம் சமைக்கும் எதற்கும் எந்த கணக்கும் இல்லை, எந்த உணவாக இருந்தாலும் அதில் ஒரு பொருளை இவ்வளவுதான் சேர்க்க வேண்டும் என யாரும் சொல்ல மாட்டார்கள். அதேபோன்று, உணவால் உங்களின் மனநலனில் ஏற்படக்கூடிய முன்னேற்றங்கள் குறித்தோ அதுகுறித்த அழுத்தங்களிலோ கவனம் செலுத்தக்கூடாது, அதன் முடிவு குறித்து அழுத்தங்களை ஏற்படுத்திக்கொள்ளக் கூடாது" என, ஹேஸ்டிங்ஸ் கூறுகிறார்.

உணவு

சமையலில் நீங்கள் தவறுகள் செய்தாலும் அது உங்களின் தன்னம்பிக்கையை அதிகரிப்பதில் உதவலாம் என கோசெட் கூறுகிறார்.

"அதாவது, தொழில் ரீதியாகவோ அல்லது, தனிப்பட்ட உறவுகளிலோ நீங்கள் தவறு செய்வது பிரச்னை அல்ல" என முடிக்கிறார் கோசெட்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: