பணம் சம்பாதிக்க கிரிப்டோகரன்சியில் பணத்தை முதலீடு செய்தால் லாபத்தைவிட நஷ்டம் அதிகமா? - ஆனந்த் ஸ்ரீநிவாசன்

கிரிப்டோகரன்சியில் லாபத்தைவிட நஷ்டம் அதிகமா?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
    • பதவி, பிபிசி தமிழ்

கிரிப்டோகரன்சியில் முதலீடு அதிகரித்தால் இந்தியாவின் பொருளாதாரத்தின் ஒரு பங்கு டாலர் பொருளாதாரமாக மாறிவிடும் என சமீபத்தில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டாலர் பொருளாதாரத்திற்கு இந்தியா மாறினால் பொருளாதார சிக்கல் அதிகரிக்கும் என்றும் கிரிப்டோகரன்சி முதலீட்டில் லாபம் பெறுபவர்களை விட நஷ்டத்தை சந்திப்பவர்கள்தான் அதிகம் என்கிறார் பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீநிவாசன். பிபிசி தமிழுக்கு அவர் அளித்த பேட்டி.

கிரிப்டோகரன்சியில் முதலீடு தொடர்ந்தால் இந்திய பொருளாதாரத்தில் ஒரு பங்கு டாலர் பொருளாதாரமாக மாறிவிடும் என ரிசர்வ் வங்கி அதிகாரிகள் நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் ஒரு பங்கு டாலர் பொருளாதாரமாக மாறினால் என்ன விளைவுகள் ஏற்படும்?

ஒவ்வொரு நாட்டிலும் அந்த நாட்டின் அரசாங்கம் பணத்தை அச்சடிக்கும். அதற்கு மதிப்பு இருக்கும்.

கிரிப்டோகரன்சி என்பது இணையத்தில் இருக்கும் பணம். உலகளவில் பலர் அதனை இணையத்தில் விற்கிறார்கள். யார், எங்கு அதை விற்கிறார்கள் என்பதை சாதாரண முதலீட்டார்கள் புரிந்துகொள்வது சிரமம். அரசாங்கம் தவிர பிற தனியார் நிறுவனங்கள் கரன்சியை மக்களிடம் விற்பதற்கு அனுமதித்தால், அது அந்த அரசாங்கத்திற்கே ஆபத்தாக முடியும்.

கொரோனா போல தீடீரென எதிர்பாராத சூழல் நிலவும் போது, இந்தியா போன்ற நாட்டில் அரசாங்கம் தளர்வுகள் கொண்டுவந்து, அதிக அளவில் பணத்தை அச்சடித்து மக்களின் விநியோகத்திர்க்கு தரலாம். அந்த நேரத்தில் தனியார் நிறுவனங்களின் கரன்சியை புழக்கத்தில் இருந்தால், அந்த நாட்டின் பணத்திற்கு மதிப்பு இருக்காது.

பெரூ நாட்டில் கிரிப்டோகரன்சியை அனுமதித்தார்கள். பலரும் கிரிப்டோகரன்சி மூலமாக தங்களது பணத்தை டாலராக மாற்றிவிட்டார்கள். அந்த நாட்டின் பணத்தை விட டாலரில் பண பரிமாற்றம் நடந்தது. தற்போது அந்த நாடு அமெரிக்க நாட்டின் ரிசர்வ் வங்கியை நம்பும் நிலை ஏற்பட்டுவிட்டது.

அது போன்ற நிலையை 'டாலரைசேஷன்' என்கிறார்கள். இந்தியாவில் கிரிப்டோகரன்சியை அனுமதித்தால், அந்த நிலை ஏற்படும் என்பதைதான் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.

கிரிப்டோகரன்சியில் லாபத்தைவிட நஷ்டம் அதிகமா?

பட மூலாதாரம், Getty Images

பொருளாதார நிபுணராக இல்லாத ஒரு சாதாரண முதலீட்டாளர் ஒருவர் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்யவேண்டும் என்றால் என்ன வகையில் தயாராக இருக்கவேண்டும்?

சமீபத்தில் லூனா என்ற கிரிப்டோகரன்சியில் பலர் முதலீடு செய்தார்கள். ஒரு லுனாவின் மதிப்பு 116 டாலராக இருந்தது. தீடீரென சரிந்து பூஜ்ஜிமாகிவிட்டது. அதேபோல பிட்காயின் விலை 62,000 டாலராக இருந்தது. தற்போது 28,500 டாலராக மாறிவிட்டது. மேலும் அதன் மதிப்பு குறையும்.

இதுபோன்ற அதிக லாபம் தருவதாக கூறும் ஏற்றத்தாழ்வுகள் அதிகமுள்ள முதலீடுகள் முந்தைய காலத்திலும் இருந்தன. ரிஸ்க் எடுத்து ஏமாந்தவர்கள் ஒவ்வொரு தலைமுறையில் இருப்பார்கள். நவீன ஜென் நெக்ஸ்ட் ஏமாறும் தளமாக கிரிப்டோகரன்சி இருக்கிறது என்பது என் சொந்த கருத்து.

முன்னர் மக்கள் சிட் பண்டில் பணம் கட்டி ஏமாந்தர்கள். சமீபத்தில் ஈமு கோழியில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் காண கிடைக்கிறார்கள். இதைவிட சான்று என்ன வேண்டும்? உள்ளூரில் ஏமாறுவதா இல்லை வெளிநாட்டை சேர்ந்தவர்களிடம் ஏமாறுவதா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

கிரிப்டோகரன்சியில் லாபத்தைவிட நஷ்டம் அதிகமா?

பட மூலாதாரம், Getty Images

கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால் அல்லது அதன் மூலம் லாபம் பெற்றால் அந்த தொகையில் இருந்து 30 சதவீதத்தை இந்திய அரசாங்கத்திற்கு வருமான வரி செலுத்தவேண்டும் என இந்திய அரசு அறிவித்தது. இதன் மூலம் படிப்படியாக கிரிப்டோகரன்சி என்பது சட்டப்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட முதலீடாக மாறும் என்ற கருத்து நிலவுகிறதே... அதை பற்றி சொல்லுங்கள்.

கிரிப்டோகரன்சி சட்டப்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட முதலீடா இல்லையா என்று ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் கேட்க, அதற்கு இன்னும் பதிலை அரசு தெளிவாக சொல்லவில்லை. பதில் சொல்ல கால அவகாசம் கேட்டு தாமதித்துவருகிறார்கள்.

ஆனால் இந்த முதலீட்டை மறுத்தால் அதிக லாபத்தை கணக்கில் கொண்டு முதலீடு செய்த இளைஞர்களின் வாக்குகளை இழக்கவேண்டிய நிலை வரும். மறுபுறம் இந்திய பொருளாதாரத்திற்கு ஆபத்து வரும். அதனால், ஆளும் பாஜக அரசாங்கம் குழப்பத்தில் தத்தளிக்கிறது.

வருமான வரி வசூல் செய்வதால் மட்டுமே ஒரு முதலீடு சட்டப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டுவிடும் என்று சொல்லமுடியாது. சட்டத்திற்கு புறம்பாக தொழில் செய்து பணம் சம்பாரித்தால் கூட வரியை அரசு எடுத்துக்கொள்ளும் என்பதால் கிரிப்டோகரன்சி சட்டப்படி ஏற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு என்பது மிகவும் குறைவு. அப்படி ஏற்றுக்கொண்டால் விரைவில் பெரூ நாட்டிற்கு ஏற்பட்ட நிலைதான் இந்தியாவுக்கும் ஏற்படும்.

காணொளிக் குறிப்பு, 'ஹிட்லர் உடலில் யூத ரத்தம்' - ரஷ்ய அமைச்சர் பேச்சால் இஸ்ரேல் கோபம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: