சீனா முதல் சென்னை வரை விரியும் கிரிப்டோகரன்சி மோசடி வலை: தப்புவது எப்படி?

சீனாவில் இருந்து சென்னை: விரியும் கிரிப்டோகரன்சி மோசடி வலை

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த இருவர், போலி முதலீட்டாளர்களை நம்பி, கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்து ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் பணத்தை இழந்துள்ளனர் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

இந்த கிரிப்டோகரன்சி மோசடியில், சீனாவை சேர்ந்தவர்கள் இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகமுள்ளதாக சென்னை சைபர் குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டெலிகிராம் செயலி மூலம் தொடர்புகொண்டநபர்கள், குறைந்த காலத்தில் அதிக லாபத்தை ஈட்டலாம் என கூறியதால் காவல்துறையை சேர்ந்தவர்கள் பணத்தை கொடுத்துள்ளனர். இதுபோலவே, இந்த மோசடி வலையில் பொதுமக்கள் யாரவது சிக்கியிருந்தால் உடனடி தகவல் தருமாறு சைபர் குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காவல்துறையைச் சேர்ந்தவர்கள் கூட இதில் ஏமாற்றப்படுகிறார்கள் என்று பொது மக்கள் அறிந்துகொண்டால் மோசடி பற்றிய கவனம் அதிகரிக்கும் என்பதற்காக காவல் ஆணையர் இது பற்றி வெளிப்படையாக அறிவித்தார் என்றும் தெரிவித்தனர். கடந்த சில மாதங்களாக லோன் ஆப் மூலம் ஏமாறுபவர்களின் எண்ணிக்கை குறைந்துவந்ததை கூர்ந்து பார்த்ததில், ஏமாற்றுபவர்கள் கிரிப்டோகரன்சி பக்கம் திரும்பியுள்ளது தெரியவந்தது என்கிறார்கள். அதிலும் முதலீட்டாளர்களிடம் பேசுபவர்கள் சீனாவை சேர்ந்த ஆண்கள் அல்லது பெண்களாக இருப்பதால், சர்வதேச எல்லைகளை கடந்து மோசடி நடைபெறுகிறது என்பது தெளிவாகியுள்ளது என்கிறார்கள்.

சர்வதேச எல்லைகளை கடக்கும் மோசடி

கடந்த இரண்டு ஆண்டுகளில் சென்னை நகரத்தில் மட்டும் கிரிப்டோகரன்சி மோசடி தொடர்பாக நான்கு வழக்குகள் பதிவாகியுள்ளதாக கூறிய அதிகாரிகள், இதில் சம்பந்தப்பட்ட நபர்களை கண்டறிவது கடும் சவாலாக இருப்பதாக தெரிவித்தனர்.

''டெலிகிராம் செயலியில் தொடர்பு கொண்ட ஒருவர் நீங்கள் தற்போது ஒரு ரூபாய்க்கு கிரிப்டோகரன்சி வாங்கினால், அந்த நாளின் முடிவில் அதன் மதிப்பு இரட்டிப்பாகும். அதனால் உங்களுக்கு ஒரு ரூபாய் என்பது அடுத்த ஒரே நாளில் நான்கு ரூபாயாக கிடைக்கும் என்பார்கள். அதிக லாபம் கிடைக்கும் என கவர்ச்சியான வாசகங்களை சொல்வதால் பலர் ஏமாறுகிறார்கள்.

எங்களிடம் புகார் அளித்துள்ளவர்கள், கிரிப்டோகரன்சி வாங்கியதற்கான ஆதாரங்களை இணையத்தில் இருந்து எடுப்பது சிக்கலாக உள்ளது. வங்கி பரிவர்த்தனைகள் போல எளிமையாக இதனை கண்டறியமுடியாது என்பதால் ஏமாற்றியவர்களை கண்டறிவதற்கு அதிக காலம் தேவை. பரிவர்த்தனைகளுக்கான சர்வர்கள் எந்தெந்த நாட்டில் உள்ளன என்பதை பார்த்துதான் விசாரிக்க முடியும். டெலிகிராம் மூலம் மேற்கொண்ட உரையாடல்களை பார்க்கும்போது, சீனாவை சேர்ந்தவர்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்பதற்கான தரவுகள் கசிந்துள்ளன.ஏமாற்றப்பட்டவர்கள் தங்களிடம் உள்ள தரவுகளை அளிக்க முன்வந்தால் விசாரணை மேற்கொள்ளமுடியும் என்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்,''என்கிறார்கள் அதிகாரிகள்.

கிரிப்டோகரன்சி சட்டரீதியான முதலீடா?

கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வது சட்ட ரீதியானதா, கிரிப்டோகரன்சியில் அதிக லாபத்தை ஈட்டுபவர்கள் இருக்கிறார்களா என்ற குழப்பமும் பொதுமக்களிடம் நீடிக்கிறது. சைபர் குற்றங்களை பற்றிய விழிப்புணர்வில் ஈடுபடும் சைபர் சொசைட்டி ஆப் இந்தியா நிறுவனத்தைச் சேர்ந்த பிரசன்னாவிடம் பேசினோம்.

சீனாவில் இருந்து சென்னை: விரியும் கிரிப்டோகரன்சி மோசடி வலை

பட மூலாதாரம், Getty Images

''கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வது சட்டப்படி அனுமதிக்கப்பட்டுள்ளதா இல்லையா என அதிகாரப்பூர்வமான பதிலை இந்திய அரசு இதுவரை தெரிவிக்கவில்லை. கடந்த இந்திய பட்ஜெட்டில், கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்யப்பட்டு வரும் லாபத்தில் 30 சதவீதத்தை அரசுக்கு வரியாக செலுத்தவேண்டும் என்றுமட்டும்தான் சொல்லப்பட்டது. கிரிப்டோகரன்சி முதலீடுகளை கண்காணிக்க, ஒழுங்குபடுத்த அரசு இதுவரை எந்த கட்டமைப்பையும் கொண்டுவரவில்லை என்பதால் முதலீடு செய்பவர்கள் அவர்களின் சொந்த யோசனையில்தான் ஆபத்துகளை எதிர்கொள்ளவேண்டும்,''என்கிறார் பிரசன்னா.

கிரிப்டோ கரன்சியில் இடர்பாடுகள் என்ன?

மேலும், கிரிப்டோகரன்சி மோசடிகள் அதிகரிப்பதற்கான காரணங்களை பற்றி பேசிய அவர், ''கிரிப்டோகரன்சி என்பது இணையத்தில் வாங்கப்படும்,, விற்கப்படும் பணம் போன்றது. அதாவது எந்த நாட்டில் நீங்கள் இருந்தாலும், உங்களிடம் வைத்திருக்கும் கிரிப்டோகரன்சியின் மதிப்பு ஒன்றுதான். ஆனால் இதன் தேவை என்பது சாதாரண முதலீட்டாளர்களுக்கு உகந்தது அல்ல. பங்குச்சந்தை போல, கிரிப்டோகரன்சியின் மதிப்பு ஏறுவதும், இறங்குவதும் சகஜம்.

ஆனால் பங்குச்சந்தை பரிவர்த்தனைகள் ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் நடைபெறுகிறது. கிரிப்டோகரன்சி விற்பனையில் பல தனி மனிதர்கள் ஈடுபட்டுள்ளனர். தனியார் நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. நீங்கள் ஏமாற்றப்பட்டால், அவர்கள் பொறுப்பை எளிதில் தட்டிக்கழிக்கலாம், உங்களிடம் கொடுக்கப்பட்ட கிரிப்டோகரன்சியின் மதிப்பு செல்லாமல் கூட போகலாம். ஒருசிலர் தங்களிடம் உள்ள கருப்புப் பணத்தை கிரிப்டோகரன்சியாக மாற்றிவைத்திருக்கிறார்கள்,''என்கிறார்.

இந்தியாவில் கிரிப்டோகரன்சி முதலீடு என்பது ஒரு சிலருக்கு மட்டும் பயன்தருவதாக உள்ளது. மற்றவர்கள், ஹவாலா மோசடியில் நடந்து போல பணத்தை கொடுத்து ஏமாறும் நிலையில்தான் இருக்கிறது என்கிறார் அவர்.

கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்பவர்கள் சொல்வது என்ன?

கடந்த ஐந்து ஆண்டுகளாக கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்து வரும் கோவையைச் சேர்ந்த சிபி, "அவசிய தேவைக்கான சேமிப்பு பணத்தை முதலீடு செய்வதால் பலர் கிரிப்டோகரன்சி மோசடி வலையில் மாட்டுகிறார்கள்" என்கிறார்.

சீனாவில் இருந்து சென்னை: விரியும் கிரிப்டோகரன்சி மோசடி வலை

பட மூலாதாரம், Getty Images

''நான் பாதுகாப்பான நிறுவனங்களை தேர்வு செய்து கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்கிறேன். கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்ய, அதிகப்படியாக அவற்றைப் பற்றிய புரிதல் தேவை. ஒரு நபரை நம்பி ஏஜென்ட் மூலமாக கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வது சரியல்ல. அதேபோல, நீங்கள் அவசியத் தேவைக்காக சேர்த்துவைத்த பணத்தை இதில் முதலீடு செய்யக்கூடாது. ஒரே நாளில் கிரிப்டோகரன்சியின் மதிப்பு அதிகமான லாபத்தை கொடுக்கலாம் அல்லது பின்னடைவை சந்திக்கலாம் என்பதால், தொடர்ந்து அந்த மாற்றங்களை கவனித்து வருபவர்களுக்கு மட்டுமே முதலீடு பயன் தரும்,''என்கிறார் சிபி.

''சர்வதேச அளவில் பலரும் கிரிப்டோகரன்சி முதலீடுகள் செய்வதால், அவற்றில் சரியான விற்பனையாளரை தேர்வு செய்து கிரிப்டோகரன்சியை வாங்கவேண்டும். நான் முதலீடு செய்யும் போது, முதலீட்டிற்கான பணத்தில் 30 சதவீதத்தை மட்டும் கிரிப்டோகரன்சியில் போடுவேன். அதுவும் கிரிப்டோகரன்சி ஏற்ற தாழ்வுகளை ரேங்கிங் செய்யும் வலைத்தளங்களில் சரிபார்ப்பேன். கிரிப்டோகரன்சி முதலீடு செய்வதற்கான உண்மையான தளங்கள் உள்ளன. அதில் நீங்கள் முதலீடு செய்யும் போது, நீங்களே அந்த கணக்கை கவனிப்பவராக இருக்கவேண்டும்,''என்கிறார் சிபி.

மேலும், விலைவாசி ஏற்றம் மற்றும் வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட காரணங்களால் நெருக்கடிக்கு உள்ளானவர்கள் குறுகிய காலத்தில் பணம் கிடைக்கும் என்று நம்பி போதிய விசாரணை இல்லாமல் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்கிறவர்கள் போலி கிரிப்டோகரன்சி தளங்களில் முதலீடு செய்யும் ஆபத்து உள்ளது. அப்படி போலி தளங்களில் தெரியாமல் முதலீடு செய்கிறவர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்கிறார்.

காணொளிக் குறிப்பு, தருமபுரம் ஆதீனத்துக்கு தடை: பேரூர் ஆதீனம் எதிர்ப்பு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: