நாகேந்திரன் தர்மலிங்கம்: சிங்கப்பூருக்கு போதைப்பொருள் கடத்திய வழக்கில் மலேசிய தமிழ் இளைஞருக்கு எந்த நேரத்திலும் தூக்கு

பட மூலாதாரம், SHARMILA
- எழுதியவர், சதீஷ் பார்த்திபன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தமக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை எதிர்த்து மலேசிய தமிழ் இளைஞர் நாகேந்திரன் தர்மலிங்கம் தாக்கல் செய்த மனுவை சிங்கப்பூர் மேல்முறையீட்டு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.
மேலும், தனது மனநிலை குறித்து உரிய வகையில் ஆராய ஒரு மனநல நிபுணர் குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் அதற்கான நிபுணர்களை அடையாளம் காணும் வரை மரண தண்டனையை ஒத்திவைக்குமாறும் நாகேந்திரன் தரப்பில் வைக்கப்பட்ட மற்றொரு கோரிக்கையும் மேல் முறையீட்டு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து, அவர் எந்த நேரத்திலும் தூக்கிலிடப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மலேசியாவில் உள்ள அவரது குடும்பத்தார் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
நாகேந்திரன் மனுவைத் தள்ளுபடி செய்த சிங்கப்பூர் மேல்முறையீட்டு நீதிமன்றம்
சிங்கப்பூர் தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் உள்ளிட்ட ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு நாகேந்திரன் தர்மலிங்கத்தின் இரண்டு மனுக்களையும் செவ்வாய்க்கிழமை விசாரித்தபோது, குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பு வழக்கை இழுத்தடிப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவதாக அதிருப்தி தெரிவித்தது.
மலேசியாவைச் சேர்ந்த 34 வயதான நாகேந்திரனுக்கு சிங்கப்பூருக்குள் போதைப்பொருள் கடத்தி வந்த குற்றத்திற்காக 2010ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அதன் பிறகு அவரை அந்தத் தண்டனையில் இருந்து காப்பாற்றுவதற்காகப் பல்வேறு சட்டப்பூர்வ நடவடிக்கைகளை அவருடைய தரப்பினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இறுதி முயற்சியாக மரண தண்டனையை எதிர்த்து நாகேந்திரன் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை சிங்கப்பூர் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் நடைபெற்றது.
அதன் முடிவில், அந்த அமர்வின் சார்பாக தீர்ப்பை வாசித்த தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன், உண்மைத்தன்மை மற்றும் சட்டத்தின்படி, நாகேந்திரனின் மனு அடிப்படையற்றது என்றும், விசாரிப்பதற்கான தகுதியற்றது என்றும் குறிப்பிட்டார்.
"ஏற்றுக்கொள்ளத்தக்க ஆதாரம் ஏதும் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை"
முன்னதாக, நாகேந்திரன் அறிவாற்றல் (அறிவுசார்) குறைபாடு உள்ளவர் என்றும், அவரது மனநிலை மோசமடைந்து வருவதால் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படக்கூடாது என்றும், கடந்த மார்ச் 1ஆம் தேதி அவரது வழக்கறிஞர் வயலட் நேட்டோ தனது வாதத்தை முன்வைத்திருந்தார்.
ஆனால், நேற்று தீர்ப்பை வாசித்த தலைமை நீதிபதி,, நாகேந்திரனின் மனநிலை மோசமடைந்து வருவதை நிரூபிப்பதற்கான எந்தவொரு ஏற்றுக்கொள்ளத்தக்க ஆதாரமும் இதுவரை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டினார்.
இதற்கு முன்பு நாகேந்திரனின் முன்னாள் வழக்கறிஞர் எம்.ரவி சுயமாகத் தாக்கல் செய்த ஒரு பிரமாணப் பத்திரத்தில் 34 வயதான நாகேந்திரன், தற்போது 18 வயதுக்குட்பட்ட ஒருவரது மனநிலையை மட்டுமே கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.
அதை தீர்ப்பில் குறிப்பிட்ட தலைமை நீதிபதி, கடந்த ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி நாகேந்திரனுடன் அரை மணி நேரத்துக்கும் குறைவாக கலந்துரையாடிய வழக்கறிஞர் ரவி, அதன் அடிப்படையில் இந்த முடிவுக்கு வந்திருப்பதாகவும், இதற்கான நம்பகமான அடிப்படைகள் என எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதியும் நவம்பர் 3ஆம் தேதியும் சிறைக்கைதிகளுக்கு வழக்கமான முறையில் உடல்நலப் பரிசோதனைகள் நடத்தப்பட்டதாகவும், அதன் அடிப்படையிலான மனநல மற்றும் மருத்துவ அறிக்கைகளை ஏற்றுக்கொள்ள நாகேந்திரன் தரப்பு வழக்கறிஞர்கள் மறுத்துவிட்டதாகவும் தலைமை நீதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.
சிறை அறிக்கைகளை நாகேந்திரன் ஏன் எதிர்த்தார்? - நீதிமன்றம் கேள்வி
"ஒருவரது உடல்நிலை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தனது உடல்நிலை குறித்த ஆதாரங்கள் அணுகப்படுவதை, அவரால் எவ்வாறு நம்பிக்கையுடன் எதிர்க்க முடிகிறது?" என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.
சிறையில் நடத்தப்பட்ட பரிசோதனை தொடர்பான அறிக்கைகளை ஏற்றுக்கொண்டிருந்தால் நாகேந்திரனின் மனநிலை குறித்து தெளிவு ஏற்பட்டிருக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
"ஆனால் இந்த அறிக்கை ஆதாரங்கள் நீதிமன்றத்திடம் அளிக்கப்படும் பட்சத்தில், அது இந்த வழக்கில் தமது தரப்பை குறைத்து மதிப்பிட காரணமாகிவிடும் என்று நாகேந்திரனுக்கு தெரிந்திருக்கிறது அல்லது அவர் இவ்வாறு நம்பியுள்ளார் என்ற அனுமானத்தை நம்புவதற்கேற்ப அவரது வழக்கறிஞர்களின் ஆட்சேபம் அமைந்துள்ளது.
"நாகேந்திரனின் வழக்கில் அனைத்தும் சட்டப்பூர்வமாகவே நடைபெற்றுள்ளது. ஆனால், அவரது தரப்பை பரிசீலிப்பதற்கு ஏற்ப அவர் எதையுமே முன்வைக்கவில்லை. எனவே, இந்த சட்டப்பூர்வ நடவடிக்கைகளின் இறுதி முடிவை எதிர்ப்பதற்கு அவருக்கு வாய்ப்பு இல்லை.
"ஏற்கெனவே நீதிமன்றத்தால் முடித்து வைக்கப்பட்ட விஷயங்களைத் தகுந்த, நியாயமான காரணங்கள் இல்லாமல் மீண்டும் விசாரிக்கக் கோருவது அல்லது அதற்கான முயற்சியில் ஈடுபடுவது முறையற்ற செயலாகும்.
"எனவே, குறிப்பிட்ட சூழ்நிலைக்கு ஏற்ப மரண தண்டனை விதிக்கப்பட சட்டம் வாய்ப்பு அளிக்கும் பட்சத்தில், நீதிமன்ற நடைமுறைகள் குறித்து அவதூறு தெரிவிப்பது முறையல்ல. நம்பிக்கையற்ற விண்ணப்பங்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தாக்கல் செய்வது என்பது குற்றவியல் நீதி நிர்வாகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தக்கூடிய செயல்பாடு ஆகும்," என்றார் தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன்.
கொரோனா பாதிப்பால் ஒத்திவைக்கப்பட்ட மரண தண்டனை

பட மூலாதாரம், Getty Images
கடந்த நவம்பர் 10ஆம் தேதி அன்றே நாகேந்திரனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதாக இருந்தது. எனினும், அதற்கு முந்தைய நாள் நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையின்போது அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது.
இதையடுத்து, அவருக்கு நிறைவேற்றப்பட இருந்த மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகே அவர் சிங்கப்பூர் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் இரண்டு மனுக்களைத் தாக்கல் செய்தார். அவற்றின் மீதான விசாரணையும் தற்போது முடிவடைந்துள்ளது.
இதையடுத்து, சிங்கப்பூர் சட்டம் குற்றம்சாட்டப்பட்ட ஒருவருக்கு வழங்கும் அனைத்து வாய்ப்புகளையும் நாகேந்திரன் தரப்பு பயன்படுத்திவிட்டதாகக் கருதப்படுகிறது.
எனவே, இனியும் சட்ட ரீதியில் அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை நிறுத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதா எனத் தெரியவில்லை.
ஏற்கெனவே, மலேசிய மாமன்னர், பிரதமர், சமூக ஆர்வலர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் நாகேந்திரனுக்கு கருணை காட்டுமாறு, தண்டனையைக் குறைக்குமாறு பல்வேறு விதமாக கோரிக்கைகள் விடுத்திருந்தனர்.
சிங்கப்பூர் சட்டப்படி, அவருக்குரிய அனைத்து நியாயமான வாய்ப்புகளும் வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்திருந்தது.
சிங்கப்பூர் அதிபர் நாகேந்திரனின் கருணை மனுவை ஏற்கெனவே நிராகரித்துவிட்டார். இந்நிலையில், நாகேந்திரன் குடும்பத்தார் அடுத்து என்ன நடக்குமோ எனும் பதைப்பதைப்புடன் காத்திருக்கின்றனர்.
என்ன நடந்தது? எப்படி சிக்கினார் நாகேந்திரன்?
கடந்த 2009ஆம் ஆண்டு 42.72 கிராம் 'Diamorphine' 'டயாமார்ஃபைன்' என்ற தடை செய்யப்பட்ட பொருளுடன் சிங்கப்பூருக்குள் நுழைந்தபோது நாகேந்திரன் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு வயது 21.

பட மூலாதாரம், Getty Images
'டயாமார்ஃபைன்' புற்றுநோயால் ஏற்படும் அதிதீவிர வலிக்கு சிகிச்சை அளிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. அதேவேளையில் போதைக்காக இதை பயன்படுத்துவதற்கு சிங்கப்பூரில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமது தொடைப்பகுதியில் கயிறுகொண்டு கட்டப்பட்டிருந்த உறையில் 'டயாமார்ஃபைன்' கடத்தி வந்த குற்றச்சாட்டுக்காக சிங்கப்பூர் போலிசார் நாகேந்திரனைக் கைது செய்தனர்.
அந்த உறையில் என்ன இருக்கிறது என்பது தமக்குத் தெரியாது என்றார் அவர். பின்னர் கைதான நாகேந்திரன் போதைப்பொருள் கடத்தல் வழக்கை எதிர்கொண்டார்.
ஏறத்தாழ பத்து ஆண்டுகள் நீடித்த வழக்கு விசாரணையின் முடிவில், 2019ஆம் ஆண்டு அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அவருக்கு அறிவுசார் மாற்றுத்திறன் (Intellectual Disability) இருப்பதாகவும், அவரது ஐக்யூ அளவானது 69 புள்ளிகள் மட்டுமே உள்ளது என்றும் அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதுவும் ஒரு வகையான மாற்றுத்திறன் என்றும் நாகேந்திரன் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், இத்தகைய குறைபாடு உள்ளவர்களை தூக்கிலிடக்கூடாது என்றும் வலிறுத்தப்பட்டது. எனினும், சிங்கப்பூர் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது.
நாகேந்திரன் தரப்பு வாதம் என்ன?
33 வயதான நாகேந்திரனுக்கு தற்போது 18 வயதுக்கும் கீழ் உள்ள ஒருவருக்கு இருக்கக்கூடிய மனநிலைதான் உள்ளது என்பது நாகேந்திரன் தரப்பின் வாதம். இப்படிப்பட்ட மனநிலையில் உள்ள, தமக்கு நேர இருப்பதை அறியும் பக்குவம் இல்லாத ஒருவரை தூக்கிலிடுவது என்பதை ஏற்க இயலாது என்ற வாதத்தையும் அவரது தரப்பு முன்வைத்தது.
அனைத்துலக சட்டடங்களில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது என்பதுடன், சிங்கப்பூர் சிறைத்துறையிலும் கூட இத்தகைய மனநல குறைபாடு உள்ளவர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றத் தேவையில்லை எனும் துறை சார்ந்த 'உள்கொள்கை' இருப்பதாகவும் நாகேந்திரனின் வழக்கறிஞராக முன்பு செயல்பட்ட சிங்கப்பூரைச் சேர்ந்த ரவி வாதிட்டார்.
ஆனால் அவர் குறிப்பிட்டதைப் போன்று எந்த 'உள்கொள்கை'யும் இல்லை என சிங்கப்பூர் சிறைத்துறை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












