யுக்ரேன் நெருக்கடி: புதினுடன் மக்ரோங் சந்திப்பு - பதற்றத்தில் மேற்கு நாடுகள்

பட மூலாதாரம், EPA
யுக்ரேன் உடனான மோதலைத் தணிக்கும் விவகாரத்தில், வரும் நாட்கள் முக்கியமானவை ஆக இருக்கும் என்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடனான சந்திப்புக்குப் பின்னர் பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங் தெரிவித்துள்ளார்.
யுக்ரேனின் எல்லையில் ரஷ்ய துருப்புக்கள் குவிக்கப்பட்ட பிறகு, மேற்கு நாட்டுத் தலைவருடனான தமது முதலாவது மாஸ்கோ சந்திப்பு முன்னேற்றத்துடன் இருந்ததாக புதின் குறிப்பிடுகிறார்.
யுக்ரேனில் படையெடுப்பதற்கான எந்த திட்டத்தையும் ரஷ்யா மறுத்து வருகிறது.
எவ்வாறாயினும், அத்தகைய நடவடிக்கைக்கான சாத்தியக்கூறு இருப்பதாகக் கருதி மேற்கு நாடுகள் அதிக கவலை கொண்டுள்ளன.
யுக்ரேன் மீது முழு அளவிலான படையெடுப்புக்குத் தேவையான 70% ராணுவ படைகளை ரஷ்யா திரட்டியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
வாஷிங்டனில் ஜெர்மன் ஆட்சித்துறைத் தலைவர் ஓலாஃப் ஸ்கால்ஸை சந்தித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ரயா ஒருவேளை யுக்ரேனை ஆக்கிரமித்தால், ஜெர்மனிக்கான முக்கிய ரஷ்ய எரிவாயுக் குழாயை மூடுவதாக திங்கட்கிழமை எச்சரித்தார்.
பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனும் ரஷ்யா மீதான பொருளாதார தடைகளுக்கு தனது ஆதரவை சுட்டிக்காட்டியுள்ளார்.
தி டைம்ஸ் நாளிதழில் செவ்வாய்த்திழமை எழுதிய கட்டுரையில், ராயல் ஏர் ஃபோர்ஸ் (RAF) போர் விமானங்கள் மற்றும் ராயல் கடற்படை போர்க்கப்பல்களை யக்ரேன் நோக்கி அனுப்ப பிரிட்டன் பரிசீலித்து வருகிறது என்று கூறினார்.
மேற்கத்திய நாடுகள் ஏற்கெனவே நேட்டோ பாதுகாப்புக் கூட்டணியில் யுக்ரேன் உறுப்பினராவதை நிராகரித்தன. மேலும் கிழக்கு ஐரோப்பாவில் தனது ராணுவ இருப்பைக் குறைக்க வேண்டும் என்பது உட்பட ரஷ்யாவின் பல கோரிக்கைகளை அந்த நாடுகள் ஏற்கவில்லை.
அதற்கு பதிலாக பேச்சுவார்த்தையின் பிற பகுதிகளை, உதாரணமாக அணு ஆயுதங்களைக் குறைப்பது குறித்து பரிந்துரைத்துள்ளனர்.

கிழங்குகள் மற்றும் பிளாக்பெர்ரி பழங்களுடன் நிறைந்த உணவு வகைகள் பரிமாறப்பட்ட ஐந்து மணி நேர இரவு விருந்துக்குப் பிறகு, புதினுடன் எமானுவேல் மக்ரோங் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது மக்ரோங், இனி வரும் நாட்கள் "தீர்மானமானவை" மற்றும் "இரு தரப்பும் முன்னெடுக்கக் கூடிய விஷயங்களில் தீவிர விவாதங்கள் தேவை" என்று கூறினார்.
எமானுவேல் மக்ரோங்கின் சில யோசனைகளில் பல "கூட்டு நடவடிக்கைக்கான அடிப்படையை உருவாக்கலாம்" என்றும், அவை குறித்து பேசுவது அநேகமாக இப்போது வெகு சீக்கிரம் எனத் தோன்றுகிறது என்றார் புதின்.
இந்த நிலையில், பிரான்ஸ் அதிபர் யுக்ரேனிய அதிபர் வொலோடிமிர் செலன்ஸ்கியை சந்திப்பதற்காக கீஃபுக்குச் சென்றிருக்கிறார். அதன் பிறகு ரஷ்யா தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் என்று புதின் கூறியிருக்கிறார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
யுக்ரேன் மேற்கத்திய ராணுவ கூட்டணியான நேட்டோவுடன் சேர்ந்து கொண்டு, எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யாவுடன் இணைத்துக் கொள்ளப்பட்ட கிரைமியாவை திரும்பப் பெற முயன்றால், ஐரோப்பா ஒரு பெரிய மோதலில் சிக்கிக்கொள்ளக்கூடும் என்று புதின் முன்பு விடுத்து வந்த எச்சரிக்கையை புதின் நினைவுகூர்ந்தார்.
பதற்றமான கேள்விகளுக்கு மத்தியில் இரு தலைவர்களும் பேசினர். ஒரு கட்டத்தில் பிரெஞ்சு செய்தியாளர்களை நோக்கி, "பிரான்ஸ் ரஷ்யாவுடன் சண்டையிட வேண்டுமா?" என்று செய்தியாளர் ஒருவரிடம் கேட்டார். "இப்படி எல்லாம் தொடர்ந்தால் அது தான் நடக்கும். ஆனால், வெற்றியாளர்கள் யாரும் மிஞ்ச மாட்டார்கள்," என அவர் கூறினார்.

வாஷிங்டனில் ஜெர்மன் ஆட்சித்துறைத் தலைவர் ஓலாஃப் ஸ்கால்ஸ், "ரஷ்யா தனக்குள்ளாகவே மதிப்பிட்ட அளவை விட பாதிப்பு அதிகமாக நடக்கலாம் என்பதை அந்நாடு புரிந்துகொள்வது முக்கியம்" என்று கூறியதாக ஏ.பி செய்தி முகமை தெரிவித்துள்ளது.
ஸ்கோல்ஸ் ஆட்சித்துறைத் தலைவராக பதவியேற்ற பிறகு வாஷிங்டனுக்கு மேற்கொண்ட தனது முதல் பயணத்தில், யுக்ரேன் நெருக்கடி தொடர்பாக அவர் அளித்த பதிலுக்காக விமர்சனத்திற்கு உள்ளானார்.
ரஷ்யா யுக்ரேனை ஆக்கிரமித்தால், ரஷ்யாவுக்கு எதிராக தடைகளை விதிப்பதில், அமெரிக்காவும் ஜெர்மனியும் "முற்றிலும் ஒன்றுபட்டுள்ளன" என்று அவர் கூறினார்.
"நாங்களும் அதே நடவடிக்கைகளை எடுப்போம். அது, ரஷ்யாவுக்கு மிக, மிக கடினமான ஒன்றாக இருக்கும்," என்று அவர் தெரிவித்தார்.
இருப்பினும், அவர் அமெரிக்க அதிபர் பைடனை விட 'நார்ட் ஸ்ட்ரீம் 2' பற்றி (Nord Stream 2) தெளிவற்றவராக இருந்தார். சர்ச்சைக்குரிய குழாய்த்திட்டத்திற்கு அமெரிக்கா "முடிவு கட்டும்" என பைடன் கூறியிருந்தார்.
இத்திட்டம், "ரஷ்யா படையெடுத்தால்" ஜெர்மனிக்கு மாஸ்கோவின் எரிவாயு ஏற்றுமதியை இரட்டிப்பாக்குவதாகும்.
பைடன் இது குறித்து எந்த விவரங்களையும் கொடுக்கவில்லை. "நாங்கள் அதைச் செய்ய முடியும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்" என இது குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
1,225 கி.மீ. (760-மைல்) நார்ட் ஸ்ட்ரீம் 2 (Nord Stream 2) பைப்லைனை உருவாக்க ஐந்து வருடங்கள் ஆனது மற்றும் 11 பில்லியன் டாலர்கள் செலவானது. ஆனால், இது இன்னும் செயல்படத் தொடங்கவில்லை, நவம்பர் மாதம் அது ஜெர்மன் சட்டத்திற்கு இணங்கவில்லை என்று கட்டுப்பாட்டாளர்கள் கூறியதையடுத்து, அதன் ஒப்புதலை நிறுத்தி வைத்தனர்.

பிற செய்திகள்:
- உலகில் முதல் முறை: தண்டுவடம் துண்டான பின்னும் எழுந்து நடக்கும் மனிதர்
- காலநிலை மாற்றம்: 25 பெருநிறுவனங்கள் செய்வதை அம்பலப்படுத்தும் அறிக்கை
- ஹுண்டாய் எதிர்ப்பு ஹேஷ்டேக்குகள் ஏன் திடீரென்று வைரலாகின்றன?
- ஹிஜாப் Vs காவி துண்டு: கர்நாடகாவில் தீவிரமாகும் ஆடை விவகாரம் - அடுத்தது என்ன?
- நிலங்கள் வழியாக உயர் அழுத்த மின்பாதை: திருவண்ணாமலை விவசாயிகள் கணிசமான இழப்பீடு பெற்றது எப்படி?
- கோடநாடு எஸ்டேட்: ஸ்டாலின் அரசுக்கு ஆதாரத்தை திரட்டுவதில் பின்னடைவா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













