You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அன்பு சூழ் உலகு: தத்தளித்து நின்ற ஆப்கன் குடும்பத்தினருக்கு அடைக்கலம் கொடுத்த பெண்ணின் ‘கருணை உள்ளம்’
- எழுதியவர், லூசி மான்னிங் மற்றும் ஃபில் கெம்ப்
- பதவி, பிபிசி
ஸ்காட்லாந்தின் அபர்டீன் என்கிற நகரில் அது மற்றொரு குளிரான இரவு, ஆனால் வெசல் குடும்பம் தங்களது 10 மணி நேர பயணத்தை முடித்து கொள்ள வேண்டிய தருணம் அது. அவர்களை வரவேற்க ஹெல்கா மெக்ஃபர்லேன் அன்போடு காத்திருந்தார்.
"உங்களை வரவேற்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி" என்றார்.
இதுதான் வெசல் குடும்பத்தின் புதிய இல்லம். இது 75 ஆண்டுக்கு முந்தைய கருணையினால் நடைபெறுகிற கைமாறு.
ஹெல்கா ஜெர்மன் அகதியின் ஸ்காட்டிஷ் மகள். இப்போது பிரிட்டனுக்கு தப்பி வந்த ஆஃப்கன் குடும்பத்திற்கு உதவுகிறார்.
ஆப்கானிஸ்தானில் புர்ஹான் வெசல் பிரிட்டன் படைகளுக்கு மொழிப்பெயர்ப்பாளராக இருந்தார். தாலிபன் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியபோது அவர்கள் கொலை செய்யப்படக் கூடும் என தலைமறைவாக இருந்தார்.
ஆகஸ்டு மாதம் சூம் வழியாக அவரிடம் நாம் பேசினோம். அவர் பிரிட்டன் பிரதமரிடம் உதவி கோரியிருந்தார்.
"எனது குடும்பமும் நானும் பாதுகாப்பாக இருக்க அவர் எங்களுக்கு ஒரு வழியை ஏற்படுத்து தர வேண்டும். நான் கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.
தாலிபன் அவரை கண்டுபிடித்துவிட்டால் எந்தவித மன்னிப்பும் இல்லாமல் அவரை கொன்றுவிடும் என்று அவர் தெரிவித்தார்.
தனது உயிரையும், மகப்பேறு மருத்துவரான நார்சிஸ் மற்றும் குழந்தை செபரின் உயிரையும் பணயம் வைத்து ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற முயற்சித்துவந்தவருடன் நாம் தொடர்ந்து தொடர்பில் இருந்தோம்.
காபூல் விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றத்தை எதிர்கொண்ட அவர்கள், அங்கு தற்கொலை தாக்குதல் நடைபெறுவதற்கு ஒரு நாளைக்கு முன் ஆர்ஏஎஃப் (பிரிட்டனின் விமானப்படை) விமானத்தை பிடித்தனர்.
ஆர்ஏஎஃப் விமானத்தில் குடும்பத்துடன் இருக்கும் தனது புகைப்படத்தை பகிர்ந்து அதுதான் தன்னுடைய மகிழ்ச்சியான தருணம் என்று தெரிவித்திருந்தார்.
விமான நிலையத்திற்கு அருகில் இருந்த விடுதியில் தனிமைப்படுத்தலில் இருக்கும் புர்ஹானிடம் நாம் பேசினோம்.
செபர் இந்த புதிய நாட்டை ஜன்னல் வழியாக மட்டுமே பார்த்து கொண்டிருக்கிறார். இங்கு ஆப்கானிஸ்தானிலிருந்து கொண்டு வந்த தனது பொம்மை காருடன் விளையாடிக் கொண்டிருக்கிறார்.
அவர்கள் பிரிட்டனுக்கு நன்றியுடன் இருப்பதாக புர்ஹான் உறுதியளித்தார். ஆஃப்கானில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான மக்களை போல புர்ஹானும் 100 நாட்களை விடுதியில் கழித்து கொண்டிருந்தார்.
செபர் தனது பள்ளியை தொடர்ந்தார். ஆனால் கடந்த வாரம் மத்திய லண்டனில் உள்ள அந்த விடுதியை விட்டு க்ராலே என்ற இடத்துக்கு செல்ல வேண்டும் என்று கூறப்பட்டது. எனவே செபர் பள்ளியை விட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
அக்டோபர் மாதம் இந்த குடும்பம் லண்டனில் இருந்தபோது எனக்கு ஹெல்கா மெக்ஃபாலென் என்ற பெண்ணிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது.
"உங்களது கதை என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. எனது தாய் இரண்டாம் உலகப் போரிலிருந்து தப்பி அகதியாக வந்தவர். அவர் பிரிட்டன் ராணுவத்துக்கு மொழிப்பெயர்ப்பாளராக இருந்தார்." என்றார்.
"என்னால் வெசல் குடும்பத்தை தொடர்பு கொண்டு அவர்களுக்கு ஒரு வீடு வழங்க முடிந்தது." என்று அவர் தனது மின்னஞ்சலில் தெரிவித்திருந்தார்.
"அவர்களின் துயரம் குறித்து பேசியதற்கு உங்களுக்கு நன்றி. அவர்களின் சிரமத்திற்கு உதவும் விதத்தில் எனது இந்த செயல் இருக்கும் என நம்புகிறேன். தற்போது அவர்களின் புதிய தொடக்கம் சற்று எளிமையாகியுள்ளது" என்றார்.
ஜெர்மனியிலிருந்து தப்பிய தனது தாய் மற்றும் பாட்டி மற்றும் சகோதரிக்கு வழியில் பலர் உதவி செய்ததால் மட்டுமே அவர் பிரிட்டனுக்கு வந்து சேர முடிந்ததாக ஹெல்கா தெரிவித்தார்.
"எனது தாய் மற்றும் எனது குடும்பத்தை காப்பாற்றிய அந்த கருணையை, மனிதத்தன்மையை நான் திரும்ப கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்கான நேரம் இது," என்றார் ஹெல்கா.
தங்களுக்கு யார் என்றே தெரியாத ஒரு பெண் தங்களுக்கு தங்க வீடு கொடுப்பதும், கல்விக்கு உதவி செய்வதையும் கண்ட வெசல் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் பூரித்தனர்.
ஆனால் அது அத்தனை எளிதானது அல்ல.
அக்டோபர் இறுதியில் அந்த குடும்பம் பீட்டர்பரோவிற்குச் செல்ல வேண்டும் என குடியேறிகள் பாதுகாப்பு சட்ட ஒழுங்கு துறை அலுவலகம் தெரிவித்தது.
எனவே வெசலின் குடும்பத்தினர் சார்பாக அதிகாரிகளுடன் போராடினார் ஹெல்கா. ஹெல்காவிற்கு பார்கின்ஸன்ஸ் நோய் உள்ளது அவர் தன் பெரும்பாலான நேரத்தை படுக்கையில் தான் கழிப்பார். ஆனால் வெசலின் குடும்பத்தினருக்காக இந்த போராட்டத்தை மேற்கொண்டார். உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினரின் தலையீட்டால் அவர்கள் பிரிட்டன் அரசிமிடருந்து சலுகைகளைப் பெற முடிந்தது.
வெசல் குடும்பத்தினர் பீட்டர்பரோவிற்கு அனுப்பப்பட்டனர், ஆனால் ஒருசில மணி நேரங்களில் ஏதோ தவறு நடந்துவிட்டது என அவர்கள் லண்டனுக்கு திரும்ப அனுப்பப்பட்டனர்.
திங்களன்று ஒரு வழியாக குடியேறிகள் பாதுகாப்பு சட்ட ஒழுங்குத் துறை அலுவலகம் அவர்களை ஸ்காட்லாந்தில் உள்ள அபர்டீனுக்கு செல்லலாம் என தெரிவித்தது.
வெசல் குடும்பத்தினர் ஒருசில பைகள் மற்றும் உள்ளூரில் ஒரு குடும்பம் அவர்களுக்கு கொடுத்த செபரின் ஸ்கூட்டருடன் தங்களது புதிய நகருக்கு வந்தனர்.
முன்பின் அறியாத நபர்களின் உதவியால் காபூலில் இருந்து வந்த ஒரு குடும்பம், தற்போது ஸ்காட்லாந்து குடும்பமாக மாறியுள்ளது.
"உனது புதிய வீட்டிற்கு வரவேற்கிறேன்" என ஹெல்கா அவர்களை வரவேற்று செபரின் அறையை காட்டினார். அவ்வறையிலிருந்த படுக்கை மீது பொம்மை கார்கள் கொண்ட விரிப்பு இருந்தது. வீட்டை சுற்றிப்பார்த்த நார்சிஸுக்கு கண்ணீர் வந்துவிட்டது.
தனது வேலை, உறவினர்களை விட்டு, மூன்று மாதங்களில் மூன்று விடுதிகள் மாறி, அலைந்து திரிந்த அவர்களுக்கு தற்போது ஒரு நிம்மதி கிடைத்துள்ளது.
ஹெல்கா அவர்களை வரவேற்று அவர்களுக்கு உணவு வழங்கினார்.
புர்ஹானுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. "உங்களது கருணை உள்ளத்தை என்றுமே நாங்கள் மறக்கமாட்டோம்" என கண்ணீர் மல்க கூறினார்.
"நல்ல உள்ளம் கொண்டவர்கள் இன்றும் உலகில் உள்ளனர் என்பதற்கு நீங்கள் ஓர் அடையாளம்," என ஹெல்காவை பார்த்து மெச்சினார் புர்ஹான்.
வெசல் குடும்பத்தினர் அதிர்ஷ்டமிக்கவர்கள். ஆனால் பல ஆஃப்க்ன் அகதிகள் தற்போதும் விடுதியில் தங்கியுள்ளனர்.
அவர்கள் பாதுகாப்பாகதான் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்கள் வாழ்க்கையை வாழ்வதற்கான சந்தர்பத்தை தேடிக் கொண்டிருக்கின்றனர். தங்களின் குழந்தைகளுக்கு நிரந்தரமான கல்வி கிடைக்க வேண்டும் என ஆவலோடு காத்து கொண்டிருக்கின்றனர்.
ஹெல்கா கடைசியாக ஒரே ஒரு செய்தியை வெசல் குடும்பத்தினரிடம் சொல்ல விரும்பினார். அது, "நீங்கள் தற்போது எனது குடும்பம். உங்களை நான் பெரிதும் வரவேற்கிறேன்." என்பதுதான்.
பிற செய்திகள்:
- "அவர்களைக் கொன்றுவிடுவார்கள்... எங்களில் யாரும் மீதம் இருக்கமாட்டோம்" வருந்தும் அமேசான் பழங்குடி பெண்
- இலங்கையில் ஒரே நாளில் மின்சார தடை, குடிநீர் பிரச்னை, எரிவாயு விநியோகத்தில் சிக்கல் - அவதிப்படும் மக்கள்
- Money Heist சீசன் 5 (இரண்டாம் பாகம்) விமர்சனம்
- அ.தி.மு.க. உள்கட்சி தேர்தலுக்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம்
- 'சம்பள பாக்கி' - இம்ரான் கானுக்கு சங்கடத்தை ஏற்படுத்திய தூதரகத்தின் ட்வீட்
- மாலத்தீவு டூ ஸ்காட்லாந்து: புதிய வாழ்வை தொடங்க 8,000 கி.மீ கடந்து வந்த கடல் ஆமை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்