Money Heist சீசன் 5 (இரண்டாம் பாகம்) விமர்சனம்

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

நடிகர்கள்: உர்சுலா கார்பரோ, அல்வாரோ மோர்டே, இட்சியார் இடினோ; உருவாக்கியவர்: அலெக்ஸ் பினா.

உலகளாவிய ஒரு சூப்பர் ஹீரோ திரைப்படம் அல்லது ஜேம்ஸ் பாண்ட் திரைப்படம் வெளியாகும்போது ரசிகர்கள் எவ்வளவு பரபரப்புடன் காத்திருப்பார்களே அந்த அளவு எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியிருக்கிறது Money Heist (La Casa De Papel) தொடரின் இறுதி பாகம்.

ஒரு சிறிய முன் கதைச் சுருக்கம்: (Spoiler alert) ஸ்பெயின் நாட்டின் ராயல் மின்ட் ஆஃப் ஸ்பெயினைக் கொள்ளையடிக்க, ஃபுரொஃபசர் என்பவர் வழிகாட்டுதலில் ஒரு குழு உள்ளே நுழைகிறது. அந்தக் குழுவில் இருப்பவர்களுக்கெல்லாம் டோக்கியோ, மாஸ்கோ, பெர்லின், நைரோபி, ரியோ, டென்வர், ஹெல்சிங்கி, ஆஸ்லோ என உலகின் பெரிய நகரங்களின் பெயர்களே சூட்டப்பட்டிருக்கும்.

இந்தக் குழு பணம் அச்சிடும் இடத்தில் இருப்பவர்களை பணயக் கைதிகளாக்கி, பல்வேறு சோதனைகளைத் தாண்டி வெற்றிகரமாக கொள்ளை அடித்து முடியும்போது சீசன் 2 நிறைவடைகிறது.

சீசன் 3-ல் பேங்க் ஆஃப் ஸ்பெயினில் களமிறங்குகிறது அதே வெற்றிகரமான கொள்ளையர்கள் கூட்டணி. அங்கிருக்கும் 90 டன் தங்கத்தை கொள்ளையடிப்பதுதான் திட்டம். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும்போது பல பிரச்னைகள் உருவாகின்றன. புரொஃபசரின் குழுவைச் சேர்ந்த சிலர் இறந்துவிடுகிறார்கள். சிலர் படுகாயமடைகிறார்கள்.

ஐந்தாவது சீசனின் முதல் பாகத்தில் கிட்டத்தட்ட புரொஃபசரின் கொள்ளைத் திட்டமே தோல்வியடையும் நிலைக்கு வந்துவிடுகிறது. புரெஃபசர் குழுவுக்கு ஒரு பெரும் இழப்போடு, ஐந்தாவது சீசனின் முதல் பகுதி நிறைவுக்கு வந்தது.

ஐந்தாவது சீசனின் இந்த இரண்டாவது பாகத்தில் மொத்தம் 5 எபிசோடுகள். தங்கம் எப்படி வங்கியைவிட்டு எப்படி கடத்தப்படுகிறது, புரஃபசருக்கு ஏற்பட்ட நெருக்கடியிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதெல்லாம் இந்த பாகத்தில் இடம்பெற்றிருக்கும் என்பது எல்லோராலும் யூகிக்கக்கூடியதுதான். ஆனால், மேலும் சில அதிரடித் திருப்பங்கள் இந்த இறுதி பாகத்தில் இடம்பெற்றிருக்கின்றன.

இந்தத் தொடரின் நான்காவது சீஸன் ரொம்பவுமே ரசிகர்களைச் சோதித்த நிலையில், ஐந்தாவது சீஸனின் முதல் பகுதியில் பழைய அதிரடி பாணிக்கு திரும்பியிருந்தார்கள். ஆனால், இந்த இறுதிப் பகுதி முழுவதும் விறுவிறுப்பான அதிரடி காட்சிகள் நிரம்பியது எனச் சொல்ல முடியாது.

ஏகப்பட்ட காதல் காட்சிகள், ஃப்ளாஷ்பேக்குகள், உருக்கமான கதைகள் என்று பல இடங்களில் இந்தத் தொடர் மிக மெதுவாக நகர்கிறது. ஆனால், ஃபுரஃபசரின் பின்னணி, சில எதிர்பாராத திருப்பங்கள், தங்கம் எப்படிக் கடத்தப்படுகிறது, எப்படி ஒட்டுமொத்த நெருக்கடியிலிருந்து ஃபுரஃபசரும் அவரது குழுவினரும் தப்புகிறார்கள் போன்ற முக்கியப் பகுதிகள் இந்த இறுதிப் பகுதியில் இருப்பதால், அதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் தொடர்ந்து தொடரைப் பார்க்கவைக்கிறது.

முந்தைய சீஸன்களில் ஒரே ஒரு முறை அல்லது இரண்டு முறை ஃபுரஃபசரின் குழுவுக்கு பெரிய நெருக்கடி வரும்; அதிலிருந்து அவர்கள் எப்படி தப்புவார்கள் என்று காத்திருப்போம். ஆனால், இந்த ஐந்து எபிசோடுகளில் இந்தக் குழுவுக்கு பல முறை நெருக்கடி நேர்கிறது. ஒவ்வொரு முறையும், அந்த நெருக்கடியை எதிர்பார்த்து முன்கூட்டியே திட்டமிட்டதைப்போல, ஃபுரொஃபசர் காய்களை நகர்த்த, நெருக்கடி முடிவுக்கு வருகிறது. ஒரு அளவுக்கு மேல் இதை நம்புவது கடினமாக இருக்கிறது.

Money Heist தொடர் துவங்கியபோது இதன் மீது உருவாக ஆரம்பித்த ஆச்சரியமும் பிரமிப்பும் இந்த ஐந்தாவது சீசனில் கிட்டத்தட்ட நீங்கிவிடுகிறது. ஒரு பரபரப்பான, சாகஸ கதைக்கான தரத்திற்கு வந்துவிடுகிறது தொடர். Breaking Bad, Chernobyl தொடர்களின் தரத்தோடு இதனை நிச்சயம் ஒப்பிட முடியாது.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, 4வது சீஸனின் சில எபிசோட்களைத் தவிர, ரசிகர்களை தொடர்ந்து பரபரப்பாக ரசிக்கவைத்த தொடர் என்ற வகையில் ஒரு நீங்காத இடத்தைப் பிடித்திருக்கிறது இந்த Money Heist!

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :