You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு சங்கடத்தை ஏற்படுத்திய செர்பியாவில் உள்ள தூதரகத்தின் ட்வீட்
செர்பியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் அலுவல்பூர்வ ட்விட்டர் கணக்கில் இன்று (டிசம்பர் 3) வெளியிடப்பட்ட ஒரு பதிவு காரணமாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு ஒரு சங்கடமான சூழ்நிலை உருவானது. ஆனால், அந்த ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதால், சர்ச்சைக்குரிய அந்தப் பதிவு வெளியிடப்பட்டது என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
என்ன நடந்தது?
ஐரோப்பிய நாடான செர்பியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் ட்விட்டர் கணக்கில் இன்று காலை ஒரு பதிவு வெளியானது.
''அனைத்து முந்தைய சாதனைகளையும் விலைவாசி உயர்வு முறியடித்துவரும் நிலையில், மூன்று மாதம் ஊதியம் இல்லாமல், அரசு அதிகாரிகளான நாங்கள் எவ்வளவு காலம், தொடர்ந்து அமைதியாகவே உழைத்துக்கொண்டிருக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்," என்று பிரதமர் இம்ரான் கானின் ட்விட்டர் கணக்கை டேக் செய்து கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
"கட்டணம் செலுத்தாததால் எங்கள் குழந்தைகள் பள்ளிகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இதுதான் புதிய பாகிஸ்தானா," என்றும் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
இம்ரான் கானை பகடி செய்யும் வகையில் அமைந்திருந்த பாடல் ஒன்றும் இத்துடன் சேர்த்துப் பதிவிடப்பட்டிருந்தது.
"என்னை மன்னிக்கவும் இம்ரான் கான், எனக்கு வேறு வழி இல்லை," என்றும் இன்னொரு பதிவு அதே கணக்கில் இருந்து பதிவிடப்பட்டிருந்தது.
இந்தப் பதிவுகள் தூதரகத்தின் ட்விட்டர் கனக்கைப் பின்தொடர்பவர்களுக்குத் திகைப்பளிக்கும் வகையில் அமைந்திருந்தன.
சில பயனாளிகள் அந்தப் பதிவுக்கு ஆதரவாகப் பின்னூட்டமிட்டனர். வேறு சிலரோ அரசுக்குச் சொந்தமான இந்த ட்விட்டர் கணக்கில் இருந்து இத்தகைய பதிவைப் பகிர்ந்தது யார் என்றும் கேள்வி எழுப்பினர்.
எனினும், இதற்கு பாகிஸ்தான் அரசு தரப்பில் இருந்து யாரும் அந்தப் பின்னூட்டத்தில் பதில் அளிக்கவில்லை. இந்தப் பதிவுகள் கவனம் பெற்றதும், பதிவிடப்பட்ட சற்று நேரத்திலேயே நீக்கப்பட்டன.
பாகிஸ்தான் அரசு சொல்வது என்ன?
இரண்டு ட்வீட்களும் பதிவிடப்பட்ட சுமார் ஒரு மணி நேரத்தில் பிரதமர் இம்ரான் கானின் ஆலோசகர் டாக்டர் அர்ஸ்லான் காலித் ட்விட்டரிலேயே விளக்கம் அளித்திருந்தார்.
"செர்பியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் தகவல் தெரிவிக்கிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது," என்று அவர் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்