You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு - தமிழ்நாடு அரசியல்
அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல்களுக்கு இடைக்காலத் தடைவிதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் அந்தப் பதவிகளுக்கு விருப்பமனு வாங்க வந்த ஒருவர் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திலிருந்து விரட்டப்பட்டார்.
அ.இ.அ.தி.மு.கவின் ஒருங்கிணப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு உரியவர்கள் அந்தக் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுவார்கள் என டிசம்பர் 1ஆம் தேதி நடந்த அ.தி.மு.கவின் செயற்குழு கூட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து இந்தப் பதவிகளுக்கான தேர்தல் டிசம்பர் ஏழாம் தேதி நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தலுக்கான தேர்தல் அதிகாரிகளாக பொன்னைய்யன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு டிசம்பர் மூன்று மற்றும் நான்காம் தேதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று கூறப்பட்டிருந்தது. அ.தி.மு.கவில் ஐந்தாண்டுகள் தொடர்ந்து கட்சியில் உள்ள இரண்டு பேர் ஒன்றாக இணைந்து இந்த வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும்.
ஆகவே விரைவில் ஓ. பன்னீர்செல்வமும் எடப்பாடி கே. பழனிசாமியும் இணைந்து வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வேறு இரண்டு பேர் ஒன்றாக மனு தாக்கல் செய்து, அந்த மனு ஏற்கப்பட்டால் ஏழாம் தேதி தேர்தல் நடைபெறும். இல்லாவிட்டால், ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். போட்டியின்றி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும்.
இந்த நிலையில், இந்தத் தேர்தலை நிறுத்த வேண்டுமெனக் கோரி திருச்செங்கோடு தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் "தேர்தலுக்கு 21 நாட்களுக்கு முன்பாக நோட்டீஸ் கொடுக்க வேண்டுமென்ற விதி பின்பற்றப்படவில்லை கட்சியின் உறுப்பினர்களுக்கு அட்டை வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளது. வாக்களிக்க தகுதியான உறுப்பினர்களின் பட்டியல் முறையாக தயாரிக்கப்படவில்லை. தற்போதைய தேர்தல் அறிவிப்பை ரத்து செய்துவிட்டு, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியை நியமித்து, 21 நாட்கள் முன்பே நோட்டீஸ் வெளியிட்டு அதற்குப் பின்னர் தேர்தலை நடத்த வேண்டும்" என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை இன்று பிற்பகல் நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அ.தி.மு.க. சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கே.சி. பழனிச்சாமிக்கும் அ.தி.மு.கவுக்கும் தொடர்பில்லையென்பதால் அவரது மனுவை ஏற்கக்கூடாது, தேர்தலுக்கு இடைக்காலத் தடை விதிக்கக்கூடாது என்று கோரினார்.
இதையடுத்து எடப்பாடி கே. பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, அனைத்துத் தரப்பையும் கேட்காமல் தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது என்றும் முறைகேடு நடப்பது தெரிந்தால் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்த வழக்கின் விசாரணை ஜனவரி 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திருச்செங்கோடு தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான கே.சி. பழனிச்சாமி 2018ஆம் ஆண்டு பிப்ரவரியில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
இதற்கிடையில் இன்று நன்பகலில் ஒருங்கிணைப்பாளர் தேர்தலில் போட்டியிட விண்ணப்பம் வாங்க ஓமப்பொடி பிரசாத் சிங் என்பவர் அ.தி.மு.கவின் தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அவர் அங்கிருந்த செய்தியாளர்களிடம் பேச முயன்றபோது, அங்கே கூடியிருந்த தொண்டர்கள் அவரை அடித்துத் துரத்தினர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்