ஜப்பானிய இளவரசி நியூயார்க் வருகை - கணவரோடு வாழ அரச குடும்பத்தை துறந்தவர்

முன்னாள் இளவரசி மகோ

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, முன்னாள் இளவரசி மகோ

அரச குடும்ப அந்தஸ்தைத் துறந்து தன் காதல் கணவருடன் நியூயார்க் சென்றடைந்தார் ஜப்பானின் முன்னாள் இளவரசி மகோ.

கடந்த மாதம் பெரிய ஆரவாரமின்றி தன் நீண்ட நாள் காதலரை மணந்து கொண்ட இளவரசி மகோ, ஞாயிற்றுக்கிழமை காலை டோக்கியோ விமானநிலையத்தில் அமெரிக்காவுக்கு விமானம் ஏறினார்.

டோக்யோ விமான நிலையத்தில் கிட்டத்தட்ட 100 பத்திரிகையாளர்களைக் கடந்த மகோ மற்றும் கொமுரு ஒரு பத்திரிகையாளருக்கு கூட பதிலளிக்கவில்லை. அவர்கள் இருவருக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

அமெரிக்காவில் ஒரு சட்ட நிறுவனத்தில் பணியாற்றும் கெய் கொமுரு மற்றும் மகோ, நியூயார்க் நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு எடுக்க உள்ளனர். மேலும் மகோ நியூயார்க்கில் ஒரு புதிய வேலையைக் கண்டுபிடித்து சேர இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

மகோ மற்றும் கெய் கொமுருவின் திருமண பேச்சுக்கள் எல்லாம் ஒருபுறமிருக்க, கொமுரு நியூ யார்க் மாகாண பார் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை எனவும் செய்திகள் வெளியானது. நியூ யார்க்கில் வழக்குரைஞர்கள் தங்கள் பணிகளைத் தொடர இத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

தற்போது கொமுரு ஒரு சட்ட எழுத்தராக பணியாற்றி வருகிறார். கொமுரு மற்றும் மகோ அமெரிக்காவுக்கு குடியேறுவதை, பிரிட்டனின் ஹாரி மற்றும் மேகன் மார்க்கல் குடியேறியதோடு பலரும் ஒப்பிடுகிறார்கள். மகோ மற்றும் கொமுரு ஜப்பானின் மேகன் மற்றும் ஹாரி என அழைக்கப்படுகின்றனர்.

அவர்கள் இருவரும் கடந்த அக்டோபர் 26ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர் என ஜப்பானின் அரச குடும்ப விவகாரங்கள் முகமை (இம்பீரியல் ஹவுஸ்ஹோல்ட் ஏஜென்சி) கூறியுள்ளது.

கொமுரு மற்றும் இளவரசி மகோ கடந்த 2018ஆம் ஆண்டே திருமணம் செய்து கொள்ள தீர்மானித்திருந்தனர். ஆனால் கொமுருவின் குடும்பம் சில நிதி சார் பிரச்சனைகளை எதிர்கொண்டதால் திருமணம் ஒத்திப் போனது.

திருமணத்துக்குப் பிறகு இந்த ஜோடி அமெரிக்காவில் குடியேற உள்ளதாக முன்பே கூறப்பட்டு வந்தது நினைவுகூரத்தக்கது.

கெய் கொமுரு மற்றும் மகோ

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கெய் கொமுரு மற்றும் மகோ

மகோ மற்றும் கெய் கொமுரு மீது அபரிவித ஊடக வெளிச்சம் பட்டதால், இளவரசி மகோ மன அழுத்தத்துக்கு ஆளானார் என ஜப்பானின் அரச குடும்ப விவகார முகமை கூறியுள்ளதாக, ஜப்பானின் க்யோடோ செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது.

கொமுரு மற்றும் இளவரசி மகோ கடந்த 2012ஆம் ஆண்டு, டோக்யோவில் உள்ள சர்வதேச கிறிஸ்துவ பல்கலைக்கழகத்தில் முதல் முறையாக சந்தித்தனர்.

2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்ள நிச்சயித்துக் கொண்டனர். 2018ஆம் ஆண்டு திருமணம் நடப்பதாக இருந்தது. கொமுருவின் தாய் நிதி நெருக்கடியில் இருந்த விஷயம் வெளி வரத் தொடங்கியது. அவர் (கொமுருவின் அம்மா) தனக்கு முன்பு நிச்சயிக்கப்பட்டிருந்த நபரிடமிருந்து பெற்ற கடனை திருப்பிச் செலுத்தவில்லை என்று கூறப்பட்டது.

இவர்கள் திருமணத்துக்கு முன்பே, கடன் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என, இளவரசி மகோவின் தந்தை ஃபுமிஹிடோ கூறினார் என்பதும் இங்கு நினைவுகூரத்தக்கது.

ஜப்பானிய அரச குடும்பத்து வழக்கப்படி, அரச குடும்பத்திலிருந்து வெளியேறுவோருக்கு 150 மில்லியன் யென் (சுமார் 1.3 மில்லியன் அமெரிக்க டாலர்) பணம் கொடுப்பது வழக்கம். அதை இளவரசி மகோ பெறவில்லை. அதே போல, அவரது திருமணத்தில் ஜப்பானிய அரச குடும்பத்தின் வழக்கங்கள் சடங்குகள் பின்பற்றப்படாமல் மிக எளிமையாக நடந்தது.

கெய் கொமுரு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கெய் கொமுரு

இந்த இரு விஷயங்களையும் இளவரசி மகோ தவிர்த்ததால், ஜப்பானிய அரச குடும்பத்திலிருந்து வெளியேறி பணத்தை பெறாத, சடங்குகளை மேற்கொள்ளாத முதல் பெண் என்கிற பெருமையையும் மகோ பெற்றுள்ளார்.

ஜப்பானிய சட்டப்படி, அந்நாட்டின் அரச குடும்பத்தை சேர்ந்த பெண்கள், பொது மக்களில் ஒருவரை திருமணம் செய்து கொண்டால், அப்பெண் தன் அரச குடும்ப தகுதியை இழந்துவிடுவார். ஆனால் ஒரு அரச குடும்பத்து ஆண், ஒரு வெகுஜன பெண்ணை திருமணம் செய்து கொண்டால், அவர் தன் அரச குடும்ப தகுதியை இழக்கமாட்டார்.

கொமரு சமீபத்தில் 'போனிடெய்ல்' சிகை அலங்காரம் செய்திருந்த படம் இணையத்தில் பரவியது. தோற்றத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஜப்பானில், கொமரு இளவரசி மகோவை திருமணம் செய்து கொள்ள தகுதியானவர் அல்ல என்பதற்கு இந்த வகையான சிகை அலங்காரங்களே சாட்சி என சிலர் கருதினர்.

கொமருவுக்கு ஜப்பானிய அரச குடும்பத்துடன் இருக்கும் நெருக்கம் காரணமாகத்தான் அமெரிக்க சட்டப் பள்ளியில் இடம் கிடைத்ததாகவும் சில தலைப்புச் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :