You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உடல்நலம்: தூக்கத்தில் வரும் கனவுகள் ஏன் நினைவில் இருப்பதில்லை?
- எழுதியவர், ஸ்டீபன் டவுலிங்
- பதவி, பிபிசி ஃபியூச்சர்
நான் எனது சிறுவயதில் பயின்ற தொடக்கப் பள்ளிக்கு வெளியே, முன் வாசலில் ஆசிரியர்களின் வாகன நிறுத்துமிடம் அருகே நின்று கொண்டிருக்கிறேன். இது ஒரு பிரகாசமான வெயில் சுட்டெரிக்கும் நாள். என் வகுப்புத் தோழர்கள் சுற்றி நிற்கிறார்கள். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இருக்க வேண்டும்.
எனது ஆசிரியர்களில் சிலர் அருகில் இருப்பதாக எனக்கு மங்கலான உணர்வு இருக்கிறது. ஆனால் எனது கவனம் முழுவதும் இரண்டு பெரியவர்கள் மீது உள்ளது. அவர்கள் யாரெனத் தெரியவில்லை. ஒருவரை உற்றுப் பார்க்கிறேன். அவரது தலைமுடியின் பளபளப்பு முதல் அவரது சன்கிளாஸில் உள்ள தங்க லென்ஸ்கள் வரை எல்லாம் தெரிகிறது. இரைச்சலை ஏற்படுத்தும் ஒரு வகையான சாதனத்தை அவர் வைத்திருக்கிறார். நான் காதை மூடுகிறேன். என் பள்ளித் தோழர்கள் அனைவரும் அதையே செய்கிறார்கள். அந்த மனிதர் வெறித்தனமாகச் சிரிக்கிறார்.
நான் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்பு அந்தக் கனவைக் கண்டேன். ஆனால் அந்த விவரங்களை நேற்று கண்டதைப் போல என்னால் நினைவில் கொள்ள முடிகிறது. ஆனால் இந்த வாரத்தின் தொடக்கத்தில் நான் கண்ட கனவில் இருந்து எதையும் கூறும்படி என்னிடம் கேட்டால், எனக்கு எதுவும் தெரியாது. நான் கனவு காண்கிறேன் என்றால், என்னுடைய விழித்திருக்கும் மனதில் எதுவும் நிலைத்திருக்காது.
நம்மில் பலருக்கு, கனவுகள் கிட்டத்தட்ட நினைவில் இல்லாத ஒன்று. சிலருக்கு பகலில் நடந்ததைப் போல அனைத்தும் நினைவில் இருக்கும். ஆயினும் கடந்த காலக் கனவுகளை துல்லியமான விவரங்களுடன் நினைவுகூரக்கூடிய சிலருக்குக்கூட சில கனவுகளைப் பற்றிய நினைவே இருக்காது.
ஏன் நாம் கனவு காண்கிறோம்? அவற்றை நம்மால் நினைவில் வைத்துக் கொள்ள முடியுமா? இவ்விரு கேள்விகளுக்குமான விடை நமது தூங்கும் உடல் மற்றும் ஆழ்மனம் ஆகியவற்றின் உயிரியலில் அடங்கியிருக்கிறது.
நாம் முன்பு நினைத்ததை விட தூக்கம் மிகவும் சிக்கலானது. தூக்கத்தை தழுவுவதன் மூலம் ஒட்டு மொத்தமாக நாம் நினைவிழந்து விடுவதாகக் கருதுகிறோம். ஆனால் அப்படி நடப்பதில்லை. ஓய்வெடுக்கும் நமது மூளை, ரோலர் கோஸ்டர் போல இயங்குகிறது. சில நிலைகளில் அது அமைதியாகப் பயணிக்கும். சில நிலைகளில் அது முழுவதும் பரபரப்பாகச் செயலாற்றிக் கொண்டிருக்கும்.
ரேபிட் ஐ மூவ்மென்ட் (REM) எனப்படும் தூக்க நிலையுடன் கனவு மிகவும் நெருக்கமாக தொடர்புடையது. REM நிலையிலான தூக்கம் சில நேரங்களில் ஒத்திசைவற்ற தூக்கம் என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் இது விழித்திருப்பதற்கான சில அறிகுறிகளைக் கொண்டிருக்கிறது. அதாவது ஆழ்ந்த தூக்கத்துக்கும் விழித்திருக்கும் நிலைக்கும் இடைப்பட்டது என எடுத்துக் கொள்ளலாம்.
REM தூக்கத்தில், கண்கள் வேகமாகச் செயல்படுகின்றன. சுவாசம் மற்றும் ரத்தச் சுழற்சியில் மாற்றங்கள் உள்ளன. அடோனியா எனப்படும் முடங்கிய நிலைக்கு உடல் கொண்டு செல்லப்படுகிறது. இது தூக்கத்தின் போது சுமார் 90 நிமிட சுழற்சியில் நிகழ்கிறது. இந்தக் கட்டத்தில் தான் நம் மூளை கனவு காண முனைகிறது.
REM நிலையின் போது நமது மூளையின் முக்கியமான பகுதிகளுக்கு ரத்தம் கூடுதலாகப் பாய்கிறது. மூளையின் கார்டெக்ஸில் இருக்கும் நினைவுகள் மூலம் நமது கனவுக்கு ஸ்கிரிப்ட் எழுதப்படுகிறது. லிம்பிக் சிஸ்டம் எனப்படும் உணர்வுச் செயலி அந்த ஸ்கிரிப்டில் உணர்வுகளைத் தூவுகிறது.
கனவு காண்பதற்கு உகந்த ரெம் தூக்க நிலையில் நாம் இருக்கும்போது, இவ்விரு அங்கங்களும் அந்த உணர்வுப் பூர்வமான ஸ்கிரிப்டை ஒரு திரைப்படம் போல நமக்கு விரித்துக் காண்பிக்கின்றன. அந்த நேரத்தில் என்ன நடந்தாலும், நமது விழிப்புநிலைத் திறன்களை இயக்கக்கூடிய மூளையின் முன்பக்க மடல்கள் அமைதியாகவே இருக்கும்.
அதனால் அந்த உணர்வு மசாலா சேர்க்கப்பட்ட ஸ்கிரிப்டில் என்ன எழுதப்பட்டிருந்தால், படம்போல நமக்கு என்ன காட்டப்பட்டாலும் அதை நாம் கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்கிறோம். விழிப்பு ஏற்படும்வரை அப்படித்தான்.
இதில் சிக்கல் என்னவென்றால் காட்டப்படும் காட்சிகள் எவ்வளவு குழப்பமாக இருக்கிறதோ, அதை அப்படியே பிடித்து நமது நினைவில் வைத்துக் கொள்வது அவ்வளவு கடினமாக இருக்கும். தெளிவான கட்டமைப்பைக் கொண்ட கனவுகளை நாம் நினைவில் கொள்வது மிகவும் எளிதானது என்று உளவியல் பேராசிரியரும் எழுத்தாளருமான டீட்ரே பாரெட் கூறியிருக்கிறார்.
ஆனால் கனவுக் காட்சிகளை நமது நினைவில் வைத்திருப்பதற்காகவே ஒரு ரசாயன மூலக்கூறு வேலை செய்து கொண்டிருக்கிறது. அதன் பெயர் நோராட்ரீனலின். இது ஒரு ஹார்மோன். இது உடலையும் மனதையும் செயலுக்குத் தூண்டுவதுதான் இதன் முதன்மையான பணி. ஆழ்ந்த தூக்கத்தில் அதன் அளவு இயற்கையாகவே குறைவாக இருக்கும்.
"நமது விழிப்பு மற்றும் தூக்க நிலைகளுக்கு இடையே தெளிவான வரையறைகள் உள்ளன. கனவு வாழ்க்கை மற்றும் விழித்திருக்கும் வாழ்க்கை முற்றிலும் வேறுபட்டது என்பது ஒரு நல்ல விஷயம்" என்று லாசேன் பல்கலைக்கழக மருத்துவமனையின் தூக்க ஆராய்ச்சி மருத்துவர் பிரான்செஸ்கா சிக்லாரி கூறுகிறார்.
"கனவில் நடந்த அனைத்தையும் நினைவில் வைத்திருந்தால், உங்கள் நிஜ வாழ்க்கையில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள இயலாமல் குழம்பி விடுவீர்கள்"
தூக்கக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் விழிப்பு மற்றும் தூக்க வாழ்க்கைக்கு இடையே உள்ள வித்தியாசத்தைக் கூறுவது கடினம். இதனால் அவர்களுக்கு குழப்பம் ஏற்படலாம் என்றும் அவர் கூறுகிறார்.
"தங்கள் கனவுகளை நன்றாக நினைவில் வைத்திருக்கும் நபர்களும் உள்ளனர். அவர்கள் உண்மையில் அந்த நினைவுகளை தங்களது விழிப்பு நிலையில் பொருத்திப் பார்க்கத்தொடங்குகிறார்கள்."
நாம் அதிகமாக நினைவில் வைத்திருக்கும் கனவுகள் நமது தூக்கநிலையின் குறிப்பிட்ட கட்டத்தில் வருபவை.
"பொதுவாக நாம் REM தூக்கத்தில் மிகவும் தெளிவாகக் கனவு காண்கிறோம். இது மூளையில் நோராட்ரீனலின் அளவு குறைவாக இருக்கும் போது நடக்கிறது" என்று பிரான்செஸ்கா சிக்லாரி கூறுகிறார்.
விழித்தெழுவதற்கு சற்று முன்புகூட நமக்குக் கனவுகள் வரலாம். ஆனால் அலாரம் அடித்துத் திடுக்கிடும்போது நமது நோரோட்ரீனலின் அளவு திடீரென உயர்ந்துவிடுகிறது. இதன் பிறகு கனவைத் தொடர்வது கடினமாகிவிடும்.
"தங்கள் கனவுகளை ஏன் நினைவில் கொள்ள முடியவில்லை என்ற கேள்வியை சிலர் என்னிடம் கேட்கிறார்கள். மிக விரைவாகத் தூங்கிவிடுவது, ஆழ்ந்து தூங்குவது, அலாரம் அடித்தவுடன் எழுந்திருப்பது போன்றவைதான் காரணம் என்று நான் கூறுகிறேன். ஆனால் அவர்கள் பெரும்பாலும், 'அது எப்படி உங்களுக்குத் தெரியும்?' என்றுதான் கேட்கிறார்கள்" என்கிறார் ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் தூக்கம் தொடர்பான ஆராய்ச்சியாளர் ராபர்ட் ஸ்டிக்கோல்ட்.
தூக்கமும் விழிப்புமாக மனம் அலைந்து கொண்டிருக்கும்போது கனவு போன்ற காட்சிகள் தெரிகின்றன. இதை "ஹிப்னாகோஜிக் ட்ரீமிங்" என்று அழைக்கிறார்கள்.
"ஆழ்ந்த தூக்கத்துக்குச் செல்லும் முதல் ஐந்து அல்லது 10 நிமிடங்களில் இந்த நிலை வருகிறது. நீங்கள் வேகமாகவே ஆழ்ந்த தூக்கத்துக்குச் சென்றுவிட்டால் விழிக்கும்போது எதுவும் நினைவில் இருக்காது" என்கிறார் ஸ்டிக்கோல்ட்.
ஒவ்வொருவரும் அவரவர் தூக்கத்தைப் பொருத்தவரை மிகவும் தனித்தன்மை கொண்டவர்கள். கனவுகளை நினைவில் கொள்வது என்பது பலருக்கும் தேவையற்ற ஒன்றுதான். இருப்பினும் உங்கள் கனவுகளை நீங்கள் உறுதியாக நினைவில் கொள்ள விரும்புகிறீர்களா? இதற்கு உதவும் சில பொதுவான குறிப்புகள் உள்ளன.
"நாம் எழுந்தவுடன் நமது கனவுகள் நம்பமுடியாத அளவிற்கு தெளிவற்றிருக்கும். அது ஏன் என்பதற்கான பதில் எங்களிடம் இல்லை. ஓய்வு நாள்களான சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை காலை நேரத்தில் கனவுகளை நினைவில் கொள்ள முயற்சிக்கலாம்" " என்று ஸ்டிக்கோல்ட் கூறுகிறார்.
"விழிப்பு வரும்போது அமைதியாகப் படுத்துக் கொள்ளுங்கள். உங்கள் கண்களைத் திறக்காதீர்கள். அப்படியே 'மிதக்க' முயற்சி செய்யுங்கள். அதே நேரத்தில் உங்கள் கனவில் இருந்ததை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதாவது நீங்கள் உங்கள் கனவுகளை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவந்து மதிப்பாய்வு செய்கிறீர்கள். அதன் பிறகு அந்தக் கனவு உங்களது வழக்கமான நினைவில் சேமிக்கப்பட்டுவிடும்." என்று நான் எனது மாணவர்களுக்குக் கூறுகிறேன்" என்கிறார் ஸ்டிக்கோல்ட்.
பிற செய்திகள்:
- கர்நாடகாவின் இந்த பழங்குடி பெண் எப்படி விவசாயிகளுக்கு முன்மாதிரி ஆனார்?
- வங்கதேசத்திடம் தொடரை இழந்த ஆஸ்திரேலியா டி20 உலகக்கோப்பையை வென்றது எப்படி?
- வெள்ளத்தில் குமரி: தீவாக மாறிய கிராமம் - இன்றைய கள நிலவரம் என்ன?
- இலங்கை குற்றக்குழு தலைவன் அங்கொட லொக்காவின் கூட்டாளி உள்பட இருவர் கைது
- சூர்யாவின் அறிவிப்பு: 'ஜெய்பீம்' ராஜாக்கண்ணு மனைவி பெயரில் ரூ. 10 லட்சம் டெபாசிட்
- கோவை மாணவி மரண விவகாரம்: பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் பெங்களூரில் கைது
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்