You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை குற்றக்குழு தலைவன் அங்கொட லொக்காவின் கூட்டாளி உள்பட இருவர் கைது
இலங்கை குற்றக்குழு தலைவன் மறைந்த அங்கொட லொக்காவின் கூட்டாளி ஒருவர் உட்பட இருவரை பெங்களூருவில் கைது செய்த தமிழக குற்றப்புலனாய்வு காவல்துறையினர், கோவையில் நீதிமன்றத்தில் இருவரையும் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இலங்கையில் நிழல் உலக தாதாவாக இருந்த அங்கொட லொக்கா, கோவை, சேரன்மாநகர் பகுதியில, பிரதீப் சிங் என்ற பெயரில், அவரது காதலி அம்மானி தான்ஜியுடன் 2018 முதல் ரகசியமாக வசித்து வந்தார்.
திடீர் உடல்நிலை பாதிக்கப்பட்ட அங்கொடா லொக்கா, 2020 ஜூலை 4ல் உயிரிழந்தார். கோவை அரசு மருத்துவமனையில், போலி சான்றிதழ் கொடுத்து அவரது சடலத்தை பெற்று சென்று, மதுரையில் தகனம் செய்தனர்.
முதலில், பீளமேடு காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில், வழக்கு சி.பி.சி.ஐ.டி., வசம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தி, இலங்கையை சேர்ந்த அம்மானி தான்ஜி, சடலத்தை எரிக்க உடந்தையாக இருந்த மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் சிவகாமி சுந்தரி மற்றும் திருப்பூரை சேர்ந்த தியானேஸ்வரன் ஆகியோரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில், சிவகாமி சுந்தரி, தியானேஸ்வரன் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். அம்மானி தான்ஜி, முகாமில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அங்கொட லொக்காவிடம் கைத்துப்பாக்கி இருந்ததாகவும், அது அவரது கூட்டாளியால் பெற்றுக்கொள்ளப்பட்டதாக விசாரணையில் வழக்கறிஞர் சிவகாம சுந்தரி வாக்குமூலம் அளித்திருந்தார்.
அது தொடர்பாக விசாரித்து வந்த சிபிசிஐடி காவல்துறையினர், அங்கொட லொக்கா, இந்தியாவில் தங்க அடைக்கலம் கொடுத்த அவரது கூட்டாளிகள் பெங்களூருவில் பதுங்கியிருக்கும் தகவல் அறிந்து, டி.எஸ்.பி., சிவகுமார் தலைமையில் தனிப்படையினர் விரைந்து சென்றனர்.
பெங்களூரு, குள்ளப்பா சர்க்கிள் பகுதியில் பதுங்கியிருந்த, இலங்கை, அதுரகிரியாவை சேர்ந்த சனுக்கா தனநாயகா(38), பெங்களூரு, சுப்பையா பாளையத்தை கோபாலகிருஷ்ணன் (46) ஆகியோரை பெங்களூர் காவல்துறை உதவியுடன் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
கடந்த 12 ஆம் தேதி கைது செய்யப்பட்ட இருவரையும் 13 ஆம் தேதி கோவைக்கு அழைத்து வந்து, தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சஞ்சீவி பாஸ்கர் இல்லத்தில் ஆஜர்படுத்தினர். இருவரையும், நீதிமன்ற காவலில் பெருந்துறை கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த சனுக்கா தனநாயகா, தமிழகத்தை சேர்ந்த பெங்களூருவில் வசித்து வரும் கோபாலகிருஷ்ணன் உதவியுடன் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார்.
தமிழகத்தை சேர்ந்தவர் போன்ற ஆதார் அட்டையுடன் நன்னன் என்கிற பெயரில் வசித்து வந்துள்ளார். கோபாலகிருஷ்ணன் சகோதரி வீட்டில் இவர் தங்கி வந்துள்ளார். தவிர, கோபாலகிருஷ்ணன் சனுக்கா தனநாயகாவிற்கு அடைக்கலம் கொடுத்ததற்காக கைது செய்யப்படுகிறார். ஏற்கனவே, கடந்த 6 மாதத்திற்கு முன் இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரருக்கு அடைக்கலம் கொடுத்ததாக கைது செய்யப்பட்டு பிணையில் வந்தவர் இந்த கோபாலகிருஷ்ணன்.
அங்கொட லொக்காவின் கைத்துப்பாக்கி தொடர்பாகவும், இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கி இருந்தது தொடர்பாகவும் விசாரணை செய்ய சனுக்கா தனநாயகாவை காவலில் எடுத்து விசாரிக்க நாளை சிபிசிஐடி கோவை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவுள்ளது.
அதேபோல், தொடர்ச்சியாக இலங்கை போதைப்பொருள் காரர்களுக்கு, அங்கொட லொக்கா கூட்டாளிக்கும் அடைக்கலம் கொடுப்பதன் மூலம் சட்டவிரோதமாக பணம் பயன் அடைகிறாரா என்பது குறித்து விசாரிக்க கோபாலகிருஷ்ணனையும் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளது.
பிற செய்திகள்:
- வெள்ளத்தில் குமரி: தீவாக மாறிய கிராமம் - இன்றைய கள நிலவரம் என்ன?
- போலீஸ் என்கவுன்டரில் 26 மாவோயிஸ்டுகள் பலி: முக்கிய தலைவர் மிலிந்த் டெல்டும்டே கொல்லப்பட்டார்
- கோவை மாணவி மரண விவகாரம்: பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் பெங்களூரில் கைது
- பிரான்சின் கடைசி ராணி கொடூரமாக கொல்லப்பட்ட வரலாறு தெரியுமா?
- எவரையும் சாராமல் 40 ஆண்டுகள் காட்டில் தனியாக வாழ்ந்த வனமகன் கென் ஸ்மித்
- கன்னியாகுமரியில் கன மழை: 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் போக்குவரத்து துண்டிப்பு
- அலுவல் நேரத்துக்கு பிறகு ஊழியர்களுக்கு அதிகாரிகள் மெசேஜ் அனுப்ப போர்ச்சுகலில் தடை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்