You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை தாதா அங்கொட லொக்கா மாரடைப்பால் உயிரிழப்பா? சிபிசிஐடி வெளியிடும் புதிய தகவல்
இலங்கையில் கொலை மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த அங்கொட லொக்கா, தமிழகத்தில் உள்ள கோவை நகரில் ஜூலை மாதம் உயிரிழந்தார். அவரது பிரேத உடலை ஆய்வு செய்ததில் மாரடைப்பால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில காவல்துறை குற்றப்புலனாய்வு சிஐடி (சிபிசிஐடி) ஐ.ஜி சங்கர் தகவல் அளித்துள்ளார்.
அங்கொட லொக்கா உயிரிழந்த வழக்கில் சிவகாமி சுந்தரி, அம்மானி தான்ஜி, தியானேஸ்வரன் ஆகியோர் ஆகஸ்ட் 2 ஆம் தேதி கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்குப் உட்படுத்தப்பட்டனர். மேலும், அங்கொட லொக்கா மரண வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு புலன் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட மூவரையும் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை செய்ததில் அங்கொட லொக்கா கோவையில் தலைமறைவாக இருந்தபோது தனது முகத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதும், உரிமம் இல்லாத துப்பாக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. ஆனால், அவரின் இறப்புக்கான காரணம் குறித்த உறுதியான தகவல்கள் வெளிவராமல் இருந்தது.
இந்நிலையில் மாரடைப்பு காரணமாக அங்கொட லொக்கா உயிரிழந்ததை சிபிசிஐடி காவல்துறையினர் தற்போது உறுதி செய்துள்ளனர்.
வழக்கு விசாரணை குறித்து பிபிசியிடம் பேசிய சிபிசிஐடி ஐ.ஜி சங்கர், 'இலங்கையில் தேடப்பட்டு வரும் அங்கொட லொக்கா கோவையில் தலைமறைவாக இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது உறுதியாகியுள்ளது. மேலும், அவரது உடல் உறுப்புகளை ரசாயன ஆய்வுக்கு உட்படுத்தியபோது அவருக்கு விஷம் கொடுக்கப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது' என கூறினார்.
அங்கொட லொக்கா மற்றும் அமானி தான்ஜி ஆகியோரின் பெயர் மற்றும் நாட்டின் குடியுரிமையை மாற்றி மறைத்து ஆதார் அட்டை எடுக்க போலியான ஆவணங்களை அளித்தது, போலி ஆதார் அட்டையை உண்மை என்று பயன்படுத்தி ஏமாற்ற உதவியது ஆகிய குற்றங்களுக்காக கோவையில் அங்கொட லொக்காவோடு வசித்து வந்த கொழும்புவைச் சேர்ந்த 27 வயது பெண் அமானி தான்ஜி, மதுரையைச் சேர்ந்த சிவகாமி சுந்தரி மற்றும் அவருக்கு பழக்கமுள்ள ஈரோட்டைச் சேர்ந்த தியானேஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
பிற செய்திகள்:
- "the social dilemma": திரை விமர்சனம்
- நரேந்திர மோதியின் கனவுகளும், அவர் சந்திக்கவுள்ள சவால்களும்
- மதுரை அருகே மாணவர் மர்ம சாவு - போலீஸ் விசாரணையில் கொல்லப்பட்டாரா?
- 100 ஆண்டுகளுக்கு முன்பு பெருந்தொற்று காலங்களில் பள்ளிகள் எவ்வாறு இயங்கின?
- 30 ஆண்டுகளாக மலையை குடைந்து 3 கிலோமீட்டர் நீள கால்வாயை உருவாக்கிய பிஹார் முதியவர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :