பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் 6 மணி நேரம் முடக்கம்: காரணம் என்ன?

ஃபேஸ்புக்

பட மூலாதாரம், Getty Images

சமூக ஊடக மற்றும் செய்திப் பறிமாற்றத் தளங்களான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவை நேற்று திங்கள் கிழமை இரவு தொடங்கி 6 மணி நேரத்துக்கு செயலிழந்தன.

இந்த மூன்றுமே ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமானவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிறுவனங்களின் சேவைகளை மொபைல் செயலிகள் மூலமோ, கணினி மூலமோ எதன் மூலமும் பெற முடியவில்லை.

சமூக ஊடகத் தளங்கள் அவ்வப்போது முடங்குவது இயல்புதான் என்றாலும், இந்த முடக்கம் மிகப் பெரியது.

காரணம் இந்த முடக்கம் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் நடக்கவில்லை. உலகம் முழுவதும் நடந்துள்ளது. அதே போல சரி செய்வதற்கு எடுத்துக்கொண்ட காலமும் மிக நீண்ட நேரம்.

இன்னும் முழுமையாக இந்த சேவைகள் மீளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

வரலாறு காணாத இந்த முடக்கத்துக்குக் காரணம் என்ன?

கான்ஃபிகரேஷன் மாற்றத்தை தவறாக செயல்படுத்தியதால்தான் இந்த முடக்கம் நேரிட்டதாக ஃபேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது.

Facebook பதிவை கடந்து செல்ல

தகவல் இல்லை

மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.

Facebook பதிவின் முடிவு

ஒரு கோடியே 6 லட்சம் பேர் இந்த சிக்கல் குறித்து புகார் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த இணைய தளங்களில் ஏற்பட்ட கோளாறு எவ்வளவு பெரியது என்பதையும், உலகம் எப்படி இவற்றை சார்ந்திருக்கிறது என்பதையும் இது காட்டுகிறது.

கிரீன்விச் சராசரி நேரப்படி திங்கள் கிழமை 16.00 மணிக்கு கிடைக்காமல் போன இந்த சேவைகள், 22.00 மணிக்கு மீண்டும் கிடைக்கத் தொடங்கியுள்ளன.

தவறாக செயல்படுத்தப்பட்ட கான்ஃபிகரேஷன் மாற்றம் நிறுவனத்தின் உள்ளக கருவிகளையும், கணினிகளையும் பாதித்துவிட்டதால், சரி செய்யும் நடவடிக்கைகள் சிக்கலாக மாறிவிட்டதாக ஃபேஸ்புக் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த முடக்கக் காலத்தில் பயனர் தகவல்கள் கசிந்ததாக கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கூறுகிறது அந்த அறிக்கை.

இந்த முடக்கத்தால் ஏற்பட்ட தடங்கலுக்கு வருந்துவதாகத் தெரிவித்துள்ளார் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க். நீங்கள் அக்கறை காட்டுகிறவர்களோடு இணைந்திருக்க எங்கள் சேவைகளை எவ்வளவு தூரம் சார்ந்திருக்கிறீர்கள் என்பதை நாங்கள் அறிவோம் என்றும் அவர் கூறியிருந்தார்.

விழியில் ஃபேஸ்புக்

பட மூலாதாரம், Chris Jackson/Getty Images

ஃபேஸ்புக்கின் மெய்நிகர் ஹெட்செட் தளமான ஆக்குலஸ் மற்றும் ஃபேஸ்புக் லாகின் தேவைப்படும் போக்மான் கோ உள்ளிட்ட பிற செயலிகள் இயங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டதாக பயனர்கள் புகார் கூறினர்.

ரெடிட், டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகத் தளங்கள் ஃபேஸ்புக் குழுமத் தளங்களின் இந்த முடக்கத்தைக் குறித்து கேலி செய்து பதிவுகள் வெளியிட்டன.

பிரான்சஸ் ஹாகன் என்கிற முன்னாள் ஃபேஸ்புக் ஊழியர் ஃபேஸ்புக் நிறுவனம் பாதுகாப்பைவிட வளர்ச்சிக்கே முக்கியத்துவம் தருவதாக கூறி சில ஆவணங்களையும் வெளியிட்ட மறுநாள் இந்த முடக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இளம் பயனர்களின் மன நலனில் இன்ஸ்டாகிராம் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து அந்த நிறுவனம் செய்த ஆராய்ச்சி தொடர்பாக, ஆன்லைனில் குழந்தைகளைப் பாதுகாப்பது என்ற தலைப்பில் அந்த முன்னாள் ஊழியர் அமெரிக்க செனட் துணைக் குழு ஒன்றின் முன்பாக செவ்வாய்க்கிழமை - இன்று - சாட்சியம் அளிக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :