You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஹைதி நிலநடுக்கம்: இறந்தோர் எண்ணிக்கை சுமார் 2 ஆயிரம் ஆனது, அவல நிலையில் 5 லட்சம் குழந்தைகள்
ஹைதி தீவில் சனிக்கிழமை நிகழ்ந்த வலுவான நிலநடுக்கத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை குறைந்தது 1,941 ஆகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் 7.2 என்ற அளவில் பதிவானது. இடிபாடுகளில் இருந்து மீட்புப் பணியாளர்கள் 34 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். ஆனால், இன்னும் பலர் மீட்கப்படாமல் இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இதனிடையே புதன்கிழமை தென் பசிபிக் பெருங்கடலில் உள்ள வனுவாட்டு தீவுக்கூட்டம் அருகே 6.8 அளவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மழையால் பாதிப்பு
ஹைதி தீவில் நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி கடும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. வெப்ப மண்டலப் புயலான கிரேஸ் காரணமாக அங்கு கடும் மழை பெய்துவருகிறது.
இந்த நிலநடுக்கத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் காயமடைந்தனர். மருந்துவமனைகள் காயம்பட்டவர்களால் நிரம்பி வழிகின்றன.
கதியற்று நிற்கும் 5 லட்சம் குழந்தைகள்
அங்கே சுமார் 5 லட்சம் குழந்தைகளுக்கு இருப்பிடம், பாதுகாப்பான குடிநீர், உணவு போதிய அளவில் கிடைக்கவில்லை அல்லது இல்லவே இல்லை என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.
"எண்ணற்ற ஹைதி குடும்பங்கள் இந்த நிலநடுக்கத்தால் எல்லா உடமைகளையும் இழந்துவிட்டு வெள்ள நீரிலேயே கால்பதித்து நின்றுகொண்டிருக்கின்றன," என்று அந்நாட்டுக்கான ஐ.நா. குழந்தைகள் நிதி (யுனிசெஃப்) பிரதிநிதி புருனோ மேஸ் தெரிவித்துள்ளார்.
நிலநடுக்கத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட லெஸ் கேய்ஸ் நகரில் உள்ள கால்பந்து மைதானத்தில் அமைக்கப்பட்ட தாற்காலிக கொட்டகைகளில் பலர் தங்கியிருக்கின்றனர்.
"செவ்வாய்க்கிழமை தேவாலயத்துக்கு அருகே தங்கியிருந்தேன். மீண்டும் நிலம் குலுங்கியதால் மீண்டும் இங்கே ஓடிவந்தேன்," என்று ஏ.எஃப்.பி. செய்தி முகமையிடம் தெரிவித்தார் நகரவாசி மகாலி கேடட்.
நகரில் மிகச்சில கட்டடங்களே பாதிக்கப்படாமல் இருக்கின்றன. எனவே மக்கள் தெருவில்தான் இளைப்பாறவேண்டியிருக்கிறது என்று தெரிவித்தார் அவர்.
தொலைதூரப் பகுதிகளில் வாழும் ஹைதி மக்கள் இன்னும் தங்களுக்கு உதவிகள் வந்து சேரவில்லை என்று சொல்கிறார்கள்.
"எல்லா உதவிகளையும் செய்யவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால், எங்களிடம் பணம், ஆதாரம் இல்லை," என்று ஒரு மத போதகர் ராய்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தார்.
இந்த நிலநடுக்கத்தில் உயிர் பிழைத்திருப்பவர்களுக்கு உதவி செய்ய ஹைதி அதிகாரிகளோடு இணைந்து பணியாற்றிக்கொண்டிருப்பதாக ஐ.நா.வின் உலக உணவுத் திட்டம் கூறியுள்ளது.
ஆயுதக் குழுக்களோடு ஒப்பந்தம்
தலைநகரில் இருந்து லெஸ் கேய்ஸ் செல்கிறவர்களை தாக்கிக் கொண்டிருந்த ஆயுதக் குழுக்கள், பேச்சுவார்த்தைக்குப் பிறகு, உதவி வாகனங்களை அனுமதிக்க ஒப்புக் கொண்டன என்று மனிதாபிமான உதவிகளை ஒருங்கிணைக்கும் ஒரு ஐ.நா. அலுவலகம் கூறியது.
ஆனால் கிரேஸ் புயலால் ஏற்பட்ட கடும் மழையில் மலைப்பாங்கான பல பகுதிகளுக்கு செல்வதற்கான சாலைகள் பயணிக்க முடியாதவையாக மாறியுள்ளன.
அரசியல் குழப்பத்தில் இருந்து மீளும் முன்
தங்கள் நாட்டு அதிபர் கடந்த மாதம் கொல்லப்பட்ட நிலையில் அரசியல் குழப்பத்தில் தவித்துவரும் இந்த ஏழை நாட்டின் பிரச்சனைகளை இந்த நிலநடுக்கம் மேலும் சிக்கலாக்கியுள்ளது.
புதிய அதிபர் தேர்தல் நடத்தப்படும் வரையில் அதிகாரத்தில் இருப்பவரான பிரதமர் ஏரியல் ஹென்றி நாட்டில் அவசர நிலையை அறிவித்துள்ளதோடு மக்கள் ஆதரவாக இருக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஹைதி தொடர்ந்து பல இயற்கை சீற்றங்களை எதிர்கொண்டுவருகிறது. 2016ம் ஆண்டின் மேத்யூ சூறாவளி அந்நாட்டை மோசமாகப் பாதித்தது. 2010ல் ஏற்பட்ட ஒரு நிலநடுக்கத்தில் அந்நாட்டில் சுமார் 2 லட்சம் பேர் உயிரிழந்தனர். நாட்டின் பொருளாதாரத்துக்கும், அடிப்படைக் கட்டுமானத்துக்கும் அதனால் பலத்த சேதம் ஏற்பட்டது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்