அசாம் நிலநடுக்கம்: தலைநகர் குவஹாத்தி குலுங்கியது, சேதம் என்ன?

அசாம் மாநிலம் சோனித்பூரை மையமாக கொண்டு பலத்த நிலநடுக்கம் ஒன்று இன்று புதன்கிழமை காலை 7.51 மணி அளவில் ஏற்பட்டது.

6.4 அளவிலான இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் மொத்த வடகிழக்கு மாநிலங்களிலும் உணரப்பட்டதாக அசாமில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைநகர் குவஹாத்தியில் இருந்து சோனித்பூர் வெறும் 150 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது. எனவே இந்த நிலநடுக்கம் குவஹாத்தியில் வலுவாக உணரப்பட்டது என்று பிபிசி தமிழிடம் கூறினார் ஒரு குவஹாத்திவாசி.

இரண்டு முறை பலத்த அதிர்வு உணரப்பட்டது. மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி தெருவுக்கும், சாலைக்கும் வந்தனர் என்கிறார்கள்.

"பெரிய நிலநடுக்கம், அசாமைத் தாக்கியுள்ளது. அனைவரின் நலனுக்காகவும் நான் பிரார்த்திக்கிறேன். எல்லோரும் கவனமாக இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மாவட்டங்களில் இருந்து தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன," என்று அசாம் முதல்வர் சரபானந்த் சோனாவால் கூறியிருப்பதாக ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவிக்கிறது.

கட்டடங்களுக்கு சேதம்

இந்த நிலநடுக்கத்தால் பல இடங்களில் கட்டடங்களுக்கு சேதம் ஏற்பட்டிருப்பதைக் காட்டும் படங்கள் அசாமில் இருந்து வெளியாகின்றன. தலைநகர் குவஹாத்தியிலேயே இப்படி கட்டங்களுக்கு ஏற்பட்ட சேதங்களைக் காட்டும் படங்கள் வெளியாகின்றன.

4 பின்னதிர்வுகள்

இன்று காலை 7.51 மணியளவில் 6.4 அளவிலான பெரிய நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு நான்கு மிகப்பெரிய பின் அதிர்வுகள் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையத் தரவுகள் தெரிவிக்கின்றன.

8.03 மணியளவில் 4.7 அளவிலும், 8.13 மணிக்கு 4 அளவிலும், 8.25 மற்றும் 8.44 மணிக்கு இரண்டு முறை 3.6 அளவிலும் அதிர்வுகள் பதிவாகியுள்ளன. பெரிய அதிர்வும், நான்கு பின் அதிர்வுகளும் சோனித்பூரை மையமாக கொண்டே நிகழ்ந்துள்ளன.

முன்னதாக நேற்று செவ்வாய்க்கிழமை இரவு சோனித்பூரிலும், மேகாலயாவின் காசி மலையிலும் லேசான முன்னதிர்வுகள் பதிவாகியுள்ளன.

தங்கள் பகுதியில் மூன்று முறை அதிர்வு உணரப்பட்டதாகவும், பெரிதாக சேதம் ஏதுமில்லை என்றும் பிபிசி தமிழிடம் கூறினார் காசிரங்கா பகுதியில் சுற்றுலா ஜீப் ஓட்டுநராக இருக்கும் ஜித்தன் போரா.

குவஹாத்தியில் இடிபாடுகள் விழுந்து 3 பேர் காயமடைந்திருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: