You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சிறுவர்களை குறிவைத்து கொல்லும் 'மர்ம நாய்கள்': அச்சத்தில் மக்கள்
உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த நவம்பர் மாதம் முதல், குறைந்தது 12 சிறுவர்கள் நாய்களால் கடித்து கொல்லப்பட்டுள்ளனர். சிறுவர்கள் பலியானதற்கு ஓநாய்களே காரணம் என சிலர் நம்புகின்றனர். இது குறித்து மேலும் அறிய பிபிசியின் நிதின் ஸ்ரீவத்சவா சித்தாப்பூர் மாவட்டத்திற்குப் பயணித்தார்.
பசுமையான மாம்பழ பழத்தோட்டத்தில் நடந்து செல்லும் போது, அவ்வளவு பயமாக இல்லை.
பெரிய மூங்கில் குச்சியுடன் மூன்று இளைஞர்கள் நமக்கு பாதுகாப்பாக வந்தனர். இன்னும் ரத்த கறை படிந்துள்ள ஒரு மரத்திற்குச் சென்றடைந்தோம்.
இந்த இடத்தில்தான் மே 1-ம் தேதி கூட்டமான நாய்களால் காலித் அலி கடித்து கொல்லப்பட்டார் என நம்பப்படுகிறது. பள்ளிக்கு சென்றுகொண்டிருந்த காலித், பழங்களைப் பறிப்பதற்காக இந்த மாற்றுப்பாதையில் வந்துள்ளார்.
''அன்று காலை ஒரு உரத்த சத்தத்தை நான் கேட்டேன். கூட்டமான நாய்களால் தாக்கப்பட்ட அச்சிறுவன், மரத்தில் ஏற முயற்சித்தான். ஆனால், நாய்கள் அவரைக் கீழே இழுத்துக் கடித்தன. மற்றவர்களை உதவிக்கு அழைக்க நான் கிராமத்திற்கு ஓடினேன்'' என்கிறார் விவசாயி அமீன் அலி.
கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள், காலித் இறந்துவிட்டார். நாய்களும் காட்டுக்குள் ஓடிவிட்டன.
ஆனால், அன்று காலித் மட்டுமல்ல, மேலும் இரு சிறுவர்களும் நாய்களால் கொல்லப்பட்டனர்.
நாய்களின் தாக்குதலில் உயிர் பிழைத்த 12 குழந்தைகள் பயங்கரமான காயங்களுக்கு ஆளாகியுள்ளனர்.
இதனால், பயந்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்திவிட்டார்கள்.
உண்மையில் நாய்களா?
இப்பகுதியில் தெரு நாய்கள், ஏன் திடீரென சிறுவர்களைக் கொல்கின்றன என்பது யாருக்கும் தெரியவில்லை.
அருகில் உள்ள காடுகளில் இருந்து அரிய வகை, நாய்கள் ஊருக்குள் வந்துள்ளதாக வதந்திகள் பரவியுள்ளன.
''குழந்தைகளைக் கடித்துள்ள இந்த நாய்கள், கிராமத்தில் உலாவும் சாதாரண தெரு நாய்கள் இல்லை. இந்த நாய்கள் சற்று பெரியதாக உள்ளன. இதன் தாடைகள், ஓநாயை போல உள்ளது'' என்கிறார் இப்பகுதியைச் சேர்ந்த ஷபீர் அலி.
இந்தியாவின் விலங்கு நல வாரியத்தில், தலைமை பயிற்சியாளராக உள்ள விவேக் சர்மா இந்த மர்மத்தைத் தீர்க்க முயற்சித்து வருகிறார். தாக்குதலில் ஈடுபடும் நாய்கள், உண்மையில் ஓநாய்களாக இருக்கலாம் என அவர் நம்புகிறார்.
''இத்தாக்குகளில் உண்மையில் ஈடுபட்டது ஓநாய்கள் என்றால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். அதுவும் அவை வெறிபிடித்த ஓநாய்கள். அவற்றால் ஒருநாளுக்கு 1-20 கிலோ மீட்டர் பயணிக்க முடியும். அத்துடன், அவை சிறுவர்களை மட்டும் குறிவைத்து கூட்டமாகத் தாக்கும்'' என்கிறார் விவேக் சர்மா.
உத்தரபிரதேசம் மற்றும் அதன் அண்டை மாநிலமான பிகாரில், கடந்த சில ஆண்டுகளில் ஓநாய்கள் மக்களை தாக்கிய பல சம்பவங்கள் நடந்துள்ளன.
ஓநாய் மற்றும் நாய் இடையிலான கலப்பினமாக இந்த வகை நாய்கள் இருக்கலாம் என கூறுகிறார் இப்பகுதியில் நாய்களை வளர்த்து வரும் ஜமால்.
பதில் தாக்குதல்
''நாய்களே சிறுவர்களை தாக்கியதாக அனைத்துச் சாட்சிகளும் கூறுகின்றன. 50க்கும் மேற்பட்ட நாய்களைப் பிடித்துள்ளோம். அவற்றின் நடத்தையை நிபுணர்கள் கண்காணித்து வருகின்றனர்'' என்கிறார் சித்தார்ப்பூர் காவல் தலைவர் ஆனந்த் குல்கர்னி.
''கடந்த வாரம் அறு நாய்களைக் கொன்றுள்ளோம். அவை காட்டுக்குள் இருப்பதால் பிடிப்பது மிகவும் கஷ்டமாக உள்ளது. நாங்கள் கூட்டமாக காட்டுக்குள் சென்று நாய்களைத் தேடுகிறோம்'' என்கிறார் இப்பகுதியைச் சேர்ந்த வாசி கான்.
ஆளில்லா விமானம்,இரவு பார்வை சாதனங்களைக் கொண்ட 13 சிறப்பு படை நாய்களைப் பிடிக்க அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், தனது அன்பானவர்களை இழந்தவர்களின் வாழ்க்கை தொடர்ந்து சோகமயமாகவே உள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்