மெக்கா, மதினா செல்லும் வெளிநாட்டினர் - உம்ரா பயணத்தை அனுமதிக்க சௌதி அரேபியா முடிவு

மெக்கா, மெதினா

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, பல லட்சம் பேருக்கு பதிலாக 10,000 உள்நாட்டினரே ஹஜ் பயணம் மேற்கொள்ள 2020இல் அனுமதிக்கப்பட்டனர்.

உம்ரா புனித பயணத்தின் ஒரு பகுதியாக மெக்கா மற்றும் மதினா ஆகிய நகரங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டு பயணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு இருந்தால் அவர்களை தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்க தொடங்கியுள்ளது சௌதி அரேபிய அரசு.

சௌதி அரேபியா வருவதற்கான பயண கோரிக்கைகளை திங்கள் முதல் அந்நாட்டு அதிகாரிகள் பரிசீலிக்க உள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளிநாட்டு பயணிகள் வருவதை 18 மாதங்களுக்கு முன்பு சௌதி அரேபிய அரசு நிறுத்தியது.

ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்திக் கொண்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சௌதி அரேபியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த மாதம் சௌதி அரேபிய நாட்டைச் சேர்ந்தவர்களில் தடுப்பூசி செலுத்தி கொண்ட 60 ஆயிரம் பேருக்கு மட்டுமே ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

தங்களால் செல்லக்கூடிய வாய்ப்பும் வசதியும் உள்ள இஸ்லாமியர்கள் வாழ்வில் ஒரு முறையேனும் மெக்காவுக்கு புனித பயணம் மேற்கொள்ள வேண்டியது ஹஜ் பயணம் என்று அழைக்கப்படுகிறது.

இது ஆண்டின் குறிப்பிட்ட காலம் மட்டுமே நடக்கும். 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஏழாம் தேதி முதல் 12ம் தேதி வரை ஹஜ் பயணம் நிகழ உள்ளது.

உம்ரா புனித பயணம் மெக்கா மற்றும் மதினா ஆகிய இரு நகரங்களையும் உள்ளடக்கியது. ஹஜ் பயணம் போன்று இல்லாமல் உம்ரா பயணத்தை ஆண்டில் எப்பொழுது வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம்.

Saudi Arabia

பட மூலாதாரம், Reuters

உலகெங்கிலுமிருந்து பலகோடி இஸ்லாமியர்கள் இந்த பயணத்தை மேற்கொள்கிறார்கள்.

உம்ரா அனுமதிக்கப்படுவதன் தொடக்கமாக முதலில் மாதத்துக்கு 60 ஆயிரம் புனித பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அந்த எண்ணிக்கை ஒரு மாதத்துக்கு 20 லட்சமாக உயர்த்தப்படும் என்று சௌதி அரேபிய அரசுக்குச் சொந்தமான சௌதி ப்ரஸ் ஏஜென்சி செய்தி முகமை கூறுகிறது.

ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கொரோனா வைரஸ் தடுப்பூசி, ஆக்ஸ்ஃபோர்டு - ஆஸ்ட்ராசெனீகா தடுப்பூசி, மாடர்னா தடுப்பூசி மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த நான்கு தடுப்பூசிகளையும் சௌதி அரேபிய அரசு அங்கீகரிக்கிறது.

வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் தேவைப்பட்டால் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுக் கொள்ள வேண்டுமென்று சௌதி அரேபியாவின் ஹஜ் இணை அமைச்சர் அப்துல் ஃபட்டா பின் சுலைமான் தெரிவித்துள்ளார் என்று சௌதி ப்ரஸ் முகமை கூறுகிறது.

சௌதி அரேபியாவில் இதுவரை 5 லட்சத்து 32 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கோவிட் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 8,300 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :