ஆதம்ஜி ஹாஜி தாவூத்: இவருக்காக முகம்மது அலி ஜின்னாவே உருகியது ஏன்?

ஆதம்ஜி ஹாஜி தாவூத்

பட மூலாதாரம், MEMON ALAM MAGAZINE / WORLD MEMON ORGANIZATION

    • எழுதியவர், அர்ஜுன் பர்மார்
    • பதவி, பிபிசி குஜராத்தி

1947 ஆகஸ்ட் 14, ஆம் தேதி பாகிஸ்தான் ஒரு சுதந்திர நாடாக மாறியது. பிரிட்டிஷ் ஆட்சி மற்றும் அப்போதைய வைஸ்ராய் மவுண்ட்பேட்டன் பிரபு வகுத்த திட்டத்தின்படி, புதிதாக உருவான பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் இடப்பிரிப்பு நடைபெற இருந்தது.

இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் 75 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை பெறவிருந்தது. ஆனால் புதிதாக உருவான அந்த நாட்டிற்கு 20 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்தது.

காயித்- இ-ஆஸம் முகமது அலி ஜின்னாவும் அவரது முஸ்லிம் லீக் ஆதரவாளர்களும் கவலை கொண்டனர். புதிதாக உருவான அந்த நாடு தன் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை பற்றி சிந்திக்க வேண்டியிருந்தது.

பாகிஸ்தானின் உருவாக்கம் மற்றும் வளர்ச்சியில் குஜராத்தி தொழிலதிபர் சர் ஆதம்ஜி ஹாஜி தாவூத் ஆற்றிய மறக்க முடியாத பங்கு குறித்து பேசிய வரலாற்றாசிரியரும் அகில இந்திய மேமன் ஜமாத் கூட்டமைப்பின் தலைவருமான இக்பால் ஆஃபீசர், "பிரிவினை நேரத்தில், பாகிஸ்தான் பொருளாதார சிக்கலில் இருந்தது. தொழிலதிபர் சர் ஆதம்ஜி ஹாஜி தாவூத், ஜின்னாவிற்கு ஒரு வெற்று காசோலையை வழங்கினார். அவரது நன்கொடையால் பாகிஸ்தானை நிதி சிக்கலில் இருந்து காப்பாற்றினார்," என்று குறிப்பிட்டார்.

பாகிஸ்தானின் உருவாக்கம் மற்றும் மேம்பாட்டுக்கு சர் ஆதம்ஜியின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை பாகிஸ்தான் அரசின் ஒரு செயலில் புரிந்து கொள்ள முடியும்.

ஆதம்ஜி போர்டிங் இல்லம்

பட மூலாதாரம், ADAMJEES.COM

1999 ஆகஸ்ட் 14 ஆம் தேதி பாகிஸ்தான் அரசு, சர் ஆதம்ஜியின் நினைவாக 'சுதந்திரத்தின் முன்னோடிகள்' என்ற பிரிவில் ஒரு சிறப்பு தபால்தலையை வெளியிட்டது.

குஜராத்திகள், குறிப்பாக காத்தியாவாரிகள், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரண்டையும் கட்டியெழுப்புவதற்கும் இரு நாடுகளின் ஸ்திரத்தன்மைக்கும் பாராட்டத்தக்க பங்களிப்புகளை வழங்கியுள்ளனர்.

இந்தியாவுக்கு மகாத்மா காந்தியைப் போலவே, காத்தியாவாரியான முகமது அலி ஜின்னா பாகிஸ்தானின் உருவாக்கம் மற்றும் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகித்தார்.

சர் ஆதம்ஜி ஹாஜி தாவூத் அத்தகைய ஒரு காத்தியாவாரி ஆவார். பிரிட்டிஷ் இந்தியாவிலும் பின்னர் பாகிஸ்தானிலும் வசித்த அவர் பிரபலமான கொடையாளியாகவும், மிகப்பெரும் வணிகராகவும் இருந்தார்.

அதிகம் படிப்பறிவில்லா ஆதம்ஜி எவ்வாறு வணிக அதிபராக மாறினார்?

மொஹம்மத் அலி ஜின்னா உடன் ஆதம்ஜி

பட மூலாதாரம், ADAMJEES.COM

சர் ஆதம்ஜி ஹாஜி தாவூத் பற்றிய விரிவான கட்டுரை , உலக மேமன் அமைப்பின் 'மேமன் ஆலம்' இதழில் 2012 டிசம்பரில் வெளியிடப்பட்டது.

ஆதம்ஜி 1880 ஜூன் 30 ஆம் தேதி காத்தியாவாரின் ஜேட்பூரில் பிறந்தார் என்று அந்தக் கட்டுரை தெரிவிக்கிறது. இவரது தந்தை சிறு வணிகர். ஆதம்ஜி இரண்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தார். ஆனால் அவரது திறமை மற்றும் தொழில் முனைவு மூலம் அவர் இந்தியத் தொழில்துறையின் உச்சத்தை எட்டிப்பிடித்தார்.

கற்றல், விடாமுயற்சி, ஆபத்துக்களை சந்திக்கும் துணிவும் ஆகியவை வெற்றிக்கு மிகவும் முக்கியம். ஆதம்ஜி இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

"ஒரு கூட்டத்தில் அல்லது ஒரு குழுவில் ஆதம்ஜி தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் போதெல்லாம், அவர் தன்னை 'பதாரின் பட்டதாரி' என்று கூறிக்கொள்வார்" என்று முன்னாள் தொழிலதிபரும், ஜேட்பூரைச் சேர்ந்த வரலாற்று பிரியருமான குன்வந்த் தோர்டா கூறினார்.

ஜேட்பூர் , பதார் ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஒரு நகரம். ஆதம்ஜி தனது தாயகத்திலிருந்து விலகிச் சென்றிருந்தாலும், அவர் எப்போதும் தனது வேர்களுடன் இணைந்திருந்தார் என்பதற்கு இது ஒரு சான்று.

ஜேட்பூரில் தனது வாழ்க்கையின் ஆரம்ப ஆண்டுகளில் கற்றுக்கொண்ட மதிப்புகளின் படிப்பினைகளை ஆதம்ஜி ஒருபோதும் மறக்கவில்லை.

அவர் பர்மாவில் (இப்போது மியான்மர்) சலே முகமது காசியா & கோ நிறுவனத்தில் மிகச் சிறிய வயதில் ஒரு சாதாரண ஊழியராக சேர்ந்தார். 1896 ஆம் ஆண்டில் அவர் தனது குடும்பத் தொழிலில் இறங்கினார்.

மிகச் சிறிய வயதிலேயே வணிக புத்திசாலித்தனத்தைப் பெற்ற ஆதம்ஜி விரைவாக பல்வேறு தொழிலதிபர்களுடன் வர்த்தக தொடர்புகளை ஏற்படுத்தத் தொடங்கினார், பண்டச் சந்தையில் தனக்கென ஒரு பெயரை உருவாக்கிக் கொண்டார்.

சில் முக்கிய தலைவர்களுடன் ஆதம்ஜி

பட மூலாதாரம், ADAMJEES.COM

சிறிது காலத்திற்குப்பிறகு அவர் வியாபாரத்தில் மிகவும் தேர்ச்சி பெற்றார். பின்னர் சொந்தமாக தொழில் செய்யத்தொடங்கினார். அவர் ஒரு தொலைநோக்குபார்வை கொண்ட துணிச்சலான தொழிலதிபர்.

1901 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட அவரது நிறுவனம், விரைவில் அரிசி மற்றும் தீப்பெட்டிகளின் மிகப்பெரிய ஏற்றுமதியாளராக மாறியது. அது மட்டுமல்லாமல், அவர் மற்ற துறைகளிலும் இறங்கினார். பர்மிய ஆளி (Flax) மற்றும் ஆளி தயாரிப்புகளின் மிகப்பெரிய இறக்குமதியாளராக ஆனார்.

அவர் தனது முழு மூலதனத்தையும் அரிசி, தீப்பெட்டிகள் மற்றும் ஆளியை வாங்கிச் சேர்ப்பதில் முதலீடு செய்தார்.

இதன் விளைவாக சந்தையில் இந்த பொருட்களின் பெரும் பற்றாக்குறை ஏற்பட்டது விலைகள் உயர்ந்தன. விலை அதிகரிப்பு காரணமாக ஆதம்ஜியின் நிறுவனம் பெரும் லாபம் ஈட்டியது.

வியாபாரத்தின் மூலம், இந்தியாவிலும் சுற்றியுள்ள நாடுகளிலும் ஒரு பெரிய தொழில்முனைவோராக தனக்கென ஒரு பெயரை அவர் உருவாக்கத் தொடங்கினார்.

ஒரு இஸ்லாமியரால் துவக்கப்பட்ட முதல் பொது நிறுவனம்

மொஹம்மத் அலி ஜின்னா

பட மூலாதாரம், Getty Images

ஒரு தொழில்முனைவோராக ஆதம்ஜி ஹாஜி தாவூத்தின் நற்பெயர் வளர்ந்து வந்தது. ஆனால் அவர் திருப்தி அடையவில்லை.

ஒரு தொழிலதிபராக சிறிது காலம் செலவிட்ட பிறகு, லாபத்தை அதிகரிப்பதற்கான ஒரே வழி உற்பத்தி செய்வதே என்பதை அவர் உணர்ந்தார்.

லாபம் ஈட்டுவதோடு கூடவே, தன் நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பையும் உருவாக்க விரும்பினார்.

இந்த யோசனையுடன், அவர் 1921 ஆம் ஆண்டில் பர்மாவின் ரங்கூனில் ஒரு தீப்பெட்டி தொழிற்சாலையைத் தொடங்கினார். 1929 இல் கொல்கத்தாவுக்கு அருகில் ஒரு லினென் துணி ஆலையை கட்ட ஆரம்பித்தார்.

1931 இல் தொழிற்சாலையின் கட்டுமானப் பணிகள் முடிந்ததும், கொல்கத்தா பங்குச் சந்தையில் தொழிற்சாலையின் பங்குகளை வெளியிட்டார்.

ஒரு இஸ்லாமிய தொழிலதிபரால் பொது வரையறுக்கப்பட்ட நிறுவனம் தொடங்கப்பட்டது இதுவே முதல் முறை என்று மேமன் ஆலம் பத்திரிகையின் கட்டுரை குறிப்பிடுகிறது.

இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஆதம்ஜி இந்தியாவின் பெரிய ஆளி ஏற்றுமதியாளராகிவிட்டார்.

சமூக பணிகளில் தீவிரம்

மொஹம்மத் அலி ஜின்னா உடன் ஆதம்ஜி

பட மூலாதாரம், ADAMJEES.COM

வணிகத்தின் மூலம் பணக்காரரான ஆதம்ஜி, சமூகப் பணிகளிலும் குறிப்பிடத்தக்க அளவில் பங்களித்தார்.

பர்மா மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளை கட்டினார். ஆதம்ஜி, இயற்கையாகவே ஒரு கொடையாளியாக இருந்ததால், நல்ல காரணங்களுக்காக உதவுவதில் அவர் ஒருபோதும் பின்வாங்கவில்லை.

குஜராத்தி மேமன் சமூகத்தில் கல்வியின் அவசியத்தை உணர்ந்த அவர், பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு உதவுவதற்காக 1933 இல் மேமன் கல்வி மற்றும் நலச்சங்கத்தை அமைத்தார்.

சர் ஆதம்ஜியின் சமூகப் பணிகளைக் குறிப்பிட்டு, குஜராத்தி பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ரஜினி குமார் பாண்டியா தனது 'வஹலு வதன்' புத்தகத்தில், "ஜேட்பூருக்கு ஒரு சாபம் உள்ளது போலத் தெரிகிறது. ஜேட்பூரில் பிறந்த சிறந்த கலைஞர்கள், கவிஞர்கள்,வணிகர்கள் தொழிலதிபர்கள் யாருமே அங்கே தங்கவில்லை." என்று குறிப்பிடுகிறார்.

"கசல் கலைஞர் பங்கஜ் உதாஸ் ஜேட்பூரில் பிறந்தார், ஆனால் மும்பைக்குச் சென்று பிரகாசித்தார்."

"பாகிஸ்தானின் உயர்மட்ட தொழிலதிபர் சர் ஆதம்ஜி ஹாஜி தாவூத், ஜேட்பூரை விட்டு பாகிஸ்தானுக்குச் சென்றார். அவர் பாகிஸ்தானுக்குச் சென்று தனக்கென ஒரு பெயரை சம்பாதித்துக்கொண்டார்."

"ஜேட்பூரில் தோராஜி சாலையில் அவர் நிறுவிய சர் ஆதம்ஜி ஹாஜி தாவூத் மருத்துவமனையின் இடிபாடுகள் வேறு எந்த கட்டிடத்தையும் விட அழகாக இருக்கின்றன. இப்போது அங்கே ​​ஒரு சமவெளி மைதானம் மட்டுமே உள்ளது."

ஆதம்ஜியின் குடும்பத்திற்கு ஒரு பாரம்பரியம் இருந்தது. அவர்கள் எல்லா முக்கியமான சந்தர்ப்பங்களிலும் தங்கள் பிறந்த இடத்திற்கு வந்து தேவையான சடங்குகளைச் செய்வார்கள்.

இதுபோன்ற இரண்டு சந்தர்ப்பங்களில், சர் ஆதம்ஜி ஜேட்பூருக்கு இரண்டு பெரிய பரிசுகளை வழங்கினார்.

இந்தியா பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

இது குறித்து பேசிய குன்வந்த் தோர்டா, "ஆதம்ஜி தனது மூத்த மகன் அப்துல் ஹமீத்தின் திருமணத்தை நடத்த ரங்கூனில் இருந்து ஜேட்பூருக்கு வந்தார்" என்று கூறுகிறார்.

"குடும்ப வழக்கப்படி, அவர் தனது மகனின் திருமணத்தின் நினைவாக, ஒரு பெரிய தொண்டு நிறுவனத்தை அறிவித்தார். அவர் ஹாஜி தாவூத் மருந்தகத்தை ஒரு பெரிய மருத்துவமனையாக விரிவுபடுத்தினார். இது பல ஆண்டுகள் ஜேட்பூர் மக்களுக்கு பயனளித்தது."

அதே போல் சர் ஆதம்ஜி, தனது இளைய மகள் மற்றும் மகனின் திருமணத்திலும் ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டார்.

"அந்த நேரத்தில் அவர் நகரத்திற்கு சர் ஆதம்ஜி முஸ்லிம் உயர்நிலைப் பள்ளியை பரிசாகக் கொடுத்தார். கட்டிடம் மிகப் பெரியதாக இருந்தது, அது ஒரு பல்கலைக்கழகம் போல தோற்றமளித்தது." என்று தோர்டா கூறினார்.

அவரது தொண்டு செயல்களை முஸ்லிம் சமூகம் கவனிக்கத் தொடங்கியது. அவரது புகழ் வளர்ந்து வந்தது.

ஆதம்ஜியின் தொண்டு பணிகளுக்காக அவர் கெளரவிக்கப்பட வேண்டும் என்று சமூகம் கோரியது.

இந்தக் கோரிக்கையைத் தொடர்ந்து 1938 , ஜூன் 9 அன்று, அப்போதைய வங்காள ஆளுநர் ப்ரபான் பிரபு, ஆதம்ஜிக்கு 'இந்தியப் பேரரசின் நைட்(Knight) கமாண்டர்' என்ற பட்டத்தை வழங்கினார். அப்போதிலிருந்து அவர், சர் ஆதம்ஜி தாவூத் என்று அறியப்பட்டார்.

ஜின்னாவின் விசுவாசி

மொஹம்மத் அலி ஜின்னா

பட மூலாதாரம், Getty Images

முஸ்லிம் தொண்டு அறக்கட்டளைகளுக்கான வரவு செலவுத் திட்ட வரியில் முரண்பாடுகள் குறித்த பிரச்சனையில் ஆதம்ஜி, 1928 இல் பாரிஸ்டர் முகமது அலி ஜின்னாவை சந்தித்தார். ஜின்னாவின் தர்க்கரீதியான சிந்தனையால் ஆதம்ஜி ஈர்க்கப்பட்டார். அதே நேரத்தில் முஸ்லிம் லீக்கிற்கு ஆதரவான, நேர்மையான மற்றும் பணக்கார தொண்டரின் குணங்களை ஜின்னா ஆதம்ஜியிடம் கண்டார்.

சிறிது காலத்திற்குப் பிறகு, ஆதம்ஜி முஸ்லிம் லீக்கின் மிகப்பெரிய நன்கொடையாளராக உருவெடுத்தார். மேலும் கட்சிக்கு நிதி வழங்கத் தொடங்கினார்.

அவர் படிப்படியாக ஜின்னாவின் மிகவும் நம்பகமான மனிதர்களில் ஒருவரானார். ஜின்னாவுக்கு அவர் மீது வலுவான நம்பிக்கை இருந்தது, அவருக்கும் அதே போன்ற நம்பிக்கை ஜின்னா மீது இருந்தது.

ஜின்னாவின் நம்பகமான தோழர்களில் பெரும்பாலானவர்கள் செல்வந்தர்கள். அனுபவம் வாய்ந்தவர்கள், புத்திசாலிகள் மற்றும் தேசபக்தி கொண்டவர்கள்.

ஜின்னாவின் நம்பகமான நபர்கள், அரசியலில் தீவிரமாக இல்லாவிட்டாலும், அவர்களால் அரசியல் முடிவுகளின் போக்கை மாற்ற முடியும்.

"ஜின்னாவின் அத்தகைய நம்பகமான கூட்டாளிகள் இல்லாமல் பாகிஸ்தானின் உருவாக்கம் சாத்தியமில்லை." என ஜின்னாவின் நம்பகமான கூட்டாளிகளான ஆதம்ஜி போன்றவர்களின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை, மேமன் ஆலம் பத்திரிகையின் கட்டுரை சுட்டிக் காட்டுகிறது.

பாகிஸ்தானின் உருவாக்கம் மற்றும் வளர்ச்சியில் பங்களிப்பு

பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

ஜின்னாவை பின்பற்றுபவராக இருந்த சர் ஆதம்ஜி, பாகிஸ்தானை உருவாக்குவதில் முக்கிய பங்களித்ததோடு மட்டுமல்லாமல், தேசம் உருவான பின்னர் தேவையான வசதிகளை உருவாக்குவதிலும் பங்குவகித்தார்.

இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, இந்தியாவின் பிரிவினையின் போது, ​​பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் சொத்துக்களின் பிரிப்பு, முன்பே நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளின்படி நடக்க வேண்டும்.

ஆனால் சுதந்திரம் பெற்ற பின்னரும், இந்தியாவில் இருந்து கிடைக்க வேண்டிய பணம் பாகிஸ்தானுக்கு கிடைக்கவில்லை.

சரியான நேரத்தில் இந்தியாவில் இருந்து பணம் கிடைக்கவில்லை என்று ஜின்னா கோபமடைந்தார் என ஆதம்ஜி குழுமத்தின் இணையதளத்தில் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜின்னா, சர் ஆதம்ஜிக்கு நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து ஒரு "அவசர" செய்தியை அனுப்பினார் என்று அந்த வலைத்தளம் கூறுகிறது.

பின்னர், முஸ்லிம் லீக்கின் உறுப்பினர் ஹதீம் ஆல்வி மற்றும் பாகிஸ்தானின் முதல் நிதி அமைச்சர் குலாம் முகமது ஆகியோர் சர் ஆதம்ஜி மற்றும் அவரது மகன் வாஹித்தை அணுகி நிதி உதவி கேட்டனர்.

பாகிஸ்தான் கொடி

பட மூலாதாரம், Getty Images

1947 நவம்பரில் பெயர் குறிப்பிடாத ஒருவரிடமிருந்து வங்கியில் பெரும் தொகை டெபாசிட் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்தப் பற்றாக்குறை சமாளிக்கப்பட்டது. இந்தப் பணம் இந்திய இம்பீரியல் வங்கியிலிமிருந்து வந்திருப்பதை, மும்பை கருவூலத்தின் டெபாசிட் குறிப்பு தெரிவிக்கிறது. இந்த உதவி சர் ஆதம்ஜி தாவூத்திடமிருந்து வந்தது என்று நம்பப்படுகிறது.

இந்த மர்மமான நிதியை சர் ஆதம்ஜி பாகிஸ்தானின் கணக்கில் டெபாசிட் செய்ததாக இக்பால் ஆஃபீசர் போன்ற வரலாற்றாசிரியர்கள் நம்புகின்றனர். வேறு யாரும் பணத்தை டெபாசிட் செய்திருக்க வாய்ப்பில்லை என்று அவர்கள் கருதுகின்றனர்.

குன்வந்த் தோர்டாவும் இக்பால் ஆஃபீசருடன் உடன்படுகிறார்.

"ஒரு வெற்று காசோலை மட்டுமல்ல, பாகிஸ்தானுக்கு நிதி உதவி தேவைப்படும் போது சர் ஆதம்ஜி தனது சொத்துக்கள் அனைத்தையும் நாட்டிற்கு அர்பணிக்கத் தயாராக இருந்தார்" என்று அவர் கூறுகிறார்.

தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காக வெவ்வேறு தொழில்துறையினரின் தோள்களில் வெவ்வேறு தொழில்களை அமைக்கும் பொறுப்பை ஜின்னா வைத்தார்.

இந்த வணிகர்களின் பட்டியலில் ஆதம்ஜியின் பெயர் சேர்க்கப்பட்டது. ஜின்னாவால் ஈர்க்கப்பட்ட ஆதம்ஜி, கொல்கத்தாவில் ஒரு முஸ்லிம் வணிக வங்கியை அமைத்தார்.

பாகிஸ்தானில் வங்கி முறையை அமைக்கும் பொறுப்பை ஜின்னா, சர் ஆதம்ஜி மற்றும் ஹபீப் குடும்பத்திடம் ஒப்படைத்தார் என்று பாகிஸ்தானின் முன்னணி செய்தி நிறுவனமான டான்.காம் தெரிவிக்கிறது.

பாகிஸ்தானிய ரூபாய்

பட மூலாதாரம், Getty Images

காப்பீட்டுத் துறையை வளர்ப்பதற்கான பணி ஈஸ்டர்ன் ஃபெடரல் யூனியன் காப்பீட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இருப்பினும், ஆதம்ஜி குழுமத்தின் ஒரு கிளையான ஹனிஃப்ஸ் , தற்போது பாகிஸ்தானில் ஆதம்ஜி காப்பீட்டு நிறுவனத்தை நடத்தி வருகிறது. இது பாகிஸ்தானில் மிகவும் நம்பகமான காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றாகும்.

புதிதாக உருவாக்கப்பட்ட நாட்டிற்காக, விமான சேவையை தொடங்கும் பொறுப்பை, ஆதம்ஜி மற்றும் இஸ்பா குடும்பத்தினரிடம் ஜின்னா ஒப்படைத்தார். அவர்கள் இணைந்து ஓரியண்ட் ஏர்வேஸைத் தொடங்கினர்.

1948 இல் ஜின்னாவின் அழைப்பைத் தொடர்ந்து, ஆதம்ஜி கொல்கத்தாவிலிருந்து கராச்சிக்கு சென்று ஸ்டேட் பாங்க் ஆஃப் பாகிஸ்தானை நிறுவினார்.

இந்த நோக்கத்திற்காக ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டபோது துரதிருஷ்டவசமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது .1948 ஜனவரி 27 அன்று கராச்சியில் அவர் காலமானார்.

சர் ஆதம்ஜி போன்ற பன்னிரெண்டு நபர்கள் இருந்திருந்தால்,பாகிஸ்தானை மிகவும் முன்னதாகவே பெற்றிருக்கமுடியும் என்று முகமது அலி ஜின்னா தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.

ஆதம்ஜியின் மரணம் பாகிஸ்தானுக்கு ஒரு தேசிய இழப்பு என்றும் அவர் குறிப்பிட்டார்.

"அவர் ஒரு விசுவாசமான முஸ்லிம், பாகிஸ்தானைப் பெறுவதற்கான எங்கள் போராட்டத்தில் அவர் முக்கிய பங்கு வகித்தார். இப்போது நமக்கு பாகிஸ்தான் கிடைத்துவிட்டநிலையில் அவரது இழப்பு இன்னும் தீவிரமாக உணரப்படும். ஏனென்றால் அவருடைய சேவைகளின் தேவை இப்போதுதான் நமக்கு மிகவும் அவசியமாக உள்ளது "என ஜின்னா புகழ்ந்தார்.

"அவரது மரணம் முஸ்லிம் வணிக சமூகத்தில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கும். அதை ஈடுசெய்வது கடினமாக இருக்கும். அவரது மரணம் பாகிஸ்தானுக்கு ஒரு தேசிய இழப்பு" என ஜின்னா கூறினார்.

பாகிஸ்தான் மக்களின் நம்பிக்கையை பெற்ற சர் ஆதம்ஜி

ஜின்னா

பட மூலாதாரம், MEMON ALAM MAGAZINE / WORLD MEMON ORGANIZATION

சர் ஆதம்ஜியின் மரணத்திற்குப் பிறகு, அவரது குடும்பம் கராச்சி மற்றும் டாக்காவில் (இப்போது வங்கதேசம்) குடியேறியது. அங்கு அவர்கள் வணிக உலகில் தங்கள் முன்னோர்களின் நற்பெயரை தொடர்ந்து பிரகாசிக்கச் செய்து வருகின்றனர்.

சர் ஆதம்ஜியின் மூத்த மகன் ஏ.டபிள்யூ ஆதம்ஜி டாக்காவில் உலகின் மிகப்பெரிய லினென் (Linen) கைத்தறி ஆலையை நிறுவியுள்ளார். இந்த ஆலையில் இரண்டு லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.

பல தசாப்தங்களாக, சர் ஆதம்ஜி குடும்பம் 'ஆதம்ஜி' பெயரில் பல தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியது. ஆதம்ஜி என்பது பாகிஸ்தானில் ஒரு பிரபல பிராண்டாகத் திகழ்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :