டேனியல் எல்ஸ்பெர்க்: அமெரிக்காவின் ரகசியங்களை அம்பலப்படுத்திய நபரின் கதை

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜோஷூவா நெவெட்
- பதவி, பிபிசி நியூஸ்
1969 ஆம் ஆண்டின் இறுதி வாரங்களில், ஒரு கடினமான ஆனால் மிகமுக்கியமான பணியில் டேனியல் எல்ஸ்பெர்க், மும்முரமாக ஈடுபட்டிருந்தார்.
நீண்ட மற்றும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு மோதல் இதன்மூலம் முடிவுக்கு வரும் என்று தாம் நம்பிய ஆயிரக்கணக்கான உயர் ரகசிய ஆவணங்களை ஒவ்வொன்றாக அவர் நகலெடுத்தார்.
பென்டகன் பேப்பர்ஸ் என்று அழைக்கப்படும் இந்த ஆவணங்கள் வியட்நாம் போரில் அமெரிக்க ஈடுபாட்டின் அளவைக் காட்டும் ரகசிய ஆய்வின் ஒரு பகுதியாகும்.
எல்ஸ்பெர்க் 1971 ஆம் ஆண்டில் செய்தித்தாள்களுக்கு இந்த ஆய்வை கசியவிட்டார். அதன் பிறகு அவர் மீது உளவு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இந்தக்குற்றச்சாடுகள் பின்னர் தள்ளுபடி செய்யப்பட்டன.
பென்டகன் பேப்பர்ஸ் ஒரு நீடித்த மரபை விட்டுச் சென்றாலும், எல்ஸ்பெர்கின் கைகளில் கிடைத்த ரகசிய ஆவணங்கள் அவை மட்டும் அல்ல.
எல்ஸ்பெர்க் மற்றொரு ரகசிய ஆய்வின் ஆவணங்களையும் அந்த நேரத்தில் நகலெடுத்தார். 1958 தைவான் நெருக்கடியின் போது அணு ஆயுதப்போர் அச்சுறுத்தலை அமெரிக்க ராணுவத் தலைவர்கள் எவ்வளவு தீவிரமாக எடுத்துக் கொண்டனர் என்பதை இந்த ஆவணங்கள் காட்டுகின்றன.
50 ஆண்டுகளாக இந்த ஆய்வு கிட்டத்தட்ட கவனிக்கப்படாமலேயே இருந்தது. ஆனால் 2017 ஆம் ஆண்டில் எல்ஸ்பெர்க், முழு ஆவணத்தையும் ஆன்லைனில் வெளியிட்ட்டார். கடந்த மாதம் நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாள் அதை முன்னிலைப்படுத்தி செய்தி வெளியிட்டது.
உண்மையில் பென்டகன் பேப்பர்களை கசிய விட்டதற்காக அவர் எதிர்கொண்ட அதே குற்றச்சாட்டுகள், அவர் மீது மீண்டும் சுமத்தப்படக்கூடிய சூழலை எல்ஸ்பெர்க்கின் இந்தச்செயல் உருவாக்கியது.
இப்போது 90ஆவது வயதில் தான் சிறையில் அடைக்கப்படும் சாத்தியக் கூறுகளைக் கண்டு தான் மிரளவில்லை என எல்ஸ்பெர்க் கூறுகிறார். பிபிசிக்கு அளித்த பேட்டியில் அதற்கான காரணத்தை அவர் விளக்கினார்.

பட மூலாதாரம், Getty Images
அரசாங்கத்தின் அத்துமீறல் மற்றும் ராணுவத் தலையீடுகளை பல தசாப்தங்களாக அயராது விமர்சிப்பவர் எல்ஸ்பெர்க். அணுசக்தி செயல்தந்திரம் குறித்து வெள்ளை மாளிகைக்கு அவர் ஆலோசனை வழங்கியபோதும், பாதுகாப்புத் துறைக்காக வியட்நாம் போரை மதிப்பிட்டபோதும், 1960 களில் அவரது எதிர்ப்பு மேலும் வலுப்பெற்றது.
அந்த காலகட்டத்தில் எல்ஸ்பெர்க் தெரிந்துகொண்ட விஷயங்கள் அவரது மனசாட்சியை பெரிதும் உறுத்தியது. பொதுமக்களுக்கு இவை எல்லாம் தெரிந்தால், போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான அரசியல் அழுத்தத்தை தவிர்க்கமுடியாது என அவர் நினைத்தார்.
பென்டகன் பேப்பர்களின் வெளியீடு அந்த சிந்தனையின் வெளிப்பாடாக இருந்தது. ஆனால் எல்ஸ்பெர்க்கின் சமீபத்திய வெளியீட்டிற்கான காரணம் வேறானது.
"அணு ஆயுதப்போரை தவிர்ப்பதில் எனது பங்கைச் செய்ய விரும்புகிறேன்" என எல்ஸ்பெர்க் கலிபோர்னியாவில் உள்ள தனது வீட்டிலிருந்து கூறினார்.
தைவான் மீது அணுஆயுதப்போர் தொடுக்கப்படும் கடுமையான அச்சுறுத்தல் இருப்பதாக அவர் கருதுகிறார். அது ஏன் என்பதைப் புரிந்து கொள்ள, சீனா - தைவான் உறவின் தீர்க்கப்படாத பிரச்சனையை நாம் ஆராய வேண்டும்.
1949ல் சீன உள்நாட்டுப் போர் முடிவடைந்ததிலிருந்து சீனா, தைவானின் மீது இறையாண்மையை வலியுறுத்தி வருகிறது. அப்போதிலிருந்து தைவானை ஒரு கிளர்ச்சி மாகாணமாக சீனா கருதுகிறது. அது மீண்டும் முக்கிய நிலப்பரப்புடன் ஒன்றிணைக்கப்பட வேண்டும், தேவைப்பட்டால் பலப்பிரயோகம் மூலமாகவும் இதை சாதிக்கவேண்டும் என சீனா நினைக்கிறது. .
சீனா தைவானைத் தாக்கினால், அந்த நாட்டின் மிக முக்கிய நட்பு நாடான அமெரிக்கா, நடவடிக்கை எடுக்கும் என்பதும் சாத்தியம்தான்.
"தைவான் மற்றும் அமெரிக்காவிற்கு எதிரான சாதாரண முறையிலான போரை சீனர்கள் வெல்வார்கள் என்பதை போர் விளையாட்டுக்கள் காண்பிக்கின்றன," என்று எல்ஸ்பெர்க் கூறினார்.
"இந்த நிலைமையை சமாளிக்க உடனடியாக சீனாவிற்கு எதிராக அணுஆயுதப்போரை தொடங்குவதற்கான கேள்வி எழுகிறது. 1958 இல், தேவைப்பட்டால் அதைச் செய்வதாக அமெரிக்கா உறுதியளித்தது போன்ற ஒரு சூழல் மீண்டும் உருவாகக்கூடும்,"என்கிறார் அவர்.
இறுதியில் 1958இல் அந்தத்தேவை வரவில்லை. ஆனால், அமெரிக்க ராணுவத் தலைவர்கள் அது நிகழக்கூடும் என்று ஏன் நம்பினர் என்பதை எல்ஸ்பெர்க் வெளியிட்ட ஆவணங்கள் விரிவாக சுட்டிக்காட்டுகின்றன.
கம்யூனிஸ்ட் சீனப் படைகள் தைவானின் தேசியவாத அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தீவுகளைத் தாக்கத் தொடங்கிய 1958 ஆம் ஆண்டின் நெருக்கடியைப் பற்றிய ஒரு ஆய்வில் இருந்த டஜன் கணக்கான முக்கிய பக்கங்கள், எல்ஸ்பெர்க் அம்பலப்படுத்திய ஆவணங்களில் அடங்கும்.

பட மூலாதாரம், Getty Images
1966 ஆம் ஆண்டு தேதியிட்ட இந்த ஆய்வு, அரசால் நிதியளிக்கப்பட்ட சிந்தனைக் குழுவான ராண்ட் கார்ப்பரேஷனுக்காக மோர்டன் ஹால்பெரின் எழுதியது. பின்னர் 1975ஆம் ஆண்டில் இதன் சில பகுதிகள் அகற்றப்பட்டு, பொது பார்வைக்கு வைக்கப்பட்டது.
தணிக்கை செய்யப்பட்ட ஒரு பத்தியில், முப்படைகளின் உயர் தலைவர் ஜெனரல் நாதன் ட்வினிங் உள்ளிட்ட மூத்த ராணுவத் தலைவர்கள், "அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாதது என்று உணர்ந்தனர்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
தைவான் மீதான தாக்குதல்களை சீனா நிறுத்தாவிட்டால், "சீனா மீது அணுசக்தித் தாக்குதல்களை நடத்துவதைத் தவிர அமெரிக்காவுக்கு வேறு வழியில்லை" என ட்வின்னிங் சுட்டிக்காட்டியதாக மற்றொரு பிரிவு கூறுகிறது.
கம்யூனிஸ்ட் சீன குண்டுவெடிப்புகள் குறைந்தபோது, இவை எதற்கும் தேவை இருக்கவில்லை.
இருப்பினும், இந்த அத்தியாயத்தை முன்னிலைப்படுத்துவது ஒரு முக்கியமான நோக்கத்திற்கு உதவுகிறது என லண்டன் SOAS பல்கலைக்கழகத்தின் சீன இன்ஸ்டிட்யூட்டின் இயக்குநர் பேராசிரியர் ஸ்டீவ் சாங் கூறினார்.
ஆயுதங்களைப் பொருத்தவரை சீனா "சரியான வகையான திறன்களை" வளர்த்துக் கொள்வதால், தைவான் மீது ராணுவ மோதலின் ஆபத்து அதிகமாகிவிடும் என அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
இந்த ஆபத்தை தனது கசிவு மூலம் அம்பலப்படுத்திய எல்ஸ்பெர்க், உளவு சட்டத்தின் கீழ் (espionage act) தன் மீது வழக்குத் தொடரப்படுவதற்கான சாத்தியகூறை எதிர்கொண்டதாகக் கூறினார்.
எதிர்ப்புக்குரல்களை அடக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட இந்த சட்டம் 1917 ஆம் ஆண்டில் முதலாம் உலகப் போரின்போது இயற்றப்பட்டது.
அக்காலத்தின் பாதுகாப்புக் பிரச்சனைகளைப் பிரதிபலிக்கும் வகையில் இந்தச் சட்டம், அமெரிக்காவை சேதப்படுத்தக்கூடிய அல்லது எதிரிக்கு பயனளிக்கும் நோக்கிலான அங்கீகரிக்கப்படாத தகவல்களை வெளியிடுவதை தடைசெய்தது.
காலப்போக்கில், அமெரிக்க அரசியலமைப்பின் முதல் திருத்தம் காரணமாக, பேச்சு சுதந்திரம் மீதான சட்டத்தின் கட்டுப்பாடுகள் தொடர்பாக வழக்குகள் தொடரப்படும் நிலை உருவானது.
ஒரு ஆரம்ப வழக்கு சோஷியலிஸ்ட் சார்லஸ் டி ஷென்க் சம்பந்தப்பட்டது. ராணுவ வரைவை எதிர்க்கும் துண்டு பிரசுரங்களை விநியோகித்ததற்கான தண்டனை1919 இல் உறுதி செய்யப்பட்டது.
மிக சமீபத்திய ஆண்டுகளில், சிஐஏ ஆலோசகர் எட்வர்ட் ஸ்னோவ்டென், அமெரிக்க ராணுவ புலனாய்வு ஆய்வாளர் செல்சியா மானிங் மற்றும் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாங்கே ஆகியோர் இந்தச் சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
அவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகள், 1971ல் எல்ஸ்பெர்கில் இருந்து தொடங்கி, இது போன்ற முறைகேடுகளை அம்பலப்படுத்துபவர்களை அடக்கிவைக்கும் போக்கு அதிகரிப்பதை பிரதிபலிக்கின்றன. அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டாலும், மற்றவர்கள் அவ்வளவு அதிர்ஷ்டசாலிகள் அல்ல.
எல்ஸ்பெர்க்கைப் போலவே அவர்களும் நீதிமன்றத்தில் தங்களைத் தற்காத்துக் கொள்ள மிகவும் குறைவான வாய்ப்பையே கொண்டிருந்தனர்.
பத்திரிகைகளுக்கு ரகசிய தகவல்களை வழங்கும் அரசு அதிகாரிகளின் " கைகள் பெரும்பாலும் கட்டப்பட்டிருக்கும்" என ஃப்ரீடம் ஆஃப் பிரஸ் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் ட்ரெவர் டிம் கூறினார்.
"நீங்கள் வெளிப்படுத்தியவை அரசின் சட்டவிரோத நடத்தை என்பதை சுட்டிக் காட்டினாலும்கூட அது எடுபடாது," என டிம் பிபிசியிடம் கூறினார். "இவை அனைத்தும் நீதிமன்றத்தில் பொருத்தமற்றதாகக் கருதப்படுகின்றன. இதன் பொருள் என்னவென்றால், உண்மையில் நம்மை தற்காத்துக்கொள்ள எதுவும் இல்லை."
பென்டகன் பேப்பர்களை பொது நலனுக்காக கசியவிட்டதாக விசாரணையின்போது எல்ஸ்பெர்க்கால் வாதிட முடியவில்லை. இந்த வாதம் பொருத்தமற்றது என நீதிபதி தீர்ப்பளித்தார். ஏனென்றால் இந்த சட்டம் பத்திரிகையாளர்களால் பெரும்பாலும் சுட்டிக்காட்டப்படும் அத்தகைய தற்காப்பை வழங்கவில்லை.
இந்த தற்காப்பு இல்லாமல், தன்னைப்போன்ற அரசாங்கத்தின் தவறுகளை வெளிகொண்டுவரும் நபர்கள் "ஒரு நியாயமான விசாரணையை ப் பெற முடியாது" என எல்ஸ்பெர்க் குறிப்பிட்டார். நீண்ட சிறை தண்டனையைத் தவிர்ப்பதற்காக, பெரும்பாலான பிரதிவாதிகள் , மேல்முறையீடு செய்வதற்கான உரிமையை கைவிடுவதாக ஒப்பந்தம் செய்துகொண்டுவிடுகிறார்கள்.
"நான் அதை மாற்ற விரும்புகிறேன். நமக்கு அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டும் அதிகமான நபர்கள் தேவை," என எல்ஸ்பெர்க் கூறினார்.
இரண்டாவது முறையாக அவர்மீது வழக்கு தொடரப்பட்டால் எல்ஸ்பெர்க் வேறு அணுகுமுறையை மேற்கொள்வார். இதில் எந்த பேரமும் இருக்காது. வெள்ளை மாளிகையுடன் மறைமுக சண்டையும் இருக்காது.

பட மூலாதாரம், Getty Images
இந்தமுறை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றால் அது தன்னுடைய நாளாக இருக்கவேண்டும் என தான் விரும்புவதாக அவர் கூறுகிறார்.
" அரசியலமைப்பின் முதல் திருத்தம் பத்திரிகை சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது," என அவர் கூறினார். "ஆகவே இங்கு உளவுச் சட்டத்தை பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கக்கூடாது. முந்தைய வழக்குகளின் அடிப்படையில் நான் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும் என நான் நினைக்கிறேன்"என்று அவர் குறிப்பிட்டார்.
இது நீதித்துறை இதுவரை சந்தித்திராத ஒரு நிலைமையாக இருக்கும். ஏனென்றால் இதுபோன்ற கசிவுகளை வெளியிட்டவர்களை தண்டிக்க உளவுச் சட்டம் பயன்படுத்தப்படுவதை உச்சநீதிமன்றம் இதுவரை கையாண்டதே இல்லை.
இதைக் கருத்தில் கொண்டுதான் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் "இந்த வழக்கை எனக்கு எதிராகக் கொண்டுவர தயங்குகிறது. ஏனெனில் ரகசியமாக வைக்கப்பட்ட ஆவணங்களை, அங்கீகரிக்கப்படாத முறையில் ஒரு 90 வயது நபர் வெளிப்படுத்தியிருப்பது குறித்து மக்களின் கவனத்தை அது ஈர்க்கும்," என எல்ஸ்பெர்க் கூறினார்

பட மூலாதாரம், Getty Images
"அவர்கள் அதை நீதிமன்றத்தில் சோதிக்க விரும்புவதாக நான் நினைக்கவில்லை. அவர்கள் தோற்பதற்கு நல்ல வாய்ப்பு உள்ளது," என அவர் குறிப்பிட்டார்.
இதுவரை, உளவு சட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிரான முறையீடுகள், கீழ் நீதிமன்றங்களை தாண்டியதில்லை.
சில உச்சநீதிமன்ற நீதிபதிகள் பேச்சு சுதந்திரத்தை ஆதரித்தாலும்கூட, இந்தச் சட்டத்தின் கீழ் உள்ள வழக்குகளில் அரசியலமைப்பை சவால் விட முற்படும் எவருக்கும் ஒரு "கடுமையான போராட்டம்" இருக்கும் என்று தான் கருதுவதாக டிம் கூறினார்.
இதை எதிர்த்துப் போராட வேண்டுமா என்ற கேள்வி வரும்போது, அரசின் ரகசியங்களை அம்பலப்படுத்துவதால் ஏற்படக்கூடிய இடர்களை தான் முன்பே உணர்ந்துவிட்டதாக எல்ஸ்பெர்க் தெரிவிக்கிறார்.
90 வயதில் கூட, சில விஷயங்களில் தியாகங்களைச் செய்வதில் மதிப்புள்ளது என எல்ஸ்பெர்க் கூறினார்.
"1971 இல் கூட நான் அப்படித்தான் உணர்ந்தேன். என்ன நடக்கும் என்பதை நான் முன்பே கணக்கில் எடுத்துக்கொண்டுவிட்டேன்," என்று அவர் கூறினார். "ஒரு போரைத் தடுப்பது மற்றும் அரசியலமைப்பு முறைகேடுகளைத் தடுப்பது என்பது , சிறைதண்டனையின் ஆபத்தை ஒப்பிடும்போது நிச்சயமாக மேலானது," என அவர் குறிப்பிட்டார்.
பிற செய்திகள்:
- கொரோனா தடுப்பூசி: ஜி7 நாடுகளை எச்சரிக்கும் யூனிசெஃப் - புதிய ஆபத்து
- இந்தியாவில் கருப்பு பூஞ்சை தொற்று அதிகம் ஏற்படுவதற்கு நீரிழிவு காரணமா?
- 400 கால்பந்து திடல்களின் அளவில் 8 கோடி டன் மண் கொண்டு செயற்கை தீவு: டென்மார்கில் நிறைவேறிய சட்டம்
- இந்தியாவில் யுரேனியம் விற்க கள்ளச்சந்தை? - கவலை எழுப்பும் பாகிஸ்தான்
- கொரோனா தடுப்பூசியால் சில ஆண்டுகளுக்கு பிறகு பாதிப்பு வருமா? – சந்தேகங்களும் விடைகளும்
- ஒலியைவிட வேகமாக செல்லும் பயணிகள் விமானம்: அமெரிக்காவின் யுனைடெட் ஏர்லைன்ஸ் திட்டம்
- கொரோனா தடுப்பூசியால் சில ஆண்டுகளுக்கு பிறகு பாதிப்பு வருமா? – சந்தேகங்களும் விடைகளும்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












