இளவரசர் ஃபிலிப்: அரச குடும்ப துக்கத்தை இவ்வளவு விரிவாக பிபிசி ஏன் வழங்குகிறது?

பட மூலாதாரம், Getty Images
இன்றைய பிபிசி இணைய பக்க செய்திகள், வித்தியாசமாக தெரியும். பிபிசி வலைதளங்களும், தொலைக்காட்சி செய்திகளும் ஒரே செய்தியை மட்டும்தான் ஆழமாக வழங்கி வருகிறது. எதுவும் தீவிரமற்று பார்க்கவோ கேட்டிருக்கவோ முடியாது. செய்தி வாசிப்பவர்கள் சற்று வருத்தமான சுரத்தில் வாசித்திருப்பார்கள்.
இந்த மாற்றங்கள் பிரிட்டன் அரச குடும்பத்தில் ஒரு மூத்த உறுப்பினர் காலமானார் என்பதால் நடந்தவை.
நீங்கள் ஏற்கெனவே செய்திகளை பார்த்தோ படித்து இருந்தாலோ, அரசி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான ஃபிலிப் காலமானார் என்பது தெரிந்திருக்கும். இதுபோல, பிபிசி செய்தி வழங்கக்கூடிய அரச குடும்பத்தை சேர்ந்த மூத்த நபர்களில் இளவரசர் ஃபிலிப்பும் ஒருவர்.
ராணி இரண்டாம் எலிசபெத், அவரின் மகன் மற்றும் வாரிசு இளவரசர் சார்லஸ், அவரின் மகன் மற்றும் அவருக்கு அடுத்தபடியாக அரியணைக்கானவர் இளவரசர் வில்லியம். இவர்கள்தான் இளவரசர் ஃபிலிபை தவிர்த்த மூவர்.
இந்த இறப்பை பிபிசி பிற ஊடகங்களை காட்டிலும் தீவிரமாக கருதுவது ஏன்?
அரச குடும்பத்தில் ஒருவர் உயிரிழப்பது பிபிசிக்கு ஏன் முதன்மைச் செய்தி ஆனது?

பட மூலாதாரம், Getty Images
அரசி இரண்டாம் எலிசபெத் நீண்ட நாட்களாக அரியணையில் இருப்பவர். அதாவது 69 வருடங்கள். அவர் பிரிட்டன் மற்றும் 15 நாடுகளின் தலைவர்.
அவர் காமன்வெல்த்தின் தலைவர். இது 54 உறுப்பு நாடுகளை கொண்ட தன்னார்வ அமைப்பு. கிட்டதட்ட இந்த உறுப்பு நாடுகள் அனைத்தும் கடந்த காலங்களில் பிரிட்டன் ஆட்சியில் இருந்தவை. அவர் பிரிட்டன் மக்களுக்கு மிக முக்கியமானவர். அதற்கும் மேல்.
பிரிட்டன் அரசக் குடும்பத்தில் யாரேனும் காலமானால் அதற்கு சர்வதேச ஊடகங்கள் பெரிதும் கவனம் செலுத்தும். எனவே இந்த செய்தியை சரியான முறையில் ஒளிபரப்ப அனைத்தும் முயற்சிகளையும் பிபிசி எடுக்கும். ஒரு நல்ல காரணத்திற்காக.
பிபிசிக்கு பிரிட்டன் அரசிடமிருந்து நிதி கிடைக்கவில்லை. மாறாக உரிம கட்டணமாக பிரிட்டன் மக்கள் செலுத்தும் பணமே நேரடியாக கிடைக்கிறது. இந்த நிதி அமைப்பு, பிபிசி சுதந்திரமாக செயல்படுவதையும் உறுதி செய்கிறது.
பிபிசி உரிம கட்டணம் செலுத்தும் மக்களுக்கு நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். பிரிட்டனில் பல ஆண்டு காலமாக அரச குடும்பத்தின் மீது மக்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
அரசி எலிசபெத்தின் தாயார் 2002ஆம் ஆண்டு இறந்தபோது, ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் அவரது உடல் வைக்கப்பட்டிருந்த வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் அஞ்சலி செலுத்துவதற்காக மூன்று தினங்களாக வந்தனர்.
பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் வீதிகளில் குவிந்தனர் என்றும், வின்சரில் இறுதியாக அவர் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அந்த நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் 10 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்தனர் என மதிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச ஊடகம் இந்த செய்தியை விரிவாக பிரசுரித்தது.
ஆனால் இதில் எந்த ஆச்சரியமும் இல்லை. அரச குடும்பத்தினர் தொடர்பான எந்த ஒரு செய்தியும் உலகம் முழுவதும் அதீத முக்கியத்துவம் வாய்ந்த ஒரு செய்தியாக கருதப்படுகிறது. பிற அரச குடும்ப நிகழ்ச்சிகள் பில்லியனுக்கு அதிகமான நேயர்களை கண்டுள்ளது.
சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், இது முக்கியமான செய்தி. அவ்வாறே பிபிசி இதை கையாளுகிறது.

"அரச குடும்ப நபர்களுக்கு நட்சத்திர நபர்களுக்கு கிடைக்காத வரவேற்பை காட்டிலும் அதிக வரவேற்பு கிடைக்கிறது." என்கிறார் பிபிசியின் அரச குடும்ப செய்தியாளர் ஜானி டைமண்ட். "இதை துல்லியமாக விளக்க முடியாது. இந்த நவீன காலத்தில் ராஜ வாழ்க்கை என்பது சற்று பொருத்தமில்லாதது என்று தோன்றினாலும் பலர் தங்கள் மனதில் கதைகளில் வருவதை போன்ற இந்த ராஜ வாழ்க்கையை ரசிக்கத்தான் செய்கிறார்கள்." என்கிறார் அவர்.
இம்மாதிரியான முக்கிய நிகழ்வுகளின்போது பிபிசி உலக சேவையானது செய்திகளை விரிவாக வழங்கக்கூடிய ஒரு தளமாக உள்ளது. "அரச குடும்பத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழப்பது சர்வதேச அளவில் பலர் கவனிக்கூடிய ஒரு செய்தியாக உள்ளது. உலகம் முழுவதும் உள்ள பிபிசியின் மில்லியன் கணக்கான நேயர்கள், வாசகர்கள், இம்மாதிரியான செய்திகளை முழுமையாக தெரிந்து கொள்ள வருவார்கள்" என்கிறார் பிபிசி உலக சேவை மொழிகளின் செய்தி கட்டுப்பாட்டாளர் தாரிக் கஃபாலா.
அரச குடும்பத்தில் மூத்த நபர் ஒருவர் உயிரிழந்த செய்தியை பிபிசி எவ்வாறு வழங்கும்?
இம்மாதிரியான தருணங்களில் பிபிசியின் நேயர்கள், இந்த செய்தியை வேறு எங்காவது கண்டிருக்கலாம். ஏனென்றால் பிபிசி முதலில் செய்தி கொடுப்பதைவிட சரியாக கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாகவுள்ளது.
ஒரு பிரேக்கிங் செய்தியை போல அல்லாமல், இது ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்புபோல இருக்கலாம். பிற நிறுவனங்கள் கவர்ச்சியான கிராஃபிக்ஸையும் பயன்படுத்தலாம் ஆனால் பிபிசி ஒரு உயிர் பிரிந்ததை நினைவு கொண்டு அவ்வாறு பயன்படுத்துவதில்லை. காலமான செய்தி அறிவிக்கப்பட்டவுடன் பிபிசி உடனடியாக பிற செய்திகளை பிரசுரிப்பதில்லை. சில நகைச்சுவையான செய்திகளோ வித்தியாசமான செய்திகளோ வலைதளத்திலிருந்தும், தொலைக்காட்சியிலிருந்தும் ரேடியோ செய்தியிலிருந்தும் நீக்கப்படும்.
காலமான செய்தியே அனைத்திலும் முதன்மை செய்தியாக பிரசுரிக்கப்படும்.
இளவரசர் ஃபிலிப்புக்கு ஏன் இந்த முக்கியத்துவம்?

பட மூலாதாரம், AFP / GETTY IMAGES
இளவரசர் ஃபிலிப் மகுடத்திற்கான வரிசையில் இல்லை என்பது உண்மை. அவரின் மூத்த மகனே மகுடத்திற்கு உரியவர். இளவரசர் ஃபிலிப், அரசர் என்ற பட்டத்தை பெற்றதில்லை.
ஏனென்றால் பிரிட்டனை பொறுத்தவரை அரசரை மணந்து கொள்ளும் பெண் அரசியாகிறார். ஆனால் அரசியை மணந்து கொள்ளும் ஆண் அரசர் என்ற பட்டத்தை பெறுவதில்லை. அரசர் பட்டம் மகன்களுக்கும் பேரன்களுக்குமே வழங்கப்படும்.
1947ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி அரசியை திருமணம் செய்து கொண்டதிலிருந்து அரசி இரண்டாம் எலிசபெத்துக்கு துணையாக இருக்கிறார் ஃபிலிப். பிரிட்டன் வரலாற்றிலேயே அரசியின் கணவராக நீண்ட காலம் செயல்பட்டவர் இவர். மேலும் அவரின் தலையாய கடமை அரசிக்கு ஆதரவு அளிப்பது.
அரசி தனது பேச்சுக்களில் கூட, `நானும் எனது கணவரும்` என தொடங்குவதுண்டு.
"அவர் இத்தனை காலம் எனது பலமாக இருக்கிறார்" என அவர் 50ஆவது திருமண நிகழ்வில் பேசினார். நானும், அவரது மொத்த குடும்பமும், பல நாடுகளும் அவருக்கு பெரும் கடன்பட்டுள்ளோம். அதை அவர் நினைவுகூர்வது இல்லை. அது நமக்கு தெரியாமலும் இருக்கலாம்." என்றார்.
இந்த முக்கியத்துவம், அவரது இறப்பு குறித்த செய்தி வழங்குதலை உறுதிப்படுத்துகிறதா?
"இதுதான் சர்வதேச அளவில் வாழும் கடைசி அரச குடும்பம். அரசியுடன் தனியாகவும், உலகின் எல்லா மூலைக்கும் அவர் பயணம் செய்துள்ளார். ஃபிலிப் சர்வதேச அளவில் புகழ்பெற்றவர். அந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்" என்கிறார் டைமண்ட்.












