You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நிலவின் மேற்பரப்பில் விண்வெளி ஆய்வு மையம்: சீனா - ரஷ்யா கூட்டாக அறிவிப்பு
நிலவில் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை அமைக்கும் கூட்டு முயற்சி திட்டத்தை சீனாவும் ரஷ்யாவும் அறிவித்துள்ளன.
ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ், சீனாவின் தேசிய விண்வெளி நிர்வாகத்துடன் இணைந்து நிலவின் மேற்பரப்பில், சுற்றுப்பாதையில் அல்லது இரண்டிலும் ஆராய்ச்சி மேற்கொள்வதற்கான கட்டமைப்புகளை உருவாக்கும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இரண்டு நாடுகளும் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆராய்ச்சி கட்டமைப்பை மற்ற நாடுகளும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பியதன் 60ஆவது ஆண்டை விரைவில் கொண்டாட உள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
தி இன்டர்நேஷனல் சயின்டிபிக் லூனார் ஸ்டேஷன் (The International Scientific Lunar Station) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஆய்வு மையத்தில், சந்திரன் குறித்த அடிப்படை ஆராய்ச்சிகளும், அதன் பயன்பாடு குறித்த ஆய்வுகளும் மேற்கொள்ளப்படும் என்று சீன, ரஷ்ய விண்வெளி அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"சீனாவும் ரஷ்யாவும் இணைந்து விண்வெளி அறிவியல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, விண்வெளி உபகரணங்கள் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் ஆகியவற்றில் உள்ள அனுபவத்தைப் பயன்படுத்தி, நிலவில் ஒரு சர்வதேச ஆராய்ச்சி நிலையத்தை நிர்மாணிப்பதற்கான திட்டத்தை உருவாக்கும்" என்று மாண்டரின் மொழியில் உள்ள அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆராய்ச்சி நிலையத்தின் திட்டமிடல், வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் செயல்பாட்டில் ரஷ்யா மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகளும் இணைந்து செயல்படும் என்று அதில் மேலும் கூறப்பட்டுள்ளது.
இந்த திட்டம் ஒரு 'மிகப் பெரிய ஒப்பந்தம்' என்று சீனாவின் விண்வெளித் திட்டங்களில் நிபுணத்துவம் பெற்ற ஆய்வாளர் சென் லான், ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
"இதுவே சர்வதேச அளவில் சீனாவின் மிகப் பெரிய கூட்டு விண்வெளி ஆராய்ச்சி திட்டம் என்பதால் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது" என்று அவர் கூறினார்.
மற்ற உலக நாடுகளை ஒப்பிடுகையில் சீனா விண்வெளி ஆய்வுத்துறையில் தாமதமாகவே முன்னேற தொடங்கியது. ஆனால், கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் சாங்கே-5 விண்கலம் நிலவிலிருந்து வெற்றிகரமாக பாறை மற்றும் மண்ணை பூமிக்கு கொண்டுவந்து சாதனைப் படைத்திருந்தது.
இது விண்வெளித்துறையில் சீனாவின் அதிவேக வளர்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் பார்க்கப்பட்டது.
விண்வெளி ஆராய்ச்சியில் உலக நாடுகளுக்கு முன்னோடியாக விளங்கிய ரஷ்யாவுக்கு கடந்த சில ஆண்டுகளாக சீனாவும் அமெரிக்காவும் கடும் சவால்களை அளிக்க தொடங்கியுள்ளன. சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை அழைத்துச் செல்வதில் முன்னணியில் இருந்து வந்த ரஷ்யா, கடந்த ஆண்டு அந்த இடத்தை அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸிடம் இழந்தது.
2024க்குள் நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்புவதற்கான ஆர்ட்டெமிஸ் என்ற திட்டத்தை அமெரிக்கா அறிவித்துள்ளது. இதன்படி, ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் நிலவின் மேற்பரப்பில் அடியெடுத்து வைப்பார்கள். இது சாத்தியமாகும் பட்சத்தில், 1972க்குப் பிறகு நிலவில் கால்பதித்தவர்கள் என்ற சாதனையை அவர்கள் படைப்பார்கள்.
பிற செய்திகள்:
- 2 நொடிக்கு ஒரு மின்சார ஸ்கூட்டர்: தமிழகத்தில் அமையும் ஓலாவின் உலகின் மிகப் பெரிய தொழிற்சாலை
- காங்கோ தங்க மலை: அள்ள அள்ள தங்கம், ஆனந்தத்தில் மக்கள் - என்ன சொல்கிறது அரசு?
- மண்ணையே உரமாக, பூச்சிக் கொல்லியாகப் பயன்படுத்தி சாதிக்கும் தெலங்கானா இயற்கை விவசாயி
- ஹாரி - மேகன் பேட்டி: இன ரீதியிலான குற்றச்சாட்டு குறித்து பக்கிங்காம் அரண்மனை விளக்கம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்