நல்லேலி கோபோ: எண்ணெய் நிறுவனத்தை எதிர்த்துப் போராடி வென்ற ஒன்பது வயது சிறுமி

நல்லேலி கோபோ

பட மூலாதாரம், Christian Monterrosa

    • எழுதியவர், பேட்ரிஷியா சுல்பரான் லொவேரா,
    • பதவி, பி பி சி முன்டோ, லாஸ் ஏஞ்சலீஸ்

லாஸ் ஏஞ்சலஸில் உள்ள ஒரு லத்தீன் சமூகம், ஒரு எண்ணெய் நிறுவனத்திற்கு எதிராக தங்கள் சுற்றுப்புறத்தை மாசுபடுத்துவதாகத் தொடங்கிய போராட்டத்தில், ஒரு இளம் பெண் ஒரு முக்கிய பங்காற்றியுள்ளார்.

ஆஸ்துமா, மூக்கில் ரத்தக் கசிவு , தலைவலி போன்றவற்றால் அவதிப்பட தொடங்கியபோது நல்லேலி கோபோவுக்கு வயது 9.

இது தெற்கு லாஸ் ஏஞ்சலஸில் உள்ள அவரது வீட்டின் முன் செயல்பட்டு வரும் எண்ணெய்க் கிணற்றுக்கு எதிரான போரின் தொடக்கமாக இருந்தது.

விரைவில், அண்டை வீட்டினர் பலருக்கும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதை நல்லேலியும் அவரது தாயும் அறிந்தனர்.

பெரும்பாலும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைக் கொண்ட இந்தச் சமூகம், அந்த இடம் தற்காலிகமாக மூடப்படும் வரை தனது எதிர்ப்பைத் தொடர்ந்தது.

கோபோ அத்துடன் நிற்கவில்லை. இளம் ஆர்வலர்கள் மற்றும் அமைப்புகளின் குழுவுடன் சேர்ந்து, எண்ணெய் பிரித்தெடுப்பதில் கூடுதல் விதிமுறைகளைக் கோரி நகர நிர்வாகத்துக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து அதில் வெற்றியும் பெற்றார்.

அலென்கோ நிறுவனம் மற்றும் அதன் எண்ணெய்க் கிணறு தளத்தைக் கையாளுதலை எதிர்த்து ஒரு கிரிமினல் வழக்கு இந்த மாத இறுதியில் மீண்டும் தொடங்குகிறது. இந்த விஷயம் குறித்துக் கருத்து தெரிவிக்க நிறுவனத்தினர் மறுத்துவிட்டனர். ஆனால் தாங்கள் விதிமுறைகளுக்கு இணங்கவே முதலீடு செய்ததாக முன்னரே கூறியுள்ளனர்.

நல்லேலி கோபோ மற்றும் கிரேட்டா

பட மூலாதாரம், Courtesy Nalleli Cobo

அவர் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக உள்நாட்டில் அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும், இப்போது அவர் கிரெட்டா துன்பெர்க்குடன் ஒப்பிடப்படுகிறார்.

கோபோ தனது 19 ஆவது வயதில் புற்றுநோய் பாதிப்புக்குள்ளானதை அடுத்து, 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தனது செயல்பாட்டு நடவடிக்கைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தார்.

அவருடைய நோய்க்கு என்ன காரணம் என்று அவருடைய மருத்துவர்களுக்குத் தெரியாது.

மூன்று அறுவை சிகிச்சைகள் மற்றும் மருத்துவ சிகிச்சையின் பின்னர், அவர் சமீபத்தில் புற்றுநோயிலிருந்து விடுபட்டார்.

இது தான் அவருடைய கதை.

2009 ஆம் ஆண்டு முதல் அலென்கோவுக்குச் சொந்தமான எண்ணெய்க் கிணற்றிலிருந்து 30 அடி தூரத்தில் உள்ள தென் மத்திய லாஸ் ஏஞ்சலஸில் உள்ள யுனிவர்சிட்டி பார்க்கில் வளர்ந்தேன்.

நான் என் அம்மா, என் மூன்று உடன்பிறப்புகள், என் பாட்டி, என் கொள்ளு தாத்தா, கொள்ளு பாட்டி அனைவருடனும் ஒரே வீட்டில் வாழ்ந்தேன். நான் உட்பட மொத்தம் நாங்கள் எட்டு பேர்.

என் தாயார் மெக்சிகோவைச் சேர்ந்தவர், என் அப்பா கொலம்பியாவைச் சேர்ந்தவர். எனக்கு 2 வயதாக இருந்தபோது அவர் நாடு கடத்தப்பட்டார், என் தாயார் தான் என்னை வளர்த்தார்.

2010 ஆம் ஆண்டு, எனக்கு ஒன்பது வயது. திடீரென்று எனக்கு வயிற்று வலி, குமட்டல் வர ஆரம்பித்தது.

நல்லேலி கோபோ

பட மூலாதாரம், Courtesy Nalleli Cobo

என்னால் நடக்க முடியாத அளவுக்கு உடல் பிடிப்பு ஏற்பட்டது, என் அம்மா தான் என்னைச் சுமந்து செல்வார். ஏனென்றால் நான் செயலற்றுப் போய் விட்டேன்.

எனக்கு மூக்கிலிருந்து ரத்தம் கசிவது மிகவும் தீவிரமடைந்தது. ரத்தக் கசிவினால் மூச்சுக் குழாய் அடைப்பு ஏற்படாமல் இருக்க, உட்கார்ந்தே தான் தூங்க வேண்டியிருக்கும்.

ஒரு மௌனக் கொலையாளியால் நான் என் வீட்டில் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லப்பட்டுக்கொண்டிருந்தேன்.

எனது உடல்நிலை பாதிக்கப்பட்டது மட்டுமல்ல, மற்றவர்களும் எப்படி பாதிக்கப்பட்டனர் என்பதைப் பார்த்து நான் மிகவும் குழம்பிப் போனேன்.

என் அம்மாவுக்கு 40 வயதில் ஆஸ்துமா நோய் தாக்கியது. இது மிகவும் அரிதானது, என் பாட்டி 70 வயதில் ஆஸ்துமாவுக்கு ஆளானார். இதுவும் மிகவும் அரிதானது. என் சகோதரிக்கு ஃபைப்ராய்டு பிரச்சினைகள் இருந்தன, என் சகோதரனுக்கு ஆஸ்துமா இருந்தது, எல்லோருக்கும் ஒருவித உடல்நலப் பிரச்னை இருந்தது.

ஆனால் எனது குடும்பம் மட்டுமல்ல, அது எங்கள் சமூகத்தின் பெரும்பகுதி பாதிக்கப்பட்டது.

தாய்மார்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதில், ஏதோ தவறு நடப்பதாகத் தோன்றியது.

அதைக் காற்றின் சுவாசத்திலேயே உணர முடிந்தது. அழுகிய முட்டைகளைப் போல வாசனை வீசியது. அந்த துர்நாற்றம் வீட்டிற்குள் பரவி விட்டால், அது ஜன்னல் கதவுகளை மூடினாலும், ஃபேன் போட்டாலும் காற்று சுத்திகரிப்பான் இயக்கினாலும் அந்த நாற்றம் போகாது.

மற்ற நேரங்களில் கொய்யா அல்லது சாக்லேட் போல வாசனை வரும். இவை செயற்கை நறுமணமாக இருந்தது.

முதலில், கட்டடத்தில் கசிவு இருக்குமோ என்று தான் நினைத்தோம். பிறகு நச்சியலாளர்கள் வந்து எங்கள் சமூகத்தினருடன் பேசத் தொடங்கினர்.

எண்ணெய் கிணறு

பட மூலாதாரம், Christian Monterrosa

எண்ணெய் எடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் சில வேதியியல் பொருட்களின் உமிழ்வுகள், நீண்ட நாட்கள் இதற்கு ஆட்பட்டால், மனித ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்ககூடும் என்று விளக்கினர்.

அப்போது தான் தெருவுக்கு அப்பாலிருக்கும் அந்த எண்ணெய்க் கிணறு குறித்து நாங்கள் சிந்திக்கத் தொடங்கினோம்.

எனவே நாங்கள் சமூகத்தை ஒழுங்கமைக்கத் தொடங்கினோம். பீபிள், நாட் போஸோஸ்( People not Pozos) ("போஸோஸ்" என்றால் ஸ்பானிஷ் மொழியில் எண்ணெய் கிணறுகள்) என்ற பிரச்சாரத்தை உருவாக்கினோம்.

தென் கடற்கரை காற்றுத் தர மாவட்ட மேலாண்மையில் நாங்கள் புகார்களைத் தாக்கல் செய்தோம், சிட்டி ஹால் விசாரணையில் மக்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளத் தயாரா என்று கேட்டு ஒவ்வொருவர் வீட்டுக் கதவுகளையும் தட்டினோம்.

ஸ்பானிஷ் மொழி பேசும், கருப்பு மற்றும் பழுப்பு நிறக் குடியேறிகளை உள்ளடக்கிய இந்தச் சமூகம், இது வரை யாரும் கவலைப்படாத ஒரு சமூகம், சிட்டி ஹாலுக்குத் தங்கள் குரலை வெளிப்படுத்த வந்தது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

பைப்லைன்

பட மூலாதாரம், Christian Monterrosa

எனது கதையைப் பகிர்ந்து கொள்ள முடியுமா என்று அவர்கள் என்னிடம் கேட்டார்கள், நான் எனது சிறிய குறிப்பு அட்டைகளைப் பயன்படுத்தி விளக்கினேன்.

நான் எப்போதும் வெட்கப்படும் இயல்பு கொண்டவள். ஆனால் பொதுவெளியில் பேசுவது எனக்கு எப்போதும் மிகவும் பிடித்தமான ஒன்று.

லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ் எங்களைப் பற்றி ஒரு செய்திக் கட்டுரையை வெளியிட்டது. இது முன்னாள் அமெரிக்க கலிபோர்னியா செனட்டர் பார்பரா பாக்ஸரின் கவனத்தை ஈர்த்தது.

பத்திரிகையாளர் சந்திப்பில், பாக்ஸர் EPA (சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம்)- விலிருந்து புலனாய்வாளர்களை வரவழைத்து, அவர்களைச் சோதனையிடச் செய்தார்.

அவர்கள் சில நிமிடங்கள் மட்டுமே அங்கே இருந்தார்கள், ஏனென்றால் அவர்களால் அந்த துர்நாற்றத்தைத் தாங்கமுடியவில்லை.

(உள்ளூர் மற்றும் கூட்டாட்சி விசாரணைகளுக்குப் பிறகு, தற்காலிகமாகக் கிணற்றை மூட அலென்கோ நிறுவனம் ஒப்புக்கொண்டது).

நல்லேலி கோபோ

பட மூலாதாரம், Cortesia Nalleli Cobo

(லாஸ் ஏஞ்சலஸ் நகர நிர்வாகம், அந்நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர்ந்தது. 2016 ஆம் ஆண்டில், மீண்டும் எண்ணெய் எடுக்கும் பணியைத் தொடர விரும்பினால், கடுமையான விதிமுறைகளைப் பின்பற்றவேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை அலென்கோ பெற்றது. )

இது அறிவிக்கப்பட்டபோது நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம். ஆனால் இது தாமதமாகப் பெறப்பட்ட நீதி தான். நாங்கள் 2010 இல் போராடத் தொடங்கினோம், ஆனால் 2013 இல் தான் மூடப்பட்டது.

இப்போது அது நிரந்தரமாக மூடப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

நாங்கள் இந்த இயக்கத்தைக் கையெடுத்தபோது, இதனால் பாதிக்கப்பட்டது எங்கள் சமூகம் மட்டுமல்ல என்பதை உணர்ந்தோம்.

580,000 ஏஞ்சலஸ்வாசிகள் எண்ணெய்க் கிணற்றுக்குக் கால் மைல் தூரத்தை விடக் குறைந்த தூரத்தில் வசிக்கிறார்கள்.

பெரும்பாலானவை குறைந்த வருமானம் கொண்ட சமூகங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நான் வேறு எங்காவது இதைப் பற்றிப் பேசச் செல்லும் போது, நான் லாஸ் ஏஞ்சலஸைச் சேர்ந்தவன் என்று சொல்லும்போதெல்லாம், மக்கள் குதூகலமாகி விடுவார்கள். "எப்பேர்ப்பட்ட இடம், ஸ்வர்க்க பூமி, ஹாலிவுட், பிரபலங்கள்…." இவை தான் அவர்களுக்குத் தெரிகிறது.

சரி, நாட்டின் மிகப்பெரிய நகர்ப்புற எண்ணெய் வயல் லாஸ் ஏஞ்சலிஸில் உள்ளது. ஆனால் அது பற்றி யாரும் பேசுவதில்லை.

நல்லேலி கோபோ

பட மூலாதாரம், Getty Images

நான் தென் மத்திய இளைஞர் தலைமைக் கூட்டணியின் இணைப்பாளர்களில் ஒருவன், மற்ற அமைப்புகளுடன் இணைந்து கலிபோர்னியா சுற்றுச்சூழல் தரச் சட்டத்தை மீறியதற்காக 2015 இல் லாஸ் ஏஞ்சலஸ் நகர நிர்வாகத்தை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தோம்.

நாங்கள் அதில் வென்றோம். அதாவது, இப்போது, எண்ணெய்க் கிணறுகளைத் திறக்கும்போது அல்லது விரிவாக்கும்போது ஒரு புதிய பயன்பாட்டுச் செயல்முறை உள்ளது.

நான் யூனிவர்சிட்டி பார்க்கிலிருந்து இடம் பெயர்ந்துவிட்டாலும், எண்ணெய் கிணறுகளுக்கும் பள்ளிகள், மருத்துவமனைகள், பூங்காக்கள் ஆகியவற்றுக்கும் இடையில் 2500 அடிக்கு சுகாதார மற்றும் பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை இப்போது கையெடுத்துள்ளேன்.

அதே நேரத்தில், நான் ஒரு சாதாரணமான பெண் தான். ஒப்பனை செய்து கொள்வதில் ஆர்வம் அதிகம். நடனம் ஆடுவேன். பயணம் செய்யவும் மிகுந்த ஆர்வம் உண்டு. நான் கல்லூரியில் பயில்கிறேன்.

என்னை வித்தியாசப்படுத்தும் ஒரே விஷயம் என்னவென்றால், என் ஆர்வம் என்ன என்பதை நான் இளமையிலேயே கண்டறிந்தேன்.

2020 ஜனவரி 15 ஆம் தேதி எனக்குப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.

நல்லேலி கோபோ

பட மூலாதாரம், Christian Monterrosa

முதலில் நான் இது குறித்து அமைதியாகவே இருந்தேன். காரணம், உள்வாங்கிக் கொள்ளக்கூட கொடுமையான ஒரு நோய் இது. அந்த இள வயதில் இந்நோய் தாக்கும் என்று யாரும் எதிர்பார்ப்பது கூட அரிது.

அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருந்ததால், நானும் என் தாயாரும் இதற்கான செலவு குறித்துக் கவலை கொண்டோம்.

பொதுமக்கள் நிதியுதவிப் பிரசாரத்தின் மூலம் நிதி திரண்டது எங்கள் அதிர்ஷ்டம்.

கருப்பை மட்டுமல்லாமல் அதனுடன் தொடர்புடைய பல உறுப்புகளையும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றும் ரேடிகல் ஹிஸ்டரக்டமி செய்து கொள்வது என்பது உடல் ரிதியாகவும் உணர்வு ரீதியாகவும் மிகவும் கடினமானது. படுக்கையை விட்டு எழுந்திருக்கவே எனக்கு ஆறு வாரங்களாயின.

ஆறு மாதங்கள் வரை என் தாயார் தான் என்னைக் குளிக்க வைத்தார்கள். நான் டஜன் கணக்கான மாத்திரைகள் உட்கொள்ள வேண்டியிருந்தது.

நல்லேலி கோபோ

பட மூலாதாரம், Getty Images

எனக்கு ஏன் புற்றுநோய் வந்தது என்று என் புற்று நோயியல் நிபுணருக்கு இன்னும் தெரியவில்லை; இது மரபு வழி வந்தது இல்லை என்பதை மட்டும் சோதனைகள் மூலம் அறிய முடிந்தது.

நான் வளர்ந்த சூழல் குறித்து அவர்களிடம் கூறி, ஏதேனும் சுற்றுச் சூழல் பரிசோதனை செய்ய முடியுமா என்று கேட்டேன்.

நல்லேலி கோபோ

பட மூலாதாரம், Christian Monterrosa

அறிவியல் வளர்ச்சி மூலம் இதற்கு விடை கிடைக்கும் வரை, என் நிலை ஒரு கேள்விக்குறிதான் என்று அவர்கள் கூறினார்கள்.

நான் சமீபத்தில் ஜனவரி 18 ஆம் தேதியிலிருந்து புற்றுநோய் இல்லாதவளாக இருக்கிறேன். அது குறித்து மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் உணர்கிறேன்.

சிவில் உரிமை வழக்கறிஞராக எனது வாழ்க்கையைத் தொடர விரும்புகிறேன். பின்னர் அரசியலில் ஈடுபட விரும்புகிறேன்.

வயது, பாலினம், இனம், சமூக, பொருளாதார நிலை அல்லது வாழ்விடம் இவற்றைச் சாராமல், தூய்மையான காற்றைச் சுவாசிக்கும் நிலை தான், என்னைப் பொருத்தவரை, சுற்றுச் சூழல் சம நீதி.

என் சமூகத்தையும் என் வீட்டையும் பாதுகாப்பது தான் அது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :