You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரத்தச் சிவப்பு நிறத்தில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் தவிக்கும் கிராமம் - காரணம் என்ன?
இந்தோனீசியாவில் இருக்கும் ஒரு கிராமத்தில், ஆடை தயாரிப்பு தொழிற்சாலையில் வெள்ளம் புகுந்துவிட்டதால் வெள்ள நீர் ரத்தச் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது.
இந்த வெள்ளம் மத்திய ஜாவா தீவில் ஜெங்கோட் என்கிற இடத்தில் நேற்று (பிப்ரவரி 06, சனிக்கிழமை) ஏற்பட்டிருக்கிறது. வெள்ள நீரில் க்ரிம்சன் என்ற சிவப்பு நிறச் சாயம் கலந்துவிட்டது.
பெகலோங்கன் நகரத்தின் தெற்குப் பகுதி, இந்தோனீசியாவின் பாரம்பரியமிக்க முறையில், ஆடைகளில் மெழுகிட்டு அதன் மூலம் ஆடைகளில் சாயமிடுவதற்கு மிகவும் பெயர் பெற்ற இடங்களில் ஒன்றாக விளங்குகிறது.
ஒட்டுமொத்த கிராமத்தையம் சூழ்ந்துள்ள இந்த ரத்தச் சிவப்பு நிற நீரை படமெடுத்து ஆயிரக்கணக்கானோர் சமூக வலைதளங்களில் பதிவிட்டார்கள். இப்படி ரத்தச் சிவப்பு நிறத்தில் வெள்ள நீர் சூழ்ந்திருப்பதை, உள்ளூர் அரசு அதிகாரி ஒருவர் உறுதி செய்தார்.
"ஆடைகள் மீது சாயமிடும் படிக் என்கிற இந்தோனீசியாவின் பாரம்பரியமான முறையில் செயல்படும் தொற்சாலையில் இருக்கும் சாயங்கள் வெள்ள நீரில் கலந்ததால்தான் வெள்ளம் இப்படி நிறம் மாறியிருக்கிறது. மீண்டும் மழை நீருடன் சேரும் போது இந்த வண்ணம் காணாமல் போகும்" என டிமஸ் அர்கா யுதா என்பவர் ராய்ட்டர்ஸ் முகமையிடம் கூறியுள்ளார்.
பெகலோங்கனில் இருக்கும் நதிகள், இதற்கு முன்பும் இந்த படிக் தொழிற்சாலை சாயங்களால் நிறம் மாறியிருக்கின்றன. கடந்த மாதம் வேறு ஒரு கிராமத்தில் வெள்ளம் பச்சை நிறத்துக்கு மாறியது என ராய்ட்டர்ஸ் குறிப்பிடுகிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தோனீசியாவின் தலைநகரான ஜகார்தாவில் பொழிந்த அதிதீவிர மழையால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக 43 பேர் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது. இந்தோனீசியாவில் அடிக்கடி மழை வெள்ளம் ஏற்படுவது என்பது இயல்பான ஒன்று. கடந்த 2013ஆம் ஆண்டு இதே நாட்டில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பாதிப்பு குறித்து பலருக்கும் நினைவிருக்கலாம்.
மேற்கொண்டு மழை பொழியாமல் இருக்க, 'க்ளவுட் சீடிங்' எனப்படும் முறையில் சில ரசாயனங்களை மேகத்தில் செலுத்தப் போகிறார்கள் இந்தோனீசிய உள்ளூர் அதிகாரிகள்.
இந்தோனீசியாவில் சமீபத்தில்தான் ஒரு விமான விபத்து நடந்தது. அதனைத் தொடர்ந்து மழை வெள்ளம், எரிமலை வெடிப்பு என பல்வேறு மோசமான சம்பவங்கள் நடந்தன. இப்போது மீண்டும் மழை பொழிந்து வெள்ள நீர் ரத்தச் சிவப்பு நிறத்தில் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டு இருக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: