You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விவசாயிகள் போராட்டம்: 'செங்கோட்டையில் சீக்கிய கொடியை ஏற்றுவது உளவுத் துறைக்கு தெரியாதா?' - சிசிஜி
இந்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் குடியரசு தினத்தன்று விவசாயிகளின் டிராக்டர் பேரணியின்போது, பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் ஏற்பட்டன.
இதுகுறித்து இந்திய அரசுப் பணியில் இருந்து ஓய்வுபெற்ற அரசு உயர் அதிகாரிகள், மத்திய அரசின் கவனத்துக்குத் `திறந்த அறிக்கை' ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இந்திய மற்றும் மாநில ஆட்சிப் பணிகளில் உயர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ், ஐ.எஃப்.எஸ் உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களை ஒருங்கிணைத்து `அரசியல்சாசன வழி நடக்க வலியுறுத்தும் குழு' (constituition conduct group) என்ற ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்தக் குழுவினர் மத்திய அரசுக்குக் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திறந்த மடல் ஒன்றை எழுதினர். இந்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக அந்தக் கடிதம் எழுதப்பட்டிருந்தது. அந்த அறிக்கையில், `கடந்த டிசம்பர் 8ஆம் தேதி, விவசாயிகள் கூட்டமைப்புகளுக்கும் இந்திய அரசுக்கும் இடையிலான பலகட்டப் பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து நாடு தழுவிய முழு அடைப்பு ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
நாங்கள் இந்த மூன்று சட்டங்களில் இருக்கும் நன்மை தீமைகளைப் பற்றிப் பேச விரும்பவில்லை, ஏனென்றால் இந்தச் சட்டங்களே நம் அரசியல் சாசனத்துக்கு எதிரானவை. எனவே அரசியல் சாசனத்துக்கு எதிரான மத்திய அரசின் போக்கையும் ஜனநாயக விதிமீறல்களையும் குறித்து அதிகம் கவலை கொள்கிறோம்' எனத் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இந்திய குடியரசு நாள் டிராக்டர் பேரணியின்போது ஏற்பட்ட வன்முறைகளைப் பற்றியும் அதற்குப் பிறகான வழக்குகளைப் பற்றியும் கடந்த வெள்ளிக்கிழமையன்று மீண்டும் `திறந்த அறிக்கை' ஒன்றை இந்த அமைப்பினர் வெளியிட்டுள்ளனர். இந்த அறிக்கையில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகளான நஜீப் ஜங், அருணா ராய், பாலச்சந்திரன், இந்திய காவல் பணியின் மூத்த அதிகாரியும் மாநில ஆளுநராகப் பணியாற்றியவருமான பெரைய்ரா உள்ளிட்ட 75 பேர் கையொப்பமிட்டுள்ளனர்.
விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்து எழுதப்பட்ட இந்த திறந்த அறிக்கை குறித்து பிபிசி தமிழுக்காக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரனிடம் பேசினோம்.
கே: விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து `திறந்த அறிக்கை' ஒன்றை சிசிஜி குழு வெளியிட்டுள்ளது. இந்தக் குழுவின் நோக்கம் என்ன?
ப: இந்திய மற்றும் மாநில அரசுகளின் பணியில் இருந்து ஓய்வு பெற்ற நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் இக்குழுவில் உள்ளனர். `நாட்டின் நிர்வாகம், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி மட்டுமே நடைபெற வேண்டும்' என்று சுட்டிக் காட்டக் கூடிய குழுவாக இது உள்ளது. எந்தவொரு அமைப்பையோ அரசியல் கட்சியையோ சாராமல், நடுநிலை, ஒருபுறம் சாராமை, இந்திய அரசமைப்புச் சட்டத்தின்மீது அழுத்தமான பற்று ஆகிய மூன்றையும் அடிப்படைக் கொள்கைகளாக வைத்து இயங்கி வருகிறோம்.
கே : விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டதன் பின்னணி என்ன?
ப: மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தைத் தொடங்கிய உடனே, டிசம்பர் 20ஆம் தேதி அவர்களுக்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தோம். நமது குடியரசு தினமான ஜனவரி 26 அன்று நடந்த நிகழ்வுகளைப் பார்த்த பிறகு, விவசாயிகள் மீது பழிபோடக் கூடிய சூழலை அரசு உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்தோம். அதன் தொடர்ச்சியாக, தேசத்துரோக குற்றச்சாட்டின்கீழ் விவசாயிகள் மீதும் பத்திரிகைகள் மீதும் வழக்குகள் பதியப்பட்டதைப் பார்க்க முடிந்தது. டில்லியை ஓர் அரண் மிகுந்த கோட்டையாக அரசு மாற்றிக் கொள்ள முயற்சி செய்வதைப் பார்த்தவுடன் மீண்டும் ஓர் அறிக்கையை வெளியிட வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
கே: எந்த வகையில் என விளக்க முடியுமா?
ப : விவசாயிகள் போராட்டத்தை இந்திய அரசு எதிர்கொண்ட விதம் சரியில்லை. அரசுடன் மோதல் ஏற்படுத்தும் விதத்தில் இவர்கள் வந்திருக்கிறார்கள் என்பது போல அரசியல் சார்பற்ற விவசாயிகளை நடத்தினர். பொறுப்பற்றுப் போராடும் ஓர் எதிர்க் கட்சியை தோற்கடிப்பதற்கு ஆளும்கட்சி என்னென்ன யுக்திகளை மேற்கொள்ளுமோ, அப்படிப்பட்ட அணுகுமுறையை விவசாயிகள் போராட்டத்திலும் அரசு கையாண்டது. இது எங்களுக்கு வருத்தத்தையளித்தது. விவசாயிகள் போராட்டத்தை ஒரு மாநிலப் போராட்டமாகவும், ஒரு மதத்தைச் சேர்ந்தவர்களின் போராட்டமாகவும் சித்திரிக்க முயன்ற அரசின் பார்வை வருந்தத்தக்கது. இதனால் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படாது என்பது எங்களின் தீர்மானமான முடிவு.
கே: குடியரசு தினநாள் டிராக்டர் பேரணியின்போது ஏற்பட்ட வன்முறையை எப்படிப் பார்க்கிறீர்கள்?
ப : குடியரசு தினநாள் அன்று நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாகப் பேசிய விவசாயிகள், `எந்தெந்தப் பாதைகளில் எல்லாம் போராட்டம் நடத்தலாம் எனத் தீர்மானிக்கப்பட்டதோ அந்த வழிகளில் எல்லாம் டெல்லி காவல்துறை தடைகளை ஏற்படுத்தியது. அதனால் சில இடங்களில் வேறு பாதையில் செல்லும் நிர்பந்தம் ஏற்பட்டது' என்கிறார்கள். இதற்கு மத்திய அரசு எந்தப் பதிலையும் தெரிவிக்கவில்லை.
இரண்டாவது, குருத்துவாரா கொடியை செங்கோட்டையில் பறக்கவிட்ட காணொலியை நாம் அனைவரும் பார்த்தோம். எங்கள் கேள்வியெல்லாம், இப்படியெல்லாம் சம்பவங்கள் நடக்கலாம் என மத்திய உளவுத்துறைக்குத் தெரியாமலேயே போய்விட்டதா.
அப்படியொரு நிகழ்வு நடக்கும்போது இதனை முறியடிக்கும் வல்லமை காவல்துறைக்கு இல்லாமலா இருந்தது. அந்தக் கொடியை ஏற்றும் வரையில் அவர்கள் ஏன் காத்திருந்துவிட்டு அதன்பின் நடவடிக்கை எடுத்தார்கள்? இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இந்திய அரசு, டெல்லி காவல்துறை மீதும் உள்துறை அமைச்சகத்தில் உள்ளவர்கள் மீதும் பாதுகாப்பு அமைச்சகத்தில் உள்ளவர்கள் மீதும் ஏதேனும் நடவடிக்கை எடுத்துள்ளதா?
மூன்றாவதாக செங்கோட்டை மற்றும் சில இடங்களில் அசம்பாவிதங்கள் ஏற்பட்டதை டெல்லி காவல்துறை வீடியோ எடுத்ததை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்தனர். அந்தவகையில் பேரணியை முழுமையாகக் காவல்துறை வீடியோ பதிவு செய்திருக்கும்.
"பல இடங்களில் அமைதியான எங்கள் ஊர்வலத்தை பூத்தூவி மக்கள் வரவேற்றார்கள்" என்று விவசாயிகள் சொல்கிறார்கள். அனைத்து ஊர்வல வீடியோக்களையும் டெல்லி காவல்துறை ஏன் வெளியிடவில்லை? மொத்தம் எத்தனை பேர் இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபட்டார்கள் என்பதை அறிய டெல்லி காவல்துறை முழுமையான காணொலியை வெளியிடலாமே?
மேலும், குடியரசு தினச் சம்பவத்துக்குப் பிறகு சிங்கூர் எல்லையில் அமைதியாகப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த விவசாயிகள் மீது ஓர் அராஜகக் கும்பல் தாக்குதல் நடத்தியது. அங்கிருந்த காவலர்கள் உடனடி நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை? காவலரின் தடியைப்பிடுங்கி ஓர் அராஜகவாதி விவசாயி ஒருவரை அடித்த காட்சியை ஓர் ஆங்கில ஊடகம் ஒளிபரப்பியது.
தவிர்க்கப்பட வேண்டிய, தவிர்த்திருக்க கூடிய இத்தகைய நிகழ்வுகள் வேதனைக்குரியவை. மேலும், அங்கே குடிநீர், மின்வசதி, இணையம் உள்ளிட்ட வசதிகள் தடை செய்யப்பட்டன. இந்திய எல்லைகளில்கூடப் பார்க்க முடியாத அளவுக்கு சாலைகளில் ஆணிகள் அறையப்பட்டன.
விவசாயிகள் டெல்லிக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக இரும்புக் கம்பிகள் சுற்றப்பட்ட தடுப்புகளை அமைத்திருக்கிறார்கள். எந்த நாடுகளுடன் நமக்கு விரோதம் இருக்கிறதோ, அதன் எல்லைகளில்கூட இப்படிப்பட்ட தடுப்புகளை நாம் அமைக்கவில்லை. சட்டப்பூர்வ எதிர்ப்புகளை வெளிப்படுத்துகிறவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை என்பது ஜனநாயகத்தின் குரல் வளையை நெரிப்பதைப் போல் இருப்பதை நாங்கள் பார்க்கிறோம்.
கே: சிசிஜி குழுவின் கோரிக்கைகள் என்ன?
ப: விவசாயிகள் மீதும் ஊடகங்கள் மீதும் பதியப்பட்ட தேசவிரோதக் குற்றச்சாட்டு வழக்குகளை உடனே திரும்பப் பெற வேண்டும்; சட்டவிரோதக் காரியத்தில் ஈடுபட்டவர்களைத் தவிர, மற்ற விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்; அனைத்து விவசாயிகளையும் ஒட்டுமொத்தமாக `காலிஸ்தானியர்கள்', `தேச விரோதிகள்' எனக் கூறப்படுகின்ற பொய்ப் பிரசாரங்களை நிறுத்த வேண்டும்.
அப்போதுதான், `அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம்' என்ற நம்பிக்கை விவசாயிகளுக்குப் பிறக்கும். மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களும் இந்திய அரசியலமைப்புக்கு விரோதமான சட்டங்களாகும். ஏனென்றால், மாநிலங்களின் கட்டுப்பாட்டின்கீழ் வரக்கூடிய துறையில் மத்திய அரசு சட்டம் இயற்றியதே தவறானது. இதனை ரத்து செய்துவிட்டு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் பிரச்னை தீரும் என நாங்கள் நம்புகிறோம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: