You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: ஜெயலலிதா தோழி சசிகலா, தினகரன் தமிழகத்தில் கலவரத்தை தூண்டுவதாக அதிமுக அமைச்சர்கள் புகார் - தமிழக அரசியல்
தமிழகத்தின் அமைதியை குலைப்பதற்காக சசிகலா, தினகரன் சதித் திட்டம் தீட்டுவதாகவும் அவர்கள் தமிழகத்தில் கலவரத்தை தூண்டுவதாகவும் கூறி அதிமுக மூத்த அமைச்சர்கள் தமிழக காவல்துறை தலைவரிடம் மனு கொடுத்துள்ளனர்.
ஆனால் அமைச்சர்களே சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க ஏதாவது செய்வார்களோ என்ற அச்சம் இருப்பதாக அமமுக பொது செயலாளரும் சசிகலாவின் உறவினருமான டி.டி.வி தினகரன் எதிர்வினை ஆற்றியுள்ளார்.
'100 பேர் மனித வெடிகுண்டு'
கடந்த வாரம் சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை முடித்து சசிகலா வெளியேறினார். அவரது காரில் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது சர்ச்சையாக மாறியது. அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்த கூடாது என்றும் தமிழகத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் சசிகலா, தினகரன் செயல்படுகின்றனர் என்றும் கூறி டிஜிபியிடம் இரண்டாவது முறையாக புகார் கொடுத்ததுள்ளனர்.
டிஜிபியை சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்கள் குழுவில் அமைச்சர் சி.வி.சண்முகம், ஜெயக்குமார், தங்கமணி உள்ளிட்டோர் இருந்தனர்.
புகார் குறித்து பேசிய அமைச்சர் சண்முகம், ''டிஜிபியிடம் இரண்டு நாட்களுக்கு முன்னதாக கொடுத்தோம். அதிமுகவின் கொடியை சசிகலா பயன்படுத்துவதற்கு உரிமை இருப்பதாக கூறியிருந்தார். அதற்காக மனு கொடுத்தோம். தற்போது, பெங்களூருவில் ஊடகத்தில் பேசியுள்ள சசிகலா, தினகரன் ஆதரவாளர்கள், அவர்களில் 100 பேர் மனித வெடிகுண்டாக மாறி தமிழகம் வரப்போவதாக கூறியுள்ளார்கள். அவர்கள் தமிழகத்தின் அமைதியை குலைக்கும் வகையில் செயல்படுகிறார்கள். அவர்களால் பொது மக்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்பட இருக்கிறார்கள். அவர்கள் தீட்டியுள்ள சதித் திட்டத்தை தடுக்க வேண்டும் என்பதற்காக புகார் கொடுத்திருக்கிறோம்,''என்றார்.
''அதிமுகவின் சின்னமான இரட்டை இலை யாருக்கு சொந்தம் என்ற விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் தீர்க்கப்பட்டுவிட்டது. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இடம்பெற்றுள்ள அதிமுகவுக்குத்தான் இரட்டை இலை சின்னம் சொந்தம் என தீர்ப்பு வந்தது. அதோடு அந்த சின்னத்தில் இடைத் தேர்தலில் போட்டியிட்டோம். சசிகலா இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்துவது சட்டப்படி தவறாகும். அவர் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக செயல்பட்டுள்ளார் என்பதால் டிஜிபியிடம் மனு கொடுத்துள்ளோம்,'' என்றார் சி.வி.சண்முகம்.
'அமைச்சர்களுக்கு பதற்றம்' - தினகரன் பதில்
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள டிடிவி தினகரன், "அமைச்சர்கள் ஓரிரண்டு பேர் ஏன் இந்த அளவுக்கு பதற்றம் அடைகிறார்கள் என்று தெரியவில்லை," என்று கூறியுள்ளார்.
தாம் பேசியதை திரித்து அமைச்சர்கள் உண்மைக்கு புறம்பாக பேசி வருவதாகவும், இவர்களே சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க எதையாவது செய்துவிட்டு ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் மீது பழி போட சதி செய்கிறார்களோ என்றும் சந்தேகம் ஏற்படுவதாக தினகரன் தெரிவித்துள்ளார்.
அதிமுக மீதான உரிமை தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதை வசதியாக மறைத்துவிட்டு இவர்கள் பேசுகிறார்கள் என்றும் தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
பிற செய்திகள்:
- 'சக்கா ஜாம்' என்றால் என்ன? இந்த போராட்டம் எங்கு, எப்போது நடைபெறும்?
- "பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தால் சமூக ஊடக கணக்குகள் சரிபார்க்கப்படும்" - புதிய அறிவிப்பால் சர்ச்சை
- "பிரதமர் மோதியை கொல்ல 5 கோடி ரூபாய்" - ஃபேஸ்புக்கில் பதிவிட்டவர் கைது
- அர்ச்சனா காமத்: டேபிள் டென்னிசில் சர்வதேச அரங்கில் கோலூச்சும் இந்திய வீராங்கனை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: