"பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தால் சமூக ஊடக கணக்குகள் சரிபார்க்கப்படும்" - புதிய அறிவிப்பால் சர்ச்சை

பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு அனுமதி வழங்குவதற்கு முன்பு அவர்களின் சமூக ஊடக நடவடிக்கைகளை ஆராய்வதற்கு உத்தராகண்ட் காவல்துறை முடிவு செய்துள்ளதாக பிடிஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள உத்தராகண்ட் டிஜிபி அசோக் குமார், சமூக ஊடக தளங்களில் பெருகிவரும் தவறான பயன்பாட்டை நிறுத்த பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களின் ஆன்லைன் நடத்தை ஆராயப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, உத்தராகண்ட் மாநிலத்தின் காவல்துறை இயக்குநர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களின் சமூக ஊடக நடத்தைகளை, சரிபார்ப்பு செயல்முறையின் ஒரு பகுதியாக ஆய்வு செய்ய உத்தராகண்ட் காவல்துறை முடிவு செய்திருந்தது.

இந்த முடிவை ஆதரிக்கும் வகையில் பிடிஐ முகமையிடம் பேசிய, உத்தராகண்ட் டிஜிபி அசோக் குமார், சமூக ஊடக தளங்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை தேவை என்று கூறினார். மேலும், பாஸ்போர்ட் சட்டத்தில் ஏற்கனவே உள்ள ஒரு விதிமுறையை அமல்படுத்துவதற்கு ஆதரவாக மட்டுமே பேசியதாகக் கூறிய அவர், "புதிய அல்லது கடுமையான" விதிமுறை எதையும் அறிமுகப்படுத்தவில்லை என்று மேலும் கூறினார்.

"பாஸ்போர்ட் சட்டத்தில் தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் எவருக்கும் பாஸ்போர்ட் வழங்கப்படக் கூடாது என்று ஒரு விதி உள்ளது. நான் அதை அமல்படுத்துவதற்கு ஆதரவாக மட்டுமே பேசியுள்ளேன்" என்று அசோக் கூறியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"நமது நாட்டின் அரசமைப்பால், தேச விரோத நடவடிக்கைகள் என்று வரையறுக்கப்பட்டுள்ள விடயங்களுக்கு எதிராக ஒரு காவல்துறை அதிகாரி என்ற முறையில் நான் எதிராக நிற்கிறேன்."

டெல்லியில் நடைபெற்ற விவசாயிகளின் டிராக்டர் பேரணிகளின்போது சமூக ஊடகம் பயன்படுத்தப்பட்ட விதம், இந்த முடிவுக்கு வழிவகுத்திருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

"சமூக ஊடகங்களில் வளர்ந்து வரும் தவறான பயன்பாட்டை மட்டுப்படுத்தவும், பயனர்கள் அதிக பொறுப்புடன் இருக்க வலியுறுத்தவும் இதுபோன்ற கட்டுப்பாடுகள் அவசியம்" என்று அவர் கூறினார்.

பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை ஏதாவது பதிவு செய்யப்பட்டுள்ளதா, இல்லையா என்பதை மட்டுமே காவல்துறையினர் இதுவரை சோதனை செய்து வரும் நிலையில், இந்த முடிவு புதிய விவாதத்தை கிளப்பி உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக இந்தியாவின் மற்ற மாநிலங்களின் காவல்துறை குறித்த நிலைப்பாடு இன்னும் தெரியவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: