You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாஸ்போர்ட் குறித்த 13 சுவாரஸ்யமான தகவல்கள்
நீங்கள் உலகத்தின் பல்வேறு பகுதிகளைச் சுற்றிப்பார்க்க கதவுகளை திறந்துவிட உங்களுக்குத் தேவையான முக்கியமான ஆவணம் பாஸ்போர்ட்.
பாஸ்போர்ட்டுக்கு நிறைய சுவாரஸ்யமான வரலாறு உண்டு. சில சுவாரஸ்யமான தகவல்களை உங்களுக்குத் தொகுத்துத் தருகிறோம்.
1. ஸ்காண்டிநேவியன் பாஸ்போர்ட்டில் நாதர்ன் லைட்ஸ்
நீங்கள் உங்களது ஸ்கேண்டிநேவியன் பாஸ்போர்ட் மீது புற ஊதாக்கதிர்கள் வெளிச்சத்தைப் பாய்ச்சினால் வானவில் போன்று வானில் வெவ்வேறு வண்ணங்களை கொண்டிருக்கும் நாதர்ன் லைட்ஸை காகித சுவடுகளில் பார்க்க முடியும்.
2. பைபிள்காலத்தில் இருந்த பாஸ்போர்ட்
நெஹேமியா புத்தகத்தில் பாரசீகத்தின் அரசர் ஒன்றாம் அர்டாக்செர்செக்ஸ் யூதேயா வழியாக அவர் பாதுகாப்பாக பயணம் செய்வதற்கு கடிதம் ஒன்றை வழங்கினார். அது தான் முதல் பாஸ்போர்ட்.
3.பாஸ்போர்ட்டில் புகைப்படம் வந்தது எப்போது?
முதல் உலகப்போர் துவங்கிய பிறகுதான் பாஸ்போர்ட்டில் புகைப்படம் இருக்க வேண்டியது அவசியமானது. ஜெர்மனிக்காக உளவு வேலை பார்த்த ஒருவர் பிரிட்டனுக்குள் ஒரு போலி அமெரிக்க பாஸ்போர்ட் பயன்படுத்தி நுழைந்தார். இதையடுத்து பாஸ்போர்ட்டில் புகைப்படம் நிச்சயம் தேவை எனும் நிலை உண்டானது.
4.இளைத்துவிட்டீர்களா? புது பாஸ்போர்ட் எடுங்கள்
அமெரிக்காவில் நீங்கள் உங்களது எடையை குறைத்தாலோ அல்லது அதிகரித்தாலோ பாஸ்போர்ட்டில் புது புகைப்படத்தை புதுப்பிக்க வேண்டியது அவசியம்.
முக அறுவை சிகிச்சை செய்துகொண்டாலோ அல்லது முகத்தில் பெரிய அளவில் டாட்டூ குத்திக்கொண்டாலோ நீக்கினாலோ அல்லது முகத்தின் எந்தவொரு பகுதியிலாவது துளையிட்டு அணிகலன்களை அணிந்தாலோ (மூக்குத்தி, தோடு போட்டுக்கொள்வது) கூட நீங்கள் பாஸ்போர்ட்டில் புது புகைப்படத்தை புதுப்பிக்க வேண்டும்.
5.குடும்ப புகைப்படமும் ஏற்றுக்கொள்ளப்பட்டது
பாஸ்போர்ட் அறிமுகப்படுத்தப்பட்ட ஆரம்ப காலகட்டங்களில் உங்களுக்கு பிடித்த எந்தவொரு புகைப்படத்தையும் நீங்கள் பாஸ்போர்டுக்காக தரலாம். குடும்ப குழுக்களோடு இருக்கும் புகைப்படங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
6. காலாவதியாவதற்கு ஆறு மாதம் முன்னதாக பாஸ்போர்ட்டை புதுப்பியுங்கள்
காலாவதி ஆகும் தேதி நெருங்கும் சமயத்தில் அயல்நாட்டுக்கு பயணம் செய்யத் திட்டமிடாதீர்கள். ஏனெனில் ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளில் நீங்கள் உள்ளே நுழைந்ததும் உங்களது பாஸ்போர்ட்டில் காலாவதி தேதிக்கு குறைந்தபட்சம் 90 நாட்களாவது மீதமிருக்கிறதா என்பதை பரிசோதிப்பார்கள்.
ஆனால் பாஸ்போர்ட் காலாவதி ஆவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பாகவே பாஸ்போர்ட்டை புதுப்பிப்பது நல்லது. ஏனெனில் சீனா, இந்தோனீசியா, ரஷ்யா, சௌதி அரேபியா மற்றும் சில நாடுகளில் ஆறு மாதங்களாவது பாஸ்போர்ட் செல்லுபடியாக வேண்டியது அவசியம்.
7. குயின்ஸ்லாந்து வழியாக ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய பாஸ்போர்ட் தேவையில்லை
ஆம். ஆனால் நீங்கள் பப்புவா நியூ கினியாவில் உள்ள ஒன்பது பிரத்யேக கடற்கரை கிராமங்களைச் சேர்ந்தவர்களில் ஒருவராக இருந்தால் மட்டுமே அது சாத்தியம்.
பப்புவா நியூ கினியா சுதந்திரம் பெற்றபோது உண்டான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக பாஸ்போர்ட் இல்லாமல் இந்த ஒன்பது கிராமத்தில் வசிப்பவர்கள் ஆஸ்திரேலியா செல்ல முடியும்.
8. வத்திக்கானில் கட்டாயமல்ல
கத்தோலிக்க திருச்சபை அமைந்துள்ள வத்திக்கானில் குடிவரவு கட்டுப்பாடு இல்லை. ஆனால் போப் வத்திக்கானின் நம்பர் 1 பாஸ்போர்ட்டை வைத்திருக்கிறார்.
9.பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு பாஸ்போர்ட் இல்லை
அமெரிக்க வெளியுறவுத்துறையின் அறிக்கைப்படி 32.13 கோடி அமெரிக்கர்களில் 12.15 கோடி பேரிடம்தான் பாஸ்போர்ட் உள்ளது.
10. டொங்காவில் பாஸ்போர்ட் விற்பனைக்கு
டொங்காவில் பாஸ்போர்ட் சுமார் 20 ஆயிரம் டாலர்களுக்கு விற்கப்படுகிறது. காலஞ்சென்ற பாலினேசிய அரசர் நான்காம் டவுஃபா அஹாவு டொங்கன் பாஸ்போர்ட்டை அந்நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்லாதவர்களுக்கு விற்றுள்ளது. நாட்டின் வருவாயை உயர்த்த இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
11. பாஸ்போர்ட்டில் படம் பார்க்கலாம்
விமான நிலையத்தில் சோர்வாக உட்கார்ந்திருக்கீர்களா? உங்களுக்கு ஃபின்லாந்து அல்லது ஸ்லோவேனியா பாஸ்போர்ட் இருந்தால் கொஞ்சம் ஜாலியாக பொழுது போக்கலாம்.
இந்த பாஸ்போர்ட்களில் உள்ள பக்கங்களை வேகமாக திருப்புவதன் மூலம், ஒவ்வொரு பக்கங்களின் கீழும் படங்கள் இருப்பதால் அவை உங்களுக்கு ஒரு நகரும் படத்தை பார்ப்பது போன்ற வாய்ப்பைத் தரும்.
12. நிகராகுவா பாஸ்போர்டை போலியாக தயாரிப்பது கடினம்
நிகராகுவா பாஸ்போர்ட்டில் ஹோலோகிராம், வாட்டர்மார்க் உள்ளிட்ட வெவ்வேறான 89 பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. உலகிலேயே முறைகேடு செய்வதற்கு கடினமானதொரு ஆவணமாக நிகராகுவான் பாஸ்போர்ட் கருதப்படுகிறது.
13.பிரிட்டன் அரசிக்கு பாஸ்போர்ட் கிடையாது
அரசி இரண்டாம் எலிசபத் பாஸ்போர்ட் எடுக்க வேண்டியது குறித்து கவலைப்படத் தேவையில்லை. நாட்டின் குடிமக்களுக்கு பாஸ்போர்ட் வழங்க அனுமதி வழங்கும் அரசிக்கு பாஸ்போர்ட் தேவையே இல்லை. எனினும், ரகசிய ஆவணங்கள் தேவை.
அரசியின் தூதுவர்கள் உலகம் முழுவதும் இந்த ரகசிய ஆவணத்தை கொண்டு சேர்க்கும் பணியைச் செய்வார்கள். இந்த ஆவணங்கள் பாஸ்போர்ட் போல செயல்படும்.
இது போன்ற பாஸ்போர்ட்களில் 15 மட்டுமே உள்ளன என கூறப்படுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்