You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தூத்துக்குடி: ஏரல் உதவி ஆய்வாளர் கொலை குற்றத்தில் கைதானவரின் மனைவி உயிரிழப்பு
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலுவைச் சரக்கு வாகனத்தால் இடித்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முருகவேல் என்பவரின் மனைவி செல்வ லட்சுமி தற்கொலைக்கு முயன்று தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (சனிக்கிழமை) மாலை உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலு கடந்த 31ஆம் தேதி இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது வாழவல்லான் பகுதியில் இருசக்கர வாகன பழுது நீக்கும் கடை வைத்துள்ள முருகவேல் என்பவர் மது போதையில் சரக்கு வாகனத்தை கொண்டு உதவி ஆய்வாளர்பாலுவை இடித்து கொலை செய்தார்.
மறுநாள் காலை விளாத்திகுளம் நீதிமன்றத்தில் சரணடைந்த முருகவேலை காவல்துறையினர் கைது செய்து தூத்துக்குடி சிறையில் அடைத்தனர்.
முன்னதாக கடந்த 30ந் தேதி இரவு மது போதையில் இருந்த முருகவேல் அவரது மனைவி செல்வ லட்சுமியிடம் தகராறு செய்துள்ளார். இதனால்மனமுடைந்த செல்வ லட்சுமி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார்.
இதனையடுத்து செல்வ லட்சுமியை மீட்ட உறவினர்கள் சிகிச்சைக்காக ஏரல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். சிகிச்சை பெற்று வந்த செல்வலெட்சுமி மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் இன்று மாலை முருகவேலின் மனைவி செல்வ லட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
"பிரதமர் மோதியை கொல்ல 5 கோடி ரூபாய்" - ஃபேஸ்புக்கில் பதிவிட்டவர் கைது
புதுச்சேரியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி உள்பட தலைவர்கள் சிலர் குறித்து ஃபேஸ்புக்கில் அச்சுறுத்தும் வகையில் பதிவிட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி மணவெளி பகுதியைச் சேர்ந்த தங்கதுரை (வயது 43), வாகன ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த சத்தியானந்தம் (வயது 45) என்பவர் மீது இரண்டு நாட்களுக்கு முன்பு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அதில், 'சத்தியா சத்தியா' என்ற பெயரில் இயங்கி வரும் சந்தியானந்தம் என்பவருக்குச் சொந்தமான ஃபேஸ்புக் பக்கத்தில், 'மோதியை கொல்ல தயார். விலை 5 கோடி. கொடுக்க யார் தயார்?' என்று கேட்டுப் பதிவிட்டிருந்தார். மேலும் புதுச்சேரியை சேர்ந்த சில சமுதாய தலைவர்களையும் இழவுப்படுத்தி பதிவு செய்திருந்தார். சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த இந்த பதிவு, பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக தங்கதுரை அளித்த புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து பிரதமர் குறித்து தவறாகப் பதிவிட்டிருந்த 'சத்தியா சத்தியா' என்ற ஃபேஸ்புக் பக்கத்தை பயன்படுத்தி வரும் சத்தியானந்தம் மீது அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பின்னர் அரியாங்குப்பம் காவல் ஆய்வாளர் புருஷோத்தமன் தலைமையில் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. காவல் துறையின் தொடர் விசாரணையில், சத்தியானந்தம் பிரதமர் மட்டுமின்றி பல்வேறு அரசியல் தலைவர் குறித்தும் தவறான கருத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வந்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. பிறகு சந்தியானந்ததை கைது செய்த காவல் துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் புதுச்சேரி காலப்பட்டு மத்தியச் சிறையில் அடைத்தனர்.
முன்னதாக, பிரதமர் மோதி மற்றும் அரசியல் தலைவர்கள் பற்றி தவறாகப் பதிவிட்டிருந்த அனைத்து பதிவுகளையும் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து காவல்துறையினர் நீக்கினர்.
"சமூக ஊடகத்தில் இதுபோன்ற பதிவிட்டு, இரு குழுக்களுக்கு இடையே பிரச்சனையை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட சத்தியானந்தம் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் 505 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது," என அரியாங்குப்பம் காவல் ஆய்வாளர் புருஷோத்தமன் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: