Monster Hunter: சினிமா விமர்சனம் - டோனி ஜா, மிலா ஜோவோவிச் நடித்துள்ள ஹாலிவுட் படம் எப்படி?

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

நடிகர்கள்: மிலா ஜோவோவிச், டோனி ஜா, ரான் பேர்ல்மேன்; இயக்கம்: பால் டபிள்யு.எஸ். ஆண்டர்சன்.

'மான்ஸ்டர் ஹன்டர்' என்ற வீடியோ கேமை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட படம் இது. நடிகராக மிலா ஜோவோவிச்சும் இயக்குநராக அவரது கணவர் பால் ஆண்டர்சனும் இணைந்து உருவாக்கியிருக்கும் ஐந்தாவது படம் இது.

வீடியோ கேமை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட படம் என்று சொன்ன பிறகு கதை என்று எதையும் எதிர்பார்க்கக்கூடாது.

அமெரிக்கா ராணுவ கேப்டனான நடாலி (மிலா ஜோவோவிச்), காணாமல்போன சில வீரர்களைத் தேடி ஒரு பாலைவனப் பகுதியில் ரோந்து செல்கிறாள். அப்போது ஏற்படும் ஒரு மணல் புயலில், வேறு ஒரு உலகத்திற்குள் சென்று விடுகிறாள்.

அங்கே இருக்கும் விசித்திரமான சில ராட்சச ஜந்துகள்தான் வீரர்கள் காணாமல் போனதற்குக் காரணம் எனத் தெரிகிறது. அந்த உலகில் முற்காலத்தைச் சேர்ந்த சில மனிதர்களும் இருக்கிறார்கள். இவர்களுடன் சேர்ந்த அந்த ராட்சச ஜந்துகளைக் கொன்றார்களா என்பதுதான் படம்.

இம்மாதிரி பிரம்மாண்டமான மிருகங்களைக் கொன்று மனிதர்களைக் காப்பாற்றும் படங்கள் எப்படியிருக்குமென நீங்கள் நினைக்கிறீர்களோ, அப்படியே இருக்கிறது இந்தப் படம்.

இம்மாதிரி மிருகங்களைக் கொல்வதற்கென்று ஏற்கனவே ஹாலிவுட்டில் நிரூபிக்கப்பட்ட வழிமுறைகள் இருக்கின்றன. மிருகத்தின் கண்களில் குத்துவது, வாய்க்குள் வெடிகுண்டைத் தூக்கிப் போடுவது, வயிற்றைக் கத்தியால் கிழிப்பது என அதே டெம்ப்ளேட்.

மிலா ஜோவோவிச்சின் ஆக்ஷன் அவ்வப்போது படத்தை ரசிக்க வைக்கிறது. இது தவிர, ஆக்ஷன் காட்சி ரசிகர்களுக்கென டோனி ஜாவும் இருக்கிறார்.

பதின்ம வயதுகளில் இருப்பவர்கள், ஏற்கனவே இம்மாதிரி படங்களைப் பார்க்காதவர்கள் இந்தப் படத்தை ரசிக்கலாம். ஆனால், மற்றவர்களுக்கு இது ரொம்பவும் பழைய படமாகத் தோன்றும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: