You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா தடுப்பூசி போடும் பணி ரஷ்யாவில் தொடங்கியது: ஸ்புட்னிக் V உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது
ஒரு வழியாக உலகின் ஏதோ ஒரு மூலையில் கொரோனா தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.
கோவிட்-19 நோய்க்கு தங்கள் நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஸ்புட்னிக் V தடுப்பூசி பயன்பாட்டுக்கு அனுமதி அளித்த ரஷ்யா, அதை உற்பத்தி செய்து தற்போது பொதுமக்களுக்கான பயன்பாட்டையும் தொடக்கிவிட்டது.
தலைநகர் மாஸ்கோவில், நோய்த் தொற்றும் இடர்ப்பாடு அதிகம் உள்ளவர்களுக்கு இந்த தடுப்பூசியை செலுத்தத் தொடங்கியுள்ளது ரஷ்யா.
ஸ்புட்னிக் V தடுப்பூசி ரஷ்யாவில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பதிவு செய்யப்பட்டது.
இது 95 சதவீதம் கொரோனோ தொற்றுகளைத் தடுக்கக்கூடியது என்றும், பெரிய பக்க விளைவுகள் ஏதும் இதனால் ஏற்படவில்லை என்றும் இந்த மருந்தை உருவாக்கியவர்கள் கூறுகிறார்கள். ஆனால், இன்னொரு பக்கம், பெரிய அளவிலான பரிசோதனைகளும் போய்க்கொண்டிருக்கின்றன.
இரண்டு டோஸ்கள் (இரண்டு முறை ஊசி போட்டுக் கொள்வது) செலுத்தும் வகையில் இந்த தடுப்பூசி வடிவமைக்கப்பட்டுள்ளது.
தற்போது முதல் டோஸ்தான் போடப்பட்டுவருகிறது. இந்த முதல் டோஸை போட்டுக் கொள்வதற்கு ஆயிரக்கணக்கானவர்கள் பதிவு செய்துகொண்டிருக்கிறார்கள்.
ஆனால், ரஷ்யாவால் எவ்வளவு உற்பத்தி செய்யமுடியும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
இந்த ஆண்டு முடிவில் 20 லட்சம் டோஸ்களை உற்பத்தியாளர்கள் தயாரித்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாஸ்கோ மாநகரில் 1 கோடியே 30 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். இவர்களில் பள்ளிகளில், சுகாதாரத் துறையில் வேலை செய்கிறவர்கள் மற்றும் சமூகப் பணியாளர்கள் ஆகியோருக்கு இந்த ஊசி போடப்படுவதாக மாநகர மேயர் செர்கெய் சோபியானின் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி அதிகம் கிடைக்க கிடைக்க, தடுப்பூசி பெறுகிறவர்களின் பட்டியல் நீளும் என்று அவர் கூறியுள்ளார்.
மாஸ்கோ நகரில் 70 இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. மேலே குறிப்பிட்ட அனுமதிக்கப்பட்ட தொழில்களைச் சேர்ந்த 18 முதல் 60 வயதுக்கு உட்பட்ட மாநகர வாசிகள் ஆன்லைனில் இலவசமாகப் பதிவு செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 30 நாள்களில் ஊசி போட்டுக்கொண்டவர்கள், கடந்த இரண்டு வாரங்களில் சுவாச நோய்த் தாக்கியவர்கள், சிலவகை நாள்பட்ட நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோருக்கு தடுப்பூசி போடுவதில்லை.
ஒவ்வொருவரும் இரண்டு முறை ஊசி போட்டுக்கொள்ளவேண்டும். முதல் முறை ஊசி போட்டபிறகு 21 நாள்கள் கழித்து இரண்டாவது ஊசி போட்டுக்கொள்ளவேண்டும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: