You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஃபைசர் பயோஎன்டெக் கொரோனா வைரஸ் தடுப்பூசி: உலகில் முதல் நாடாக அனுமதி வழங்கிய பிரிட்டன்
ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் பரவலான பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளது பிரிட்டன் அரசு.
இதன் மூலம் ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் தயாரித்த இந்தத் தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்த உலகின் முதல் நாடாகிறது பிரிட்டன்.
உடலில் செலுத்தப்பட்ட 95% பேருக்கு கோவிட்-19 தொற்றில் இருந்து பாதுகாப்பளிக்கும் இந்த கொரோனா வைரஸ் தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதி வழங்குவது பாதுகாப்பானது என்று பிரிட்டனின் ஒழுங்காற்று அமைப்பான எம்.ஹெச்.ஆர்.ஏ தெரிவித்துள்ளது.
அதிக முன்னுரிமை வழங்கப்படும் குழுக்களைச் சேர்ந்த மக்களுக்கு அடுத்த வாரம் முதல் இந்த கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படுவது தொடங்கும்.
இரண்டு டோஸ்களாக வழங்கப்படவேண்டிய இந்த தடுப்பூசியின் நான்கு கோடி டோஸ்களை பிரிட்டன் ஏற்கனவே ஆர்டர் செய்துள்ளது.
இது இரண்டு கோடி பேருக்கு கோவிட்-19 தொற்றுக்கான நோய் எதிர்ப்பாற்றலை உண்டாக்க போதுமானது.
வழக்கமாக தடுப்பூசி ஒன்று உற்பத்தி செய்ய உத்தேசிக்கப்பட்டு, ஆராய்ச்சி நிலையில் இருந்து பயன்பாடு வரை வருவதற்கு 10 ஆண்டுகள் வரை ஆகும்.
ஆனால் ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் தயாரித்துள்ள இந்த கொரோனா வைரஸ் தடுப்பூசி வெறும் பத்தே மாதங்களில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
இதுவரை உலகில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் மிகவும் குறைவான காலத்தில் பயன்பாட்டுக்கு வந்தது இந்தத் தடுப்பூசிதான்.
கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி தொடங்கப்பட்டாலும் கோவிட்-19 நோய் பரவலைக் கட்டுப்படுத்த சமூக விலகல், முகக்கவசம் அணிதல், அறிகுறிகள் உள்ளவர்களை மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் சுயதனிமைப்படுத்திக்கொள்ளுதல் உள்ளிட்ட விதிகளைக் கடைபிடிப்பது அவசியம் என வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஃபைசர் / பயோஎன்டெக் கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்படி இயங்கும்?
mRNA தடுப்பு மருந்து என்று வகைப்படுத்தப்பட்டுள்ள இந்தத் தடுப்பூசி கொரோனா வைரஸின் மரபணுக் குறியீட்டின் மிகமிகச் சிறு பகுதியைப் பயன்படுத்தி கோவிட்-19 தொற்றுக்கு எதிராக எவ்வாறு போரிட வேண்டும் என்றும், இந்தத் தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு ஆற்றலை எவ்வாறு வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் உடலுக்கு கற்பிக்கும்.
உலகெங்கும் mRNA வகை தடுப்பு மருந்துகள் இதுவரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு செலுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், பொது மக்களிடையே பரவலாகப் பயன்படுத்த இதுவரை அனுமதி வழங்கப்படத்தில்லை.
அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை.
இந்தத் தடுப்பு மருந்து செலுத்தப்படுபவர்களுக்கு மூன்று வார இடைவெளியில் இரண்டு டோஸ்கள் வழங்கப்பட வேண்டும்.
இந்த தடுப்பு மருந்து ஆறு நாடுகளில் 43 ஆயிரத்து 500 பேரிடம் பரிசோதிக்கப்பட்டது. மேலும் இது குறித்து எந்த பாதுகாப்பு அச்சங்களும் எழவில்லை.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்