கமலா ஹாரிஸ்: இனவெறி, பாலியல் ரீதியாக விமர்சிக்கும் 3 குழுக்கள் - என்ன செய்தது ஃபேஸ்புக்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜேம்ஸ் கிளேட்டன்
- பதவி, பிபிசி - வட அமெரிக்கா தொழில்நுட்ப செய்தியாளர்
சமீபத்தில் நடந்து முடிந்த அமரிக்க தேர்தலில், அந்நாட்டின் துணை அதிபராக தகுதி பெற்றுள்ள கமலா ஹாரிஸுக்கு எதிராக தனது தளத்தில் இனவெறி, வெறுப்புணர்வு மற்றும் பாலியல் ரீதியாக சில குழுக்களில் பதிவாகியிருந்த கருத்துகளை ஃபேஸ்புக் நிறுவனம் நீக்கியிருக்கிறது.
இது தொடர்பாக ஃபேஸ்புக்கின் கவனத்துக்கு கொண்ட சென்ற பிபிசி, கமலா ஹாரிஸுக்கு எதிராக விரும்பத்தகாத வகையில் அநாகரிக கருத்துகளை மூன்று குழுக்கள் தொடர்ச்சியாக பதிவிட்டு வருவதாக கூறியது.
பொதுவாக இதுபோன்ற கருத்துகள் தொடர்பான புகார்கள் தங்களுடைய கவனத்துக்கு வரும் முன்பே அவற்றில் 90 சதவீதத்தை நீக்கி விடுவதாக ஃபேஸ்புக் கூறுகிறது.
இந்த நிலையில், கமலா ஹாரிஸுக்கு எதிரான கருத்துகளை பதிவிடுவதற்காகவும், இனவெறி மற்றும் தவறான கண்ணோட்டத்தில் அவரை சித்தரிப்பதற்காகவுமே இந்த மூன்று ஃபேஸ்புக் பக்கங்களும் உருவாக்கப்பட்டதாக சமூக ஊடக கண்காணிப்பு தனியார் அமைப்பான "மீடியா மேட்டர்ஸ்" கூறுகிறது.
ஆனாலும், சம்பந்தப்பட்ட குழுக்களில் பதிவான கருத்துகளை நீக்கியதோடு நின்று கொண்ட ஃபேஸ்புக் நிறுவனம், அந்த பக்கங்கள் மீதோ அதை கையாளுவோர் மீதே எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த மீடியாமேட்டர்ஸ் சமூக ஊடக கண்காணிப்பு அமைப்பின் தலைவர் ஏங்கலோ காருசோன், "சர்ச்சைக்குரிய தகவல்களை தணிக்கையின்றி பதவிட முடிவதன் மூலம் ஃபேஸ்புக் விதிகளிலும் வழிகாட்டுதல்களிலும் எந்த அளவுக்கு ஓட்டைகள் உள்ளன என்பதை உணர முடிகிறது" என்று கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
சர்ச்சை விமர்சனங்கள் என்ன?
இந்த பக்கங்களில் ஒன்றில், கமலா ஹாரிஸ் அமெரிக்க குடியுரிமை பெற்றவரே கிடையாது. ஏனென்றால் அவரது தாய் ஒரு இந்தியர். அவரது தந்தை ஒரு ஜமைக்கன் என்று கூறப்பட்டிருந்தது.
மற்றொரு இடுகையில், ஜனநாயக கட்சியினர் நினைப்பது போல அவரு கருப்பினத்தவரே அல்ல என்று கூறப்பட்டிருந்தது. கமலா ஹாரிஸை இந்தியாவுக்கே நாடு கடத்த வேண்டும் என்று வேறு சில இடுகைகள் அந்த பக்கங்களில் வலியுறுத்தப்பட்டிருந்தன. இந்த அம்சங்களை அடிப்படையாக வைத்து கமலா ஹாரிஸுக்கு எதிரான விமர்சனங்களை அவரை இழிவுபடுத்தும் வகையில் சிலர் பதிவிடப்பட்டிருந்தனர்.
இதில் ஒரு ஃபேஸ்புக் பக்கம், சுமார் 4,000 பேரை உறுப்பினர்களாகக் கொண்டிருக்கிறது. மற்றொன்றில் 1,200 பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.
இது தவிர, கமலா ஹாரிஸை பாலியல் ரீதியில் தவறாக சித்தரிக்கும் சில கருத்துகளும் இடம்பெற்றிருந்தன. அவற்றை ஃபேஸ்புக் நீக்கியிருக்கிறது.
சர்ச்சை தகவல்களை நீக்கும் விவகாரத்திலும் வெறுப்புணர்வை தூண்டும் கருத்துகள் மீது நடவடிக்கை எடுக்கும் விவகாரத்திலும் ஃபேஸ்புக் போதிய அளவுக்கு அக்கறை காட்டுவதில்லை என்று சிவில் மனித உரிமை செயல்பாட்டாளர்களும் விளம்பரதாரர்களும் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதன் வெளிப்பாடாக, கடந்த ஆகஸ்ட் மாதம் நூற்றுக்கணக்கான நிறுவனங்கள், தங்களின் விளம்பரத்தை ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு அளிக்காமல் புறக்கணித்தன.

பட மூலாதாரம், Getty Images
அலட்சியம் காட்டுகிறதா ஃபேஸ்புக்?
ஆனால், கமலா ஹாரிஸ் விவகாரம் மட்டுமின்றி பொதுவாகவே வெறுப்புணர்வைத் தூண்டும் பதிவுகள் மீது நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டப்படுவதாகவும், புகார் கூறியபோதும் அவை கண்டுகொள்ளப்படுவதில்லை என்ற சர்ச்சையிலும் ஃபேஸ்புக் சிக்கியிருக்கிறது.
"ஆதாயத்துக்காக தூண்டப்படும் வெறுப்புணர்வு நடவடிக்கையை நிறுத்துங்கள்" என்ற பெயரில் ஒரு பிரசார இயக்கத்தை நடத்தி வரும் ரிஷத் ராபின்சன், "வெறுப்புணர்வு பயனர்களை தூண்டும் வகையில் சில பதிவுகளை அவர்களின் பக்கங்களில் இடம்பெறச் செய்யும் அல்காரிதம்களை ஃபேஸ்புக் உருவாக்கியிருக்கிறது" என்று கூறுகிறார்.
பயனர்களின் இடுகைகள் தணிக்கை தொடர்பாக ஃபேஸ்புக் சொந்தமாக நடத்தி வரும் சிவில் உரிமைகள் தணிக்கை பிரிவு, "சிவில் உரிமை சட்டங்களுக்கு பின்னடைவைத் தரும் வகையிலான சங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய கடுமையான முடிவுகளை எடுத்திருக்கிறோம்" என்று கடந்த ஆகஸ்ட் மாதம் கூறியது.
கடந்த வாரம் அமெரிக்க தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருந்த நாட்களில், வன்முறை மற்றும் தவறான தகவல்களை பரப்பும் வகையிலேயே ஃபேஸ்புக்கின் உள்நோக்க செயல்பாடுகள் இருப்பதாக அமெரிக்க அதிபராக தகுதி பெற்றுள்ள ஜோ பைடனுக்கு நெருக்கமான ஒருவர் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், ஜோ பைடனின் ஊடகப்பிரிவு துணை செயலாளர் பில் ரூஸ்ஸோ, "நமது ஜனநாயகம் இலக்கு வைக்கப்படுவதால், எங்களுக்கு பதில்கள் தேவை," என்று ஃபேஸ்புக் செயல்பாட்டை குறிப்பிடும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
பிற செய்திகள்:
- உலகின் கடைசி ஒரே வெள்ளை ஒட்டகச்சிவிங்கி உடலில் ஜிபிஎஸ் - எதற்கு?
- இந்தியாவை ஆண்ட கிழக்கிந்திய கம்பெனி - மனித துயரங்களில் குளிர் காய்ந்த வரலாறு
- பிச்சை எடுத்தாலும், கொடுத்தாலும் தண்டனை - இலங்கை போலீஸ்
- க்ரியா எஸ். ராமகிருஷ்ணன் காலமானார் - தமிழுக்கு அவரது பங்களிப்பு என்ன?
- ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற மறுக்கும் டிரம்ப்
- மருத்துவ தர வரிசைப் பட்டியல்: சாதித்து காட்டிய அரசு பள்ளி மாணவர்கள்
- பிகாரிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்ற கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ பற்றி தெரியுமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












