வியன்னா துப்பாக்கி சூடு: 6 இடங்களில் திடீர் தாக்குதல் - என்ன நடந்தது?
பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்! தேசிய, சர்வதேச மற்றும் தமிழ்நாடு சார்ந்த இன்றைய பல முக்கிய செய்திகளை இங்கே நீங்கள் தெரிந்து கொள்ளலாம். முக்கிய நிகழ்வுகளும், செய்தி முன்னேற்றங்களும் இங்கே பகிரப்படும்.

பட மூலாதாரம், Reuters
ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் ஆறு வெவ்வேறு இடங்களில் ஆயுததாரிகள் துப்பாக்கியுடன் வந்து தாக்குதல் நடத்தினார்கள். நடந்த சம்பவத்தில் தாக்குதலில் ஈடுபட்ட குழுவைச் சேர்ந்த ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
ஆஸ்திரியா ஆட்சித்துறைத் தலைவர் செபாஸ்டியன் குர்ஸ், "இந்த சம்பவத்தை வெறுப்பூட்டும் தீவிரவாத தாக்குதல்" என்று அழைத்துள்ளார். இந்த சம்பவத்தில் ஒரு துப்பாக்கிதாரி கொல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.
அந்த நகரில் பெரும்பாலான பகுதிகள் காவல்துறையால் சீல் வைக்கப்பட்டு மற்ற துப்பாக்கிதாரிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
வியன்னா நகர மேயர் இந்த சம்பவம் பற்றி கூறும்போது, இதுவரை 15 பேர் காயம் அடைந்ததாகவும் அதில் ஏழு பேர் கவலைக்கிடமாக உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
நகரின் மையப்பகுதியில் உள்ள தேவாலயத்துக்கு அருகே தாக்குதல் நடந்துள்ளது. ஆனால், துப்பாக்கிதாரிகள் அந்த ஆலயத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த வந்தார்களா என்பது இன்னும் தெளிவாகவில்லை.
ஆஸ்திரியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் கடுமையானதையடுத்து, அங்கு தேசிய அளவிலான கட்டுப்பாடுகள் நவம்பர் 2ஆம் தேதி அமலுக்கு வந்தன. இம்மாத இறுதிவரை அங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் அங்கு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நடந்த தாக்குதலை ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர். செக் குடியரசு நாட்டை இணைக்கும் ஆஸ்திரியா எல்லையிலும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

பட மூலாதாரம், Reuters
பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங், "தீவிரவாதத்தின் மிரட்டலுக்கு ஐரோப்பா பணிந்து விடக்கூடாது என்று தெரிவித்துள்ளார். பிரான்ஸில் சமீபத்தில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு வியன்னாவிலும் வெறுப்புணர்வுத் தீவிரவாதம் தலைதூக்கியிருக்கிறது. இது நமது ஐரோப்பா. நேற்று எங்களை தாக்கினர், இன்று எங்களுடைய நண்பரை தாக்கியுள்ளனர். இதை தொடர விடக்கூடாது" என்று தெரிவித்தார்.
ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்ல்ஸ் மிஷெல், "மக்களின் வாழ்க்கை மற்றும் மனித மாண்புகளுக்கு எதிராக நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதல் இது" என்று கூறினார்.
நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட், துப்பாக்கி சூடு சம்பவத்தை கொடூரமான தாக்குதல் என்றும் துயரமான இந்த தருணத்தில் வியன்னாவுக்கு ஆதரவாக தமது நாடு துணை நிற்கும் என்றும் தெரிவித்தார்.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், தீவிரவாத தாக்குதல்களால் கடும் அதிர்ச்சி ஏற்பட்டதாக தெரிவித்தார். தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் பிரிட்டன் துணை நிற்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

பிஹார் சட்டமன்ற தேர்தல்: 94 தொகுதிகளில் தொடங்கியது வாக்குப்பதிவு

பட மூலாதாரம், Getty Images
பிஹார் மாநில சட்டமன்றத்துக்கு இரண்டாம் கட்ட தேர்தல் செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த தேர்தல் 17 மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை தேர்தல் நடைபெறும்.
பிஹாரில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளுக்கான தேர்தல் மூன்று கட்டமாக நடக்கிறது. இதில் முதலாம் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 28ஆம் தேதி 16 மாவட்டங்களில் உள்ள 71 தொகுதிகளுக்கு நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து செவ்வாய்க்கிழமை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 17 மாவட்டங்களில் உள்ள 94 தொகுதிகளுக்கு நடக்கிறது. மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 7ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதில் 15 மாவட்டங்களில் உள்ள 78 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறும்.
இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் நவம்பர் 10ஆம் தேதி எண்ணப்படும்.
இரண்டாம் கட்ட தேர்தலில் 1,463 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள். எதிர்கட்சிகள் முன்னிறுத்திய முதல்வர் வேட்பாளர் தேஜாஸ்வி யாதவ், அவரது மூத்த சகோதரர் தேஜ் பிரதாப் யாதவ் உள்ளிட்ட பல முக்கிய அரசியல் பிரபலங்களின் தலைவிதியை இந்த வாக்குப்பதிவே தீர்மானிக்கவுள்ளது.
2015ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்ற தேர்தலின்போது ராஷ்ட்ரிய ஜனதா தளம், தனிப்பெரும்பான்மையுடன் தற்போது தேர்தல் நடக்கும் 94 இடங்களில் விளங்கியது. இந்த தொகுதிகளில் மட்டும் அந்த கட்சியின் வாக்குகள் சதவீதம் 45.3 ஆகும். இந்த தொகுதிகள் அனைத்தும் பின்தங்கியவை. 2015 தேர்தலில், ஆர்ஜேடி 33, ஜேடியு 30, பாஜக 20, காங்கிரஸ் 7, லோக் ஜன சக்தி 2, மற்றவர்கள் 2 என்ற வகையில் வெற்றி பெற்றனர்.
அந்த தேர்தலின்போது லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி மேற்கொண்டு மகா கூட்டணி என்ற பெயரில் தேர்தலை சந்தித்தது. ஆனால், 2017இல் அந்த கூட்டணியை முறித்த முதல்வர் நிதிஷ் குமார், 53 உறுப்பினர்களைக் கொண்டிருந்த பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சியை தக்க வைத்தார்.
இம்முறை நடக்கும் தேர்தலில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பாஜகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளது. அதற்கு எதிரான களத்தில் ஆர்ஜேடி மொத்தம் 144 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் 70 தொகுதிகளிலும், இடதுசாரிகள் 29 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
செவ்வாய்க்கிழமை நடக்கும் இரண்டாம் கட்ட தேர்தலில் 2.86 கோடி வாக்காளர்கள் வாக்குரிமை செலுத்த தகுதி பெற்றுள்ளனர்.
பிஹாரைத் தவிர இந்தியாவின் 10 பிற மாநிலங்களில் 54 இடங்களுக்கான இடைத்தேர்தலும் இன்று நடந்து வருகிறது.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் முதலாவதாக சட்டமன்ற தேர்தல் பிஹாரில்தான் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:
- கொரோனா வைரஸ்: உலகெங்கும் பாதிப்பு, பலி எண்ணிக்கை எவ்வளவு?
- கொரோனா வைரஸ்: உலகெங்கும் பாதிப்பு, பலி எண்ணிக்கை எவ்வளவு?
- India vs Pakistan: "கில்கிட் விஷயத்தில் இம்ரான் கான் எல்லை மீறக்கூடாது" - இந்தியா கடும் எச்சரிக்கை
- 'மக்களுடன்தான் கூட்டணி': மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன்
- கொரோனா அறிகுறி எப்போது வெளிப்படும்? யாரால் கோவிட் அதிகம் பரவும்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












